பதிவு செய்த நாள்
12
ஏப்
2012
04:04
அவதாரங்கள் எண்ணற்கரியன. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முக்கிய மும்மூர்த்திகளும் பல உருவில் பன்முறை அவதரித்திருந்தாலும், பொதுவாக, அவதாரம் என்றவுடன் நாம் விஷ்ணுவையே நினைக்கிறோம். அவரின் முக்கியப்பத்து அவதாரங்களிலும் சில மட்டுமே புராணங்களிலும், இதிகாசங்களிலும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ராமனையும், கிருஷ்ணனையும் போற்றுகின்ற அளவுக்கு பிற அவதாரங்கள் பாடப்படவில்லை. மேலும் வராக அவதாரம், மத்ஸ்ய அவதாரம், கூர்ம அவதாரம், வாமனஅவதாரம் போன்றவற்றின் அவதாரப் பணி சீக்கிரமே நிறைவேறி விடுவதால். அந்த அவதார மூர்த்திகட்கு, தனிக்கோயில், தனிச்சன்னதி அதிகமில்லை. பெரிய அளவிலான பெருமாள் ஆலயங்களில் கூட, எல்லோருக்குமாக சேர்ந்தே தசாவதார சன்னதி உள்ளது. சில கோயில்களில் மட்டுமே, மூலவர் சன்னதியோடு, பிற அவதார மூர்த்திகளுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. அவற்றிலும் ராமர், கிருஷ்ணருக்கே அதிகமாக உள்ளன. மேலும், சுதர்சனர் (சக்கரத்தாழ்வார்) சன்னதியுள்ள ஆலயங்களில், சக்கரத்தாழ்வாரின் பின்புறம் நரசிம்மரின் உருவம் அமைக்கப்படுவதால், திருச்சுற்றில், நரசிம்மருக்கு தனிச்சன்னதி இருப்பது குறைவே. தனிச்சன்னதி ஏற்படுத்தும் போது, வடமேற்கு (வாயு) மூலையில் அமைப்பது வழக்கமாக உள்ளது.
தமிழக நரசிம்மர் ஆலயங்கள்: விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோயில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப் படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன. அவை
1. அகோபில நரசிம்மர் , 2. அழகிய சிங்கர், 3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர் 4. உக்கிர நரசிம்மர்
5. கதலி நரசிங்கர் , 6. கதலி லட்சுமி நரசிம்மர் 7. கதிர் நரசிம்மர் , 8. கருடாத்ரி லட்சுமிநரசிம்மர்,
9. கல்யாண நரசிம்மர், , 10. குகாந்தர நரசிம்மர்,11. குஞ்சால நரசிம்மர், 12. கும்பி நரசிம்மர்,
13. சாந்த நரசிம்மர்,14. சிங்கப் பெருமாள்,15. தெள்ளிய சிங்கர்,16. நரசிங்கர்,17. பானக நரசிம்மர் 18. பாடலாத்ரி நரசிம்மர்,19. பார்க்கவ நரசிம்மர், 20. பாவன நரசிம்மர்,21. பிரஹ்லாத நரசிம்மர் 22. பிரஹ்லாத வரதநரசிம்மர்,23. பூவராக நரசிம்மர், 24. மாலோல நரசிம்மர்,25. யோக நரசிம்மர் 26. லட்சுமி நரசிம்மர்,27. வரதயோக நரசிம்மர்,28. வராக நரசிம்மர், 29. வியாக்ர நரசிம்மர் , 30. ஜ்வாலா நரசிம்மர்
முக்கிய நரசிம்மர் தலங்கள்
தமிழ்நாடு: வேலூர் சோளிங்கர் மலையில் 500 அடி உயரத்தில் யோகநரசிம்மர் ஆலயம். அடிவராத்தில் உற்சஸவமூர்த்தி மட்டுமே உள்ளார். சிறிது நேரம் தங்கினாலே முக்தியளிக்கும் தலம்.
காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகியசிங்கர் கோயில். மேற்கு திசையில் அசுரர்களை தடுத்தபின், பெருமாள், யோக நரசிம்மராக, தானே விரும்பித் தங்கிவிட்ட இடம்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவாழித் திருநகரியில் லட்சுமி நரசிம்மர்
நாகப்பட்டினம் நீலமேகப்பெருமாள் கோயிலில் அபூர்வமான அஷ்டபுஜநரசிம்மர்.
தஞ்சைக்கு வடக்கே தஞ்சைமாமணிக்கோயில் நரசிம்மர் கோயில்.
திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் தென்புற நரசிம்மர் தெற்காழ்வார் இரண்யனைப் பிடித்த கோலம். வடபக்க நரசிம்மர் வடக்காழ்வார் இரண்யவதம் செய்த கோலம். இரண்டுமே மிகப்பெரிய திருவுருவங்கள்.
நாகை சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள குறையலூர்நரசிம்மர் கோயில். நாங்கூர்ப் பகுதி பஞ்ச நரசிம்மத்தலத்தில் ஒன்று.
நாமக்கல் ஊரின் நடுவே உள்ள மலைமுகட்டில், மேற்புறம் நரசிம்மர் சன்னதி.
திருநெல்வேலி கீழப்பாவூர் நரசிம்மர் வித்தியாசமாக பதினாறு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.
விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் சிங்கப்பெருமாள் கோயில் உக்ர நரசிம்மர் கோயில்.
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் பூவரசன் குப்பம்
லட்சுமி நரசிம்மர் தலம். இங்கு நரசிம்மரின் வடிவமும் அவரது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரின் வடிவமும் ஒரே அளவில் அமைந்திருப்பது சிறப்பு.
விழுப்புரத்திலிருந்து உளுந்தூர் பேட்டை செல்லும் வழியில் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில்.
கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் சிங்கிரிகுடி நரசிம்மர் கோயில்.
மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோயில்.
கடலூர் திருவதிகை சரநாராயணர் கோயிலில் பள்ளி கொண்ட நரசிம்மர் சிறப்பு.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மடத்தில் நரசிங்க சாளக்கிராமம் பூஜிக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கம்பனின் இராமாயணத்தை அங்கீரிப்பதற்கு விமான சிற்பத்திலிருந்து வெளிவந்த நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பர்.
திருவாரூர் மன்னார்குடி அம்மாபேட்டையில் வெள்ளெருக்கு வேரை நரசிம்மராக வடித்து வழிபட்டு வருவதால் இவர் வெள்ளெருக்கு நரசிம்மர் என அழைக்கப்படுகிறார்.
கரூர் தேவர்மலை அபயம் தந்தருளும் நரசிம்மர் கையில் விரல்கள் நீளமாகவும் கூரிய நகங்களோடும் காணப்படுகிறது.
கோவை தாளக்கரையில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார் நரசிம்மர்.
நாகப்பட்டினம் பொரவச்சேரி சுப்ரமணியர் திருக்கோயிலில் யோக நரசிம்மருக்கு சன்னதி உள்ளது என்பது தனிச் சிறப்பு.
பிற மாநில நரசிம்மத் தலங்கள்
ஆந்திரா: கடப்பா மாவட்டம் நந்தியால் அருகே அகோபிலம் நரசிம்மர் கோயில். நரசிம்மர் வெளியான தூண் 2கி.மீ ல் உள்ளது. ஆதிசங்கரரை, காபாலிகர்களிடமிருந்து, நரசிம்மர் காப்பாற்றிய தலம்.
எர்ரகுண்டா - கடப்பாவிலிருந்து 40 கி.மீ.தூரத்தில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் ஆலயங்கள்.
யாதகிரி - ஐதராபாத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள மலையில் லட்சுமி நரசிம்மர் ஆலயம்.
தர்மபுரி - கோதாவரி நதி மேற்குக் கரை (கரிம் நகரிலிருந்து 16 கி.மீ) இரு நரசிம்மர் ஆலயங்கள்.
பாபட்லா - தெனாலியிருந்து 43 கி.மீ. ஜ்வாலா நரசிம்மர் கோயில்.
அகிரபள்ளி - விஜயவாடாவிலிருந்து செல்லலாம். வியாக்ர நரசிம்மர் ஆலயம்.
மங்களகிரி - பெசவாடாவிலிருந்து 13 கி.மீ. மலையில் 400 படிகள். நரசிம்மருக்கு வாயில் பானகம் விடுகிறார்கள்.
சிம்மாசலம் - வால்டேரிலிருந்து 8 கி.மீ.தூரத்தில் ஆயிரம் படிகள் கொண்ட மலைமேல் உள்ளது வராஹ நரசிம்மர் கோயில். இவர் உக்ர மூர்த்தி என்பதால் எப்போதும் சந்தனக்காப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியையில் மட்டும் புது சந்தனக்காப்பு சாற்றப்படுகிறது.
விஜய நகரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள பூமினிபட்டினம் லட்சுமி நரசிம்மர் கோயில்.
ராஜமுந்திரியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள கொருகொண்டா மலையில் 600 படிகளுடன் சாத்வீக நரசிம்மர்.
கரிம் நகர் மாவட்டம் லட்சுமி புரம் மலையில் நவநரசிம்மர். இரண்டாவது அகோபிலம் என்பர்.
காகிநாடா சமீபம் புகழ் பெற்ற திராக்ஷõராமம் பீமேஸ்வரர் கோயிலில் ஷேத்ராபாலராயுள்ள நரசிம்மர்.
திருப்பதி கோயிலில் உள் பிரகாரத்தில் தனி நரசிம்மர் சன்னதி. 517504.
கம்மம் ஸ்தம்ப நரசிம்மர் கோயில். ஸ்தம்பம் (தூண்) என்பது கம்மம் ஆகிவிட்டது.
வடக்கு ஆந்திர மாநிலத்தில் 244 மீ., உயர சிம்மாசல குன்றில் உள்ள வராக நரசிம்மருக்கு வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பு சாற்றப்படுகிறது.
விஜயவாடா வாடபல்லி நரசிம்மர் கோயில் கருவறையில் முகத்துக்கு அருகிலுள்ள தீபம் நரசிம்மரின் மூச்சுக்காற்றால் ஆடிக்கொண்டும், அதே நேரம் பாதத்தின் அருகில் உள்ள தீபம் அசையாமல் உள்ளது.
கர்நாடகா: மைசூருக்கு தெற்கே 30 கீ.மீ. தூரத்தில் நரசிப்பூர் திருமுக்கூடல் . காவிரி, கபில, ஸ்படிக நதிகளின் சங்கமத்தலம். இங்குள்ள குஞ்சால நரசிம்மர். ஒரு கையில் குண்டுமணியும், மறு கையில் தராசும் ஏந்திய அபூர்வத் திருமேனி.
மைசூர் மாவட்டம் ஏலந்தூர் தாலுக்கா அகரம். ஒரே திருமேனியில் யோக, லட்சுமி, உக்கிர, ஜ்வால, பிரகலாத வரத முகங்களுடைய பஞ்சமுக நரசிம்மர்.
ஸ்ரீரங்கப் பட்டிணத்திலிருந்து 32 கி.மீ தூரத்தில் பாண்டவபுரம் 400 படிகள் கொண்ட மலையில் யோக நரசிம்மர் கோயில்.
மைசூர் மாவட்டம் கிருஷ்ணராஜ நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் சாளக்கிராம் நரசிம்மர்
ஹாஸனிலிருந்து மைசூர் வழி 32 கி.மீ தூரத்தில் ஹோலே நரசிப்பூரில் பிரஸன்ன நரசிம்மர்.
தும்கூர் மாவட்டம், சிரா தாலுக்கா சிபியில் சாளக்கிராம வடிவில் நரசிம்மர்.
பெல்லாரி மாவட்டம் ஹாஸ்பேட் தாலுக்கா ஹம்பியில் 22 அடி உயர நரசிம்மர்.
ராய்சூர் மாவட்டம், கங்காவதி தாலுக்கா கனககிரியில் லிங்க வடிவில் லட்சுமி நரசிம்மர்.
பிஜப்பூர் மாவட்டம் தாலுக்கா கர்பராவில் அரசமரமே நரசிம்மராக வழிபாடு.
பெல்காம் மாவட்டத்தில் தெற்கே காநாபுர தாலுக்கா ஹலசியில் பூவராக அனந்தவீர விக்கரம நரசிம்மர்.
பெல்காம் சமீபம் சம்பகாவ் வட்டம் முடுதகாண ஹுப்ளியில் அஸ்வத்த நரசிம்மர்.
கேரள மாநிலம்
1. கடுங்கலுர் : ஆலவாயிலிருந்து 2 கி,மீ. நரசிம்மர் கோயில். 683103.
2. துறவூர் : ஆலப்புழையிலிருந்து 35 கி.மீ. இரண்டு நரசிம்மர் கோயில்கள். 688532.
3. குருவாயூர் : கிருஷ்ணன் கோயிலில் நாராயண பட்டத்ரி தன் குருவிடம் வாங்கிக் கொண்ட நோய் நீங்கிட நாராயணீயம் இயற்றும் போது விஷ்ணு நரசிம்மக்காட்சி அளித்த தலம். 680101.
மஹாராஷ்டிரா : மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராகேர் மற்றும் சார்தானாவில் மிகப்பெரிய நரசிம்மத் தலங்கள் அமைந்துள்ளன.
ஒரிசா : ந்ருசிங்கநாத்தில் மிகப்பெரிய நரசிம்மர் தலம்.
நரசிம்மர் திருஉருவ வித்தியாசங்கள்: நரசிம்மர் பற்றியுள்ள பல இலக்கியங்களில் நரசிம்மரின் உருவ எண்ணிக்கை மிக அதிகமாக 74 ஆகவும், அடுத்து 23 ஆகவும் கருதப்பட்டாலும், நவ (9) நரசிம்மர் என்ற எண்ணமே பரவலாக உள்ளது. அவை:
1. அகோபில நரசிம்மர்
2. சத்ரவட நரசிம்மர்
3. யோகாநந்த நரசிம்மர்
4. காராஞ்ச நரசிம்மர்
5. பார்க்கவ நரசிம்மர்
6. வராக நரசிம்மர்
7. ஜ்வாலா நரசிம்மர்
8. பானக நரசிம்மர்
9. மாலோல நரசிம்மர்
சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே.
எனினும் சில தலங்களில் நரசிம்மர் 5 முகமும், 8,10,16,18,26,32,64 கரங்களும் உடையவராகவும்; லட்சுமியுடன் அல்லது ஸ்ரீதேவி பூதேவியோடு சேர்ந்திருப்பராகவும்; அமர்ந்து, நின்று நகருபவராகவும்; வராகமும் சிம்மமும் சேர்ந்த வடிவிலும் மாறுபட்ட இன்னும் பல உருவங்களோடும் பல ஆயுதங்களோடும் காணப்படுகிறார்.
நரசிம்மரைப் பற்றிய முக்கிய நூல்கள்
1. பாகவதம் 2. ஹரிவம்சம்
3. விஷ்ணுபுராணம் 4. விஹகேந்திரஸம்ஹிதை
5. பத்ம ஸம்ஹிதை 6. ஈசுவர ஸம்ஹிதை
7. பராசர ஸம்ஹிதை 8. ஸாத்வத ஸம்ஹிதை
9. சேஷ ஸம்ஹிதை 10. வைகானச ஆகமம்
11. விஷ்ணு ஸம்ஹிதை 12. ஸ்ரீ ப்ரஸன்ன ஸம்ஹிதை
13. விஷ்ணு தந்திரம் 14. விஷ்வக்சேன ஸம்ஹிதை
15. ஹயசீர்ஷ ஸம்ஹிதை 16. பரமேசுவர ஸம்ஹிதை
17. மத்ஸ்ய புராணம் 18. சில்ப ரத்தினம்
19. ப்ரபஞ்ச சார ஸங்கிரஹம் 20. நரசிம்ம புராணம்.
கம்பப் பெருமாள்கள்: கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி (பேச்சு + அம்மன்) பேச்சியம்மன் ஆகவும்; ஓம் காளீஸ்வரி அங்காளேஸ்வரி ஆகவும்; பிரும்மன் விரும்பன் ஆகவும் மாறியது போலவே ஸ்தம்பம் (தூண்) கம்பம் ஆகி, கம்பத்திலிருந்து வெளிப்பட்ட விஷ்ணு கம்பப் பெருமாள் ஆகிவிட்டார். தென் தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரைக்குத் தெற்கே கம்பப்பெருமாள் கோயில்கள் அதிகமாகவுள்ளன. கர்நாடகத்தில் நரசிம்மரை கம்படய்யா என்பது குறிப்பிடத்தக்கது.
யோக நரசிம்மரின் சிறப்பு: இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார். விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தட்சிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.
கிரகங்களை வழிபட்ட பலனை அளிப்பதாகக் கருதப்படும் முக்கிய விஷ்ணு அவதாரங்கள்.
மத்ஸ்ய அவதாரம் - கேது கல்கி அவதாரம் - புதன்
வராக அவதாரம் - ராகு நரசிம்மர் அவதாரம் - செவ்வாய்
கூர்ம அவதாரம் - சனி கிருஷ்ண அவதாரம் - சந்திரன்
பரசுராம அவதாரம் - சுக்ரன் ராம அவதாரம் - சூரியன்
வாமன அவதாரம் - குரு பலராமர் அவதாரம் - குளிகன்
நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளிலும். அன்றாடம், செவ்வாய் ஹோரையிலும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.
தினமும் பகலில் செவ்வாய் ஹோரை நேரம்
செவ்வாய் 6 மணி முதல் 7 மணி வரை, 1 மணி முதல் 2 மணி வரை
புதன் 10 மணி முதல் 11 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரை
வியாழன் 7 மணி முதல் 8 மணி வரை, 2 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 11 மணி முதல் 12 மணி வரை
சனி 8 மணி முதல் 9 மணி வரை, 3 மணி முதல் 4 மணி வரை
ஞாயிறு 1 மணி முதல் 2 மணி வரை
திங்கள் 9 மணி முதல் 10 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை.