பதிவு செய்த நாள்
29
அக்
2019
03:10
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நேற்று 28ம் தேதி துவங்கியது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று 28ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.காலை, 10:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விரதமிருக்கும் பக்தர்கள் ஆர்வமாக கையில் காப்பு கயிறு கட்டிக்கொண்டனர். தினமும் நான்கு கால அபிஷேக பூஜைகள் நடக்கிறது. நவ., 1ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும்; 2ம் தேதி காலை, 5:30 மணிக்கு சூரசம் ஹார சிறப்பு அபிஷேகம், மாலை, 3:00 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது.வரும், 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு மகா அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும்; 4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவ பூர்த்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது. நேற்று 28ல் காலை, 7:00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது.
காலை, 8:00 மணிக்கு வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. காலை, 10:30 மணிக்கு முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு தலைமையில் திருக்கொடி ஏற்றப்பட்டது.விழாவில் வரும், நவ., 2ம் தேதி சூரசம்ஹார விழாவும், 3ம் தேதி காலை முருகன், வள்ளி, தெய்வாணைக்கு திருக் கல்யாணமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.