பதிவு செய்த நாள்
12
ஏப்
2012
11:04
கந்தர்வக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வேம்பன்பட்டியில் புகழ்பெற்ற ஸ்ரீபாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா பங்குனி உத்திரம் முதல் வாரம் துவங்குவது வழக்கம். நடப்பாண்டும் கந்தர்வக்கோட்டையில் இருந்து ஸ்வாமி புறப்பாடு நடந்தது. அதைத்தொடர்ந்து கணபதி பூஜையுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் அந்தப்பகுதியை ஒவ்வொரு கடைகாரர்களும் ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தினர். தேர்திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரமும், மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் வளாகத்தினை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். தொடர்ந்து உள்ளூர் கிராம பொதுமக்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கந்தர்வக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலையிலிருந்து தாங்கள் ஊர்களிலிருந்து பால்காவடி, பன்னீர்காவடி, கரும்பு பிள்ளை தொட்டி, உடல்கள் மீது அலகு வேல்கள் குத்திக்கொண்டும் கோவிலை சுற்றி வலம் வந்த பின்னர் கோவில் குளத்தில் நீராடி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி கந்தர்வக் கோட்டையிலிருந்து வேம்பன்பட்டி வரையிலும் நீர்மோர் பந்தல், குளிர்பானம் மற்றும் கோவிலை சுற்றிலும் பல இடங்களில் அன்னதானமும், ஏற்பாடுகளை பல்வேறு அமைப்பினர் செய்திருனர். திருவிழாவை முன்னிட்டு, கந்தர்வக்கோட்டையில் இருந்து வேம்பன்பட்டிக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுகை எஸ்.பி., உத்தரவின் பேரில் கந்தர்வக்கோட்டை எஸ்.ஐ.,க்கள் சந்திரமோகன், கேசவமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர்.