பதிவு செய்த நாள்
29
அக்
2019
10:10
தஞ்சாவூர், மன்னர் ராஜராஜசோழனின் 1034வது சதய விழா, வரும் நவ. 5ம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவில், பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலை கட்டிய, மாமன்னன் ராஜராஜசோழன், பிறந்த ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு 1034வது சதய விழா வரும் நவ.5ம் தேதி தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான நவ. 6ம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இரண்டு நாள்களும், பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்குச் சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. இதை முன்னிட்டு, பெரியகோவிலில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி, நடைபெற்றது. பந்தக் காலுக்குப் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவர் திருஞானம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி கமிஷனர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.