பதிவு செய்த நாள்
14
ஏப்
2012
12:04
ஈரோடு:ஈரோடு, லக்காபுரம் புதூர் லட்சுமி நாராயணர் கோவிலில், தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மலர் வேள்வி நடந்தது.கோவில் வளாகத்தில், கும்பங்கள் வைத்து, மலர்கள், கனிகள் படைக்கப்பட்டு, சூரிய பூஜை நடந்தது. கன்றுடன் பசுவுக்கு கோபூஜை, குதிரைக்கு பூஜை நடந்தது.
மூலவர் லட்சுமி நாராயணருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தன. அலங்காரத்துக்குப் பின், துளசி, மரிக்கொழுந்து, செவ்வந்தி, மல்லிகை, ரோஜா, அரளி, தாமரை, பிச்சி போன்ற பூக்களால், வேத மந்திரங்கள் முழங்க, மூலவருக்கு மலர் வேள்வி நடத்தப்பட்டது. பின் கனிகள் சமர்ப்பித்து சிறப்பு பூஜை நடந்தது.
"நந்தன ஆண்டுக்கான புதிய பஞ்சாங்கத்தை வாசித்து, கோவில் அறங்காவலர் ஜோதிடர் சுயம்பிரகாஷ் கூறுகையில், ""சித்திரைப் பிறப்பு என்பது சூரியனுக்கான வழிபாடு. மழை வளமும், பயிர்கள் செழிப்பும் ஏற்பட காரணமாக சூரியனுக்கு நன்றி கூறி, அவரை பிரார்த்திப்பதாகும். பூமி வளமாவதன் அடையாளமே கனிகள்தான். கனிகளை இறைவனுக்கு சமர்ப்பிப்பதே, "விஷு கனி என்பதாயிற்று.
வேள்வி என்பது அக்னியில் செய்வது மட்டுமல்ல; மலர்களாலும் வேள்வி நடத்தலாம். எட்டு வகையான மலர்களைக் கொண்டு இறைவனுக்கு வேள்வி நடத்தப்பட்டுள்ளது. இன்று (நேற்று) பிறந்துள்ள "நந்தன ஆண்டு என்பதில், "நந்தன என்றால் "குழந்தைகள் எனப்பொருள். இந்தாண்டில் குழந்தைகள் ஆரோக்கியமும், சிறந்த கல்வியும், அறிவாற்றலும் பெற ஏற்ற ஆண்டாக அமைய, நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம், என்றார்.ஏற்பாடுகளை, லட்சுமி நாராயணர் கோவில் பவுர்ணமி வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.