பதிவு செய்த நாள்
05
நவ
2019
11:11
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1034வது துவங்கியது. உலகம் போற்றும் புகழுடைய தஞ்சாவூர் பெரியகோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. இவ்விழாவில் கருத்தரங்கம், திருமுறைப் பண்ணிசை, திருமுறை அரங்கம், திருமுறை இசையரங்கம், வயலின் இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கலெக்டர் அண்ணாதுரை கலந்துக் கொண்டார். மேலும் இரவு 7.30 மணியளவில் மாமன்னர் ராஜராஜசோழனின் பெரும் புகழுக்குக் காரணம் ஆட்சித் திறனா? பக்திப் பணியா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறவுள்ளது. சுகி சிவம் நடுவராகப் பங்கேற்கும் பட்டி மன்றத்தில் பேராசிரியர் ராஜாராம், செ. மோகனசுந்தரம், இராம. செüந்தரவள்ளி, விஜயசுந்தரி ஆகியோர் பேச உள்ளனர். நவ. 6ம் தேதி மாமன்னனின் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை வீதி உலா, பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு, பரதநாட்டியம், மாலை 6 மணியளவில் தஞ்சை பெரியகோயிலின் கட்டுமான விந்தைகள் என்ற தலைப்பில் ஒலி, ஒளிக் காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பின்னர் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் தொல்லியல் கட்டுமானங்கள் புனரமைப்புப் பொறியாளர் எஸ். ராஜேந்திரன், சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவர் அய்யம்பேட்டை என். செல்வராஜ் ஆகியோருக்கு மாமன்னன் ராசராசன் விருது வழங்கப்படவுள்ளது. இதையடுத்து, இரவு 8.30 மணியளவில் திரைப்படப் பாடகர் வேல்முருகன், கோபு குழுவினரின் கிராமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.