சபரிமலை சீசன் துவங்கப்போகுது குமுளியில் நெரிசல் தவிர்க்கப்படுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2019 02:10
கூடலுார் : குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டும் துவங்கப்படாததால் இந்த ஆண்டும் சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.
எல்லைப்பகுதியான குமுளியில் உள்ள கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக உள்ளது. அதே வேளையில் தமிழகப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வசதியில்லாமல், ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. நீண்ட தொலைவில் இருந்து வரும் பயணிகள் குமுளியில் இறங்கியவுடன் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனர்.சபரிமலை சீசனில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் குமுளியைக் கடந்து செல்வதற்குள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுவர்.
இதை தவிர்க்க குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக, அங்கு இயங்கி வந்த அரசு பஸ் டெப்போ இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக டெப்போவை லோயர்கேம்பிற்கு மாற்றி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் இதுவரை குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் கானல் நீராகியுள்ளது. சமீபத்தில் குமுளி பஸ் ஸ்டாண்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்குப்பின், டெப்போவை தற்காலிக பஸ்ஸ்டாண்டாக பயன்படுத்தி வந்தனர்.
அதன்பின், தற்போது மீண்டும் ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தி நெரிசலை ஏற்படுத்தியுள்ளனர். இரு வாரங்களில் சபரிமலை சீசன் துவங்குவதற்கு முன் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.