பதிவு செய்த நாள்
04
நவ
2019
02:11
வால்பாறை:வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஏழாம் ஆண்டு கந்தசஷ்டி விழா, கடந்த, 28ம் தேதி துவங்கியது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு நாள் தோறும், நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விழாவில், நேற்று முன்தினம் (நவம்., 2ல்) மாலை, நடந்த சூரசம் ஹாரவிழாவில் கெஜமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானுகோபன், சூரபத்மனையும் முருகப் பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், நேற்று (நவம்., 3ல்) காலை 12;00 மணிக்கு, முருகன், வள்ளி - தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு, ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி முத்துராமலிங்கம் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.