பதிவு செய்த நாள்
01
நவ
2019
11:11
பழநி : பழநி கந்தசஷ்டி விழாவில் நாளை சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, சூரபத்மன் உள்ளிட்ட நான்கு சூரன்களை தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
பழநி முருகன்கோயிலில் அக்.,28 முதல் நவ.,3வரை கந்த ஷ்டி விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாகநாளை (நவ.,2ல்) கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதற்காக பெரியநாயகியம்மன் கோயிலில் விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் 6அடிஉயரம், 4அடி அகலத்தில் நான்கு சூரன்கள் உருவபொம்மை தயாரிக்கும் பணி நடக்கிறது.திருச்செந்துாரில் கடற்கரையில் ஒரே இடத்தில் சூரன்கள் தலையை மட்டும் மாற்றி, மாற்றி சூரசம்ஹாரம் நடக்கிறது. ஆனால் பழநியில் தனித்தனியாக சூரன்கள் வதம் செய்யும் நிகழ்ச்சி,நான்கு திசைகளில் நடைபெறும். முதலில் வடக்கில் தாராகசூரனும், கிழக்கு பானுகோபன்சூரனும், தெற்கு சிங்கமுகாசூரன், மேற்கு சூரபத்மன் வதம் நடக்கிறது.நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (நவ.2) கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடக்கிறது.இவ்விழாவை முன்னிட்டு 4ம் நாளான நேற்று அருணகிரியாருக்கு நடன காட்சி அருளும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் கொடிமர பூஜை, விநாயகர் பூஜை, கலச பூஜை, சத்ரு சம்ஹார யாக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மூலவர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களும், லட்சார்ச்சனையும் நடந்தது.இதன் பிறகு நடன கோலத்தில் எழுந்தருளிய சுவாமி புறப்பாடாகி வலம் சென்றார். விநாயகர் சன்னதி அருகே முருகப் பெருமான் அருணகிரியாருக்கு நடனக் காட்சி அருளும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முருக பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (நவ.2) கிரிவல பாதையில் சூரசம்ஹார நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.