மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஐப்பசி துலா உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் நடைபெறும். துலா மாதமான ஐப்பசி மாதத்தில் சிவபெருமானின் அனுக்கிரகத்தின் படி கங்கை உள்ளிட்ட புன்னிய நதிகள் அனைத்தும் இந்த காவிரி துலா கட்டத்தில் புனிதநீராடி தங்களது பாவத்தை போக்கிக்கொண்டது ஐதீகம். அதனால் இம்மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடினால் பாவம்தீரும் என்பதால் தமிழம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் நீராடி வருகின்றனர். துலா உற்சவம் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் திருவாவடுதுறை கட்டளை விசாரணை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரானின் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நமச்சிவாயா என கோஷமிட்டு சிவபெருமானை வழிபட்டனர். துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.