பதிவு செய்த நாள்
14
ஏப்
2012
11:04
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக, முதல்பிரகாரத்தில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ராமேஸ்வரத்திற்கு தினமும் பல்வேறு பகுதியில் இருந்து தீர்த்த மாட வரும் ஏராளமான பக்தர்கள், கோயில் சுவாமி சன்னதியில் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா மற்றும் விடுமுறைக்காலங்களில் அதிகளவில் பக்தர்கள் வருவதால், பக்தர்கள் சுவாமி சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்திலிருந்து, அம்பாள் சன்னதிக்கு செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இதனால், சுவாமி தரிசனம் முடிந்தது பக்தர்கள் இலகுவாக அம்பாள் சன்னதிக்கு செல்ல, முதல் பிரகாரத்தில் தெற்கு பகுதியில் நடமாடும் மேம்பாலம் அமைக்க, கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
தொடர்ந்து கூட்ட நேரத்தில் பயன்படுத்தவும், பக்தர்கள் கூட்டம் இல்லாத காலங்களில், வேறுபகுதியில் நகர்த்தி கொண்டு செல்லும் வகையிலும், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் நடமாடும் நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இப்பணிகள் சில நாட்களில் முடியும் நிலையில், விரைவில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என்று கோயில் இணைகமிஷனர் ஜெயராமன் தெரிவித்தார்.