பதிவு செய்த நாள்
14
ஏப்
2012
11:04
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. துறவிகள், அஷ்டலிங்கங்களில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நந்தன ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி, நேற்று அதிகாலை மூன்று மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. உற்சவ மூர்த்தி உண்ணாமலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தங்கக்கொடி மரத்தின் அருகே பெரிய பால் குடம் வைக்கப்பட்டு, அதில் பக்தர்கள் ஸ்வாமி, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய காணிக்கையாக செலுத்தும் பால் சேகரித்து மாட வீதி உலா வந்து ஸ்வாமி, அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கோவிலில் தியாகராஜ குருக்கள், ஹலாசிநாத குருக்கள் தலைமையில் கோவிலில் நந்தன ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்வாமியையும், அம்மனை தரிசனம் செய்தனர்.துறவிகள் சார்பில் அஷ்ட லிங்கங்களான இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், சூரிய லிங்கம், வாயு லிங்கம், குபேரலிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் ஆகியவற்றில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.