பதிவு செய்த நாள்
29
அக்
2019
02:10
திருத்தணி: திருத்தணி ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், கவுரி நோன்பு விழா நடந்தது. இதில், உற்சவர் கவுரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், தட்டில், 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 அதிரசம், 21 வடை மற்றும் பழங்கள் வைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.சில பெண்கள், புதிய சேலைகள், வளையல் மற்றும் பூ குங்குமம் வைத்து சுமங்கலி பூஜை நடத்தினர். காலை, 11:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, பெண்கள் வந்து கவுரி நோன்பு விழாவில் வழிபட்டனர். இதே போல், திருத்தணியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், வீரஆஞ்சநேயர் மற்றும் தணிகாசலம்மன் ஆகிய கோவில்களிலும், கவுரி நோன்பையொட்டி, பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.