பதிவு செய்த நாள்
07
நவ
2019
02:11
தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின், 1,034வது சதய விழாவை முன்னிட்டு, அவரது உருவ சிலைக்கு, 52 அமைப்பு கள் சார்பில், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. உலகமே வியக்கும், தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர்; மன்னர் ஆட்சியில், குடவோலை என்ற ஜனநாயக முறையை பின்பற்றியவர்; நிலங்களை அளந்து முறைப்படுத்தி, உலகளந்தான் எனும் பெயர் பெற்றவர், ராஜராஜ சோழன்.
ராஜராஜனின் பிறந்த நாள், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. 1,034வது சதய விழா, நேற்று முன்தினம், பெரிய கோவிலில் துவங்கியது.விழாவின் இரண்டாம் நாளான, நேற்று காலை, 7:00 மணிக்கு, பெரியகோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜசோழன் உருவச் சிலைக்கு, தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பெரியகோவிலில், பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பால், மஞ்சள், தயிர், திரவிய பொடி, பழங்கள், இளநீர், கரும்புசாறு போன்ற, 48 வகையான மங்கலப் பொருட்களால், பேராபிஷேகம் நடந்தது.முன்னதாக, மங்கல வாத்தியம் முழங்க, யானை மீது தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகள் வைக்கப்பட்டு, நான்கு ராஜவீதிகளிலும் வீதிவுலா நடைபெற்றது.ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை செய்ய, அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள், போலீசாரிடம் அனுமதி பெற்றிருந்தன. மொத்தம், 52 அமைப்பு களைச் சேர்ந்தோர், ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.பிற்பகல், 3:30 மணிக்கு, மங்கல இசையுடன், மேடை நிகழ்ச்சிகள் துவங்கியது. ஆறுமுகம் குழுவின் நாதசங்கமம், திருவையாறு ஆடல்வல்லான் நாட்டியாலயா குழுவின் பரதநாட்டியம், தமிழ் பல்கலை பேராசிரியர் நல்லசிவத்தின் திருமுறை இசை சொற்பொழிவு, பெரிய கோவிலின் கட்டுமான விந்தை குறித்து, ஒலி - ஒளி காட்சி நடந்தது. இரவு, கிராமிய இசை நிகழ்ச்சியுடன், சதய விழா நிறைவு பெற்றது.