பதிவு செய்த நாள்
12
ஏப்
2012
11:04
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை ஸ்ரீதட்சணகாசி கால பைரவர் கோவிலில், நாளை (ஏப்.,13) தமிழ் புத்தாண்டையொட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீகால பைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம், அஸ்ட லட்சுமி யாகம், தனகார்சன குபேர பைரவர் யாகம், அதிருத்ரயாகம் தொடர்ந்து சித்திரை கனி (விசு) தரிசனம், நவரத்தினம், சொர்ணம் தரிசனம், தன லட்சுமி தரிசனம், லட்சுமி பூஜை நடக்கிறது. ஸ்ரீகால பைரவருக்கு 1,008 அர்ச்சனை, நான்கு வேத பாராயணம், 28 ஆகம பூஜைகள், சிறப்பு உபஜார பூஜைகள் நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் 12 மணிக்கு குறிஞ்சி பூஜை யாகம் நடக்கிறது. “தமிழ் புத்தாண்டில் நடக்கும் விஷேக பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று, இறைவன் அருள் பெறவும், ஆண்டு முழுவதும் குடும்பத்தில் ஆரோக்கியம், செல்வ செழிப்புகள் பெறலாம்’ என கோவில் அர்ச்சகர் கிருபாகரன் குருக்கள் தெரிவித்துள்ளார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் செய்து வருகின்றனர்.
* காரிமங்கலம் மலைக்கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நாளை (ஏப்., 13) நடக்கிறது. காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் நந்தன தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
* காவேரிப்பட்டணம் பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீவேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்க பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை குருக்கள் மோகன்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
* தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில், எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயர் கோவில், சாலை விநாயகர் கோவில், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ கணவாய் ஆஞ்சநேயர் உட்பட அனைத்து கோவில்களிலும் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.