பதிவு செய்த நாள்
12
ஏப்
2012
04:04
சித்தர்களில் ஒருவரான இடைக்காடரிடம் சில பக்தர்கள் பெருமாளின் அவதாரங்களில் உங்களுக்கு பிடித்த மூன்று அவதாரங்களைச் சொல்லுங்கள், அவரையே நாங்கள் வழிபட விரும்புகிறோம் என்றனர். உடன் இடைக்காடர் அவர்களிடம், ஏழை, இடையன், இளிச்சவாயன் இவர்களை வணங்கி திருவிழா கொண்டாடுங்கள். உங்களை துன்பம் நெருங்காது என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவர் சொல்லியதன் விளக்கம் இதுதான். ஏழை என்பது ராமனையும், இடையன் என்பது கண்ணனையும், இளிச்சவாயன் என்பது நரசிம்மரையும் குறிக்கும். ராமன், தசரத சக்கரவர்த்தியின் மகனாக பிறந்தவர். ஆனாலும், தந்தையின் சொல் கேட்டு வனவாசம் சென்று ஏழையாகவே வாழ்க்கை நடத்தினார். அவரே கிருஷ்ணாவதாரத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக இருந்தார். நரசிம்ம அவதாரத்தில் உக்கிரத்துடன் வாயைத் திறந்து இரணியனை சம்ஹாரம் செய்தார். இதை இளித்தவாயன் எனக் குறிப்பிட்டார். இளித்த என்றால் வாயை திறந்த என்றும் பொருள் உண்டு.
கார்த்திகையில் நரசிம்மர் பூஜை: கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள், நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது. இந்நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். வேலூர் மாவட்டம் சோளிங்கரில், யோக நரசிம்மர் மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். இங்கு கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு பூஜை நடக்கும். அதிகாலை 4.30 மணிக்கு கோயில் திறக்கப்படும். வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் யோக நரசிம்மர், அமிர்தபலவல்ல தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும்.
சிபி நரசிம்மர்: சிபியில், 1798ம் ஆண்டு வாக்கில், மைசூர் சுல்தான் திப்புவிடம் திவானாகப் பணிபுரிந்து வந்த லட்சுமி நரசிம்ஹய்யா... தன்னுடைய சகோதரர் புட்டனய்யா என்பவருடன் இணைந்து நரசிம்ஹஸ்வாமி கோயிலைக் கட்டியுள்ளார். இந்த கோயிலினுள் சுவர்களில், அழகான ஓவியங்களை தரிசிக்கலாம். இவை செடி கொடிகளின் சாறுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்களிலிருந்து வரையப்பட்டவை. இந்துமத பாரம்பரிய தெய்வங்கள்... தேவியர் என அனைத்தையும் அழகு ஓவியங்களாக இங்கு காணலாம். அத்துடன் டெர்ரகோட்டா மற்றும் சுண்ணாம்பால் ஆன 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகளையும் காணலாம். கர்நாடகத்தில் உக்கிர நரசிம்ஹர் பிரபலம். அதே போல் சிபியிலும் உக்கிர நரசிம்ஹரை தரிசிக்கலாம். ஸ்தலவிருட்சமாக பவழ மல்லி மரம் உள்ளது. அதிலிருந்து பூக்கள், பூமெத்தை விரவியது போல் விழுந்துள்ளன. இருந்தாலும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்வோர் மிகவும் குறைவே.