பதிவு செய்த நாள்
31
அக்
2019
11:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பத்திரிகைக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அனைவருக்கும் வினியோகிக்கும் பணி தொடங்கியது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, டிச.,1ல், கொடியேற்றத்துடன் தொடங்கி, 10ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்க கடந்த செப்.,30ல், பந்தக்கால் நடப்பட்டது. பஞ்ச மூர்த்திகளான, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர், வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல் பணிகள் நடந்து வருகின்றன. பஞ்ச மூர்த்திகள், ஏழாம் நாள் விழாவில் தனித்தனி ரதத்தில் வீதி உலா வருவர். பக்தர்களுக்கு குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்வது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தீப திருவிழா பத்திரிகைக்கு நேற்று, சம்பந்த விநாயகர் ஆலயத்தில், சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து, வினியோகிக்கும் பணியை தொடங்கினர்.