பதிவு செய்த நாள்
05
நவ
2019
11:11
திருப்பதி: திருமலையில் நடந்த வருடாந்திர புஷ்பயாகத்தின் போது 13 டன் மலர்களால் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருமலையில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்ஸவம் முடிந்த பின் அதில் உள்ள குறைகளை களைய வருடாந்திர புஷ்பயாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி நேற்று (நவம்., 4ல்) மதியம் புஷ்பயாகம் நடந்தது. நேற்று (நவம்., 4ல்) காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து உற்ஸவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின் உற்ஸவமூர்த்திகள் சம்பங்கி மண்டபம் எனப்படும் கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டனர்.
அங்கு, அவர்களுக்கு மல்லிகை, முல்லை, பல வண்ண ரோஜா, சம்பங்கி, ஜாதிமல்லி, சாமந்தி, இருவாட்சி, செண்பக பூ, பல வண்ண அரளி, கனகாம்பரம், மனோரஞ்சிதம், தாமரை, தாழம்பூ உள்ளிட்ட 14 வகையான 8 டன் மலர்களாலும் துளசி, வில்வம், மருவு, தவனம், கதிர்பச்சை, வில்வம் உள்ளிட்ட ஆறு வகையான 5 டன் இலைகளாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. இதற்காக தமிழகத்தில் இருந்து 5 டன்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து 1 டன், கர்நாடகாவிலிருந்து 2 டன் மலர்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டது. சர்வ அலங்காரத்துடன் உற்ஸவமூர்த்திகள் தங்க பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்து பின் கோவிலுக்குள் சென்றனர்.