Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரத சப்தமி விரத முறையும் பலனும்! எருக்க இலைகளுக்கு ஏன் இத்தனை மதிப்பு? எருக்க இலைகளுக்கு ஏன் இத்தனை ...
முதல் பக்கம் » துளிகள்
பீஷ்மாஷ்டமி வழிபடும் முறையும் பலனும்!
எழுத்தின் அளவு:
பீஷ்மாஷ்டமி வழிபடும் முறையும் பலனும்!

பதிவு செய்த நாள்

07 பிப்
2022
05:02

தன் தந்தையின் பொருட்டு, திருமணமே செய்யப் போவது இல்லை எனும் உயர்ந்த சத்தியத்தைச் செய்த பிதா மஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே பீஷ்மாஷ்டமி எனும் நன்னாள்! இந்த நாள் தை மாதம் வளர்பிறை அஷ்டமியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஓம் பீஷ்மாய நம: என்று மூன்று முறை, தண்ணீரை கைகளினால் அர்க்கியமாக விடவேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை!

பீஷ்மர் கங்கையின் புதல்வன் என்று பதில் கிடைத்தாலும், இவர் அஷ்ட வசுக்களில் ஒருவர் என்று புராணம் கூறுகிறது. பிரம்மதேவருடைய சபையில் தேவர்கள் கூடியிருந்தார்கள். இட்சுவாகு பரம்பரையைச் சேர்ந்த மன்னன் மகாபிஷக் என்பவனும் சபையில் அமர்ந்திருந்தான். அந்த சமயத்தில் கங்காதேவி சபைக்குள் நுழைந்தாள். அப்பொழுது வீசிய சுகமான காற்றில் கங்காதேவியின் மேலாடை விலகியது. தேவர்கள் அனைவரும் நிலத்தை நோக்கி குனிந்து கொண்டார்கள். ஆனால் மன்னனான மகாபிஷக்கோ கங்காதேவியின் அழகை ரசித்தான். இதைக் கண்ட பிரம்மதேவரின் கண்கள் சிவந்தன. நீ பூமியில் மானிடனாகப் பிறப்பாய். இந்த கங்காதேவியே உனக்கு மனைவியாக வருவாள். அவள், நீ விரும்பாத காரியத்தைச் செய்வாள். அதைக் கண்டு உனக்கு எப்போது கோபம் வருகிறதோ, அப்போது உங்கள் இருவருக்கும் சாபவிமோசனம் கிட்டும் என்றார். பிரம்மதேவனால் சபிக்கப்பட்ட மகாபிஷக் பூலோகத்தில் சந்தனு என்ற மன்னனாகப் பிறந்தான். ஒருநாள் சந்தனு மன்னன் கங்கைக்கரையில் உலாவிக் கொண்டிருக்கும்போது ஓர் அழகிய பெண்ணைக் கண்டான். அவளை மணக்க விரும்பி அவளை நாடினான். அவள் ஓர் நிபந்தனை விதித்தாள்.

மன்னா, என்னைத் திருமணம் செய்து கொண்டதும் பிறக்கும் குழந்தைகள் எனக்கு சொந்தம். அந்தக் குழந்தைகளை என் விருப்பப்படி கையாள்வேன். அதற்கு நீ என்னிடம் விளக்கம் கேட்கக்கூடாது. அப்படி கேட்டால் நான் அன்றே உன்னை விட்டு விலகிவிடுவேன் என்றாள். சந்தனுவும் அவள் அழகில் மயங்கி அவள் சொன்ன நிபந்தனைக்குக் கட்டுப்பட்டான். இருவருக்கும் திருமணம் நடந்தது. நிபந்தனை விதித்த பெண்தான் கங்காதேவி. திருமணத்திற்குப்பின் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை எடுத்துச்சென்று நதியில் சங்கமமாக்கினாள். இப்படியாக ஏழு குழந்தைகளை கங்கை நதியில் சங்கமமாக்கினாள். தன்னை விட்டு விலகிவிடுவாளோ என்ற அச்சத்தில் கங்காதேவியிடம் எதுவும் கேட்காமல் இருந்தான் சந்தனு. என்றாலும் பிள்ளைப் பாசம் காரணமாக எட்டாவது குழந்தை பிறந்ததும், கங்காதேவியைத் தடுத்தான். நிபந்தனையை மன்னன் மீறிவிட்டதால் அவனிடமிருந்து விலகினாள் கங்காதேவி.  கங்காதேவி குழந்தைகளாகப் பிறந்து நற்கதி அடைந்தவர்கள் வசுக்கள் ஆவர். எட்டாவதாகப் பிறந்த குழந்தைதான் பின்னர் பிஷ்மர் எனப்பட்டார்.

அஷ்ட வசுக்களில் ஒருவன் ப்ரபாசன் என்பவன், அவனது மனைவி வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்திலிருந்த அழகிய பசுவான நந்தினியைக் கண்டாள். அதை எப்படியும் கைப்பற்றி தன்னிடம் தருமாறு கணவனிடம் வேண்டினாள். மனைவியின்மீதிருந்த பிரேமையால், வசிஷ்ட முனிவர் ஆசிரமத்தில் இல்லாத சமயம், தன் தோழர்களான ஏழு பேர்களுடன் சென்று நந்தினி என்ற பசுவைத் திருடி தன் மனைவியிடம் கொடுத்தான். ஆசிரமத்திற்கு வந்த முனிவர் பசுவைக் காணாமல் திகைத்தார். தன் தவவலிமையால் என்ன நடந்தது என்பதை அறிந்தார். அஷ்ட வசுக்களையும் உடனே அழைத்து விசாரித்தார். உண்மையைச் சொன்னார்கள். நந்தினி என்ற பசுவையும் கொண்டுவந்து கொடுத்தார்கள். இருந்தாலும் கோபம் தணியாத முனிவர், அஷ்ட வசுக்களையும் பார்த்து சாபம் கொடுத்தார் அஷ்ட வசுக்களில் ஏழு பேர் ப்ரபாசனுக்கு உடந்தையாக இருந்ததால் பூலோகத்தில் பிறந்து உடனே சாபவிமோசனம் அடைவீர்கள். ஆனால் மனைவிக்காக நந்தினியைத் திருடிய எட்டாவது வசுவான ப்ரபாசன் மட்டும் பூலோகத்தில் பிறப்பது மட்டுமல்லாமல், நெடுங்காலம் வாழ்ந்து பல சோதனைகளுக்கு ஆளாவான் என்றார்.

அந்த ப்ரபாசனே கங்காதேவிக்கு எட்டாவதாகப் பிறந்த குழந்தை. அது அவளிடமே வளர்ந்தது. அந்தக் குழந்தைக்கு பரசுராமர் என்ற அந்தண வேத விற்பன்னரிடம் சகல கலைகளையும் கற்பிக்கச் செய்து, சிறந்த வீரனாகத் திகழும்படி வளர்த்தாள். தன் மகனுக்கு முப்பத்தாறு வயதானபோது, சந்தனு மன்னனைச் சந்தித்து அவனிடம் மகனை ஒப்படைத்தாள் கங்காதேவி. ஒருநாள் சந்தனு மன்னன் கங்கைக் கரையோரம் மீனவப் பெண் ஒருத்தியைக் கண்டான். அவள் அழகில் மயங்கிய சந்தனு, அவள் தந்தையைச் சந்தித்து, அவளை மணக்க விரும்புவதாகக் கூறவே, செம்படவ மன்னன் ஓர் கடுமையான நிபந்தனையை விதித்தான். என் மகளுக்கும் உமக்கும் திருமணம் நடைபெற வேண்டுமென்றால், உங்கள் மைந்தனுக்கு எக்காரணத்தைக் கொண்டும் ராஜ்ஜியத்தை ஆளும் அதிகாரத்தைக் கொடுக்கக்கூடாது. என் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைதான் வருங்காலத்தில் அரச பட்டம் சூட்டப்பெற்று அரசாள வேண்டும். இதற்கு சம்மதமானால் திருமணம் நடைபெறும் என்று கூறினான்.

இந்த பதிலை எதிர்பாராத சந்தனு, மிகவும் கவலைகொண்டான். செம்படவ மன்னன் மகளான சத்தியவதியை நினைத்து சோர்வடைந்து மெலிந்தான். தன் தந்தையின் நிலையை அறிந்த கங்கையின் மைந்தன் செம்படவ மன்னனைச் சந்தித்தான். நான்தான் கங்கையின் மைந்தன் கங்கா தத்தன். சந்தனு மன்னரின் மகன். என் தந்தை உங்கள் மகள் சத்தியவதியை மிகவும் நேசிக்கிறார். அதற்கு நான் தடையாக இருக்கமாட்டேன். உங்கள் நிபந்தனைப்படி உங்கள் பேரன் வருங்காலத்தில் பட்டாபிஷேகம் செய்துகொண்டு அரசாட்சி செய்யலாம். நான் அரச வாழ்க்கையிலிருந்து விலகிப் போகிறேன். அதுமட்டுமல்ல; நான் என்றும் சுத்த பிரம்மச்சாரியாகவே இருப்பேன். எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன். இது என் தாய் கங்காதேவியின்மேல் சத்தியம் என்று வாக்குறுதி கொடுத்தான். அப்போது பீஷ்ம பீஷ்ம என்று கங்கையின் மைந்தன் மேல் தேவர்கள் மலர்மழை பொழிந்தார்கள்.  பீஷ்மர் என்றால் கடுமையான விரதத்தை மேற்கொள்பவன் என்பது பொருள். இதற்குப் பிறகுதான் கங்கையின் மைந்தனான கங்காதத்தனை பீஷ்மர் என்று எல்லாரும் அழைத்தார்கள். சந்தனுவிற்கும் செம்படன மன்னன் மகள் சத்தியவதிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. வருடங்கள் பல கடந்தன. சந்தனு மன்னன் காலமானான்.

சந்தனுவின் மறைவிற்குப்பிறகு, சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் பிறந்த மூத்த மகன் சித்ராங்கதனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார் பீஷ்மர். அவன் போர் ஒன்றில் மரணமடையவே, இரண்டாவது மகன் விசித்திர வீர்யனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அவனுக்குத் திருமணம் செய்துவைக்க பீஷ்மர் முயற்சிக்கையில், காசி மன்னனின் மூன்று மகள்களுக்கு சுயம்வரம் ஏற்பாடாகியிருந்தது. அந்த மூன்று பெண்களையும் பீஷ்மர் கடத்திக் கொண்டு வந்தார். அதில் இருவர் விசித்திரவீர்யனை மணந்துகொண்டார்கள் மூத்தவளான அம்பை என்பவள் தான் சால்வன் என்ற மன்னனை விரும்புவதாகவும், அவனை மணக்கச் செல்கிறேன் என்று பீஷ்மரிடம் விடைபெற்றுச் சென்றாள். அவனோ, அவளை ஏற்க மறுத்துவிட்டதால், பீஷ்மரிடம் திரும்பி வந்து, நான் கடத்தப்பட்டவள் என்பதால் என்னை சால்வன் மணக்க மறுத்துவிட்டான் என்று வருந்தினாள். பீஷ்மர் அவளுக்கு ஆறுதல் சொன்னார். அப்போது அவள் மனதில் பீஷ்மரையே மணந்துகொண்டால் என்ன? என்ற எண்ணம் எழுந்தது. தன் விருப்பத்தைச் சொன்னாள் அம்பை. பீஷ்மரோ தான் சுத்தப் பிரம்மச்சாரி என்றும் சத்தியம் தவறமாட்டேன் என்றும் சொன்னதுடன் உனக்கு ஏற்றவனைத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறினார். அவளோ அவரையே மணப்பேன் என்று உறுதியாக இருந்தாள்.

பீஷ்மரின் குருநாதரான பரசுராமர் சொன்னால் பீஷ்மர் கேட்பார் என்று நினைத்த அம்பை, பரசுராமரிடம் சென்று விஷயத்தைக் கூறினாள். பரசுராமரும் ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்து, பீஷ்மரை சந்திக்கப் புறப்பட்டார். பரசுராமர் சொன்னபோதும் பீஷ்மர் ஏற்கவில்லை எனவே இருவருக்கும் பகை ஏற்பட்டது. அதன் விளைவால் இருவருக்கும் போரும் ஆரம்பமானது. இருபத்து மூன்று நாட்கள் போர் நடந்தது. பரசுராமரால் பீஷ்மரை வெல்ல முடியவில்லை. இந்தப் போரைக் கண்ட நாரதர் பரசுராமரிடம், குருவானவர் அந்தணர் அந்தணர் போர் செய்வது தர்மப்படி நியதியில்லை போரைத் தவிர்க்கவும், க்ஷத்ரியர்களே போருக்குத் தகுந்தவர்கள் என்று சமாதானம் கூறி போரை நிறுத்தினார். பின்னர் அம்பையைச் சந்தித்த பரசுராமர் தன் நிலையைக் கூறினார். என்னை மணக்க மறுத்த பீஷ்மரை எப்படியும் நானே கொல்வேன் என்று சபதமிட்ட அம்பை- தன்னை மாய்த்துக் கொண்டாள்.  மறுபிறவியில் அம்பை, துருபதன் என்ற மன்னனுக்கு மகளாகப் பிறந்தாள். அவள் வளர்ந்துவிட்ட நிலையில், அவள் பிறவிக் காரணத்தை அறிந்துகொண்ட துருபதன், பீஷ்மரின் பகைக்கு அஞ்சி அவளை காட்டுக்கு அனுப்பினான். அரண்மனையிலிருந்து வெளியேறிய அவள் பெயர் சிகண்டினி.

சிகண்டினி எப்படியும் பீஷ்மரைக் கொல்லவேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருந்தாள். பீஷ்மரைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்தாள். சுத்த வீரனுடன் போர் புரிவாரேயன்றி, அவர் எதிரே பெண்ணோ அலியோ வந்தால் போர்புரிய மாட்டார் என்பதை அறிந்த அம்பையான சிகண்டினி, ஸ்தூனன் என்ற கந்தர்வன் உதவியால் ஆணாக மாறினாள். இப்பொழுது இவள்(இவன்) பெயர் சிகண்டி ஒரு திருநங்கையாகத் திகழ்ந்தான். ஆணாக மாறிய சிகண்டி தன் தந்தையைச் சந்தித்து, இனி பீஷ்மரைக் கண்டு பயப்பட வேண்டாம். அவரை எப்படியும் கொல்வேன். அல்லது அவர் மரணத்திற்கு காரணமாக நான் திகழ்வேன் என்று சபதமிட்டான். துருபதன் செய்வதறியாது கவலைப்பட்டான். பஞ்சபாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் மூளும்நிலை ஏற்பட்டது. விதிவசத்தால் பீஷ்மர் துரியோதனன் பக்கம் இருந்தார். துரியோதனன் படைகளுக்குத் தலைமை தாங்கிய பீஷ்மர் போர்முனையில் அர்ச்சுனனை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. பீஷ்மரைக் கொல்ல தக்க சமயத்தை எதிர்பார்த்த சிகண்டி போர் முனைக்கு வந்தான்.

சுத்த வீரனுடன்தான் போர் புரிவேன் என்ற கொள்கையுடைய பீஷ்மரின் முன்வந்து பீஷ்மருக்கு சவால்விட்டான். ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் காட்சி தந்த சிகண்டியுடன் போர்புரிய விருப்பமில்லாத பீஷ்மர் தயங்கினார். அர்ச்சுனன் பிஷ்மர்மீது அம்பு எய்வதற்குமுன், சிகண்டி பீஷ்மர்மீது அம்பு எய்தான். அர்ச்சுனன் சிகண்டியை முன்நிறுத்தி போர் புரிகிறான் என்பதை அறிந்த பீஷ்மர், சிகண்டி எய்த அம்பினை இடது கையால் பிடித்து முறித்து எறிந்தார். அப்போது அர்ச்சுனன் பீஷ்மர்மீது சரமாரியாக அம்புகளை எய்தான். அந்த அம்புகளால் துளைக்கப்பட்ட பீஷ்மர் கீழே சாய்ந்தார். ஆனால் பூமியில் விழாமல், அந்த அம்புகள் படுக்கையாக பூமியில் பதிந்து பீஷ்மரைத் தாங்கின ஆனால் உயிர் பிரியவில்லை. தான் விரும்பிய நேரத்தில் முக்தியடையலாம் என்ற வரத்தின்படி உத்ராயனப் புண்ணிய காலத்திற்காகக் காத்திருந்தார் பீஷ்மர் உத்ராயன காலமும் வந்தது. ஆனால் பீஷ்மரின் உயிர் அவர் விரும்பியதுபோல பிரியாததால் அவஸ்தைக்குள்ளானார். காரணம் என்ன என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். உத்ராயன காலத்தில் உயிர் பிரிந்தால் எந்தத் தடையுமின்றி சொர்க்கம் போகலாம் என்பது சாஸ்திரம் சொல்லும் விதியாகும்.

அனைவரும் வந்து அவரை தரிசித்துவிட்டுச் சென்றார்கள். பஞ்சபாண்டவர்களும், பகவான் கிருஷ்ணரும் வந்திருந்தார்கள். பீஷ்மர், யார்மீதும் கோபப்படவில்லை. அனைவருக்கும் இறக்கும் நிலையிலும் போதனைகள் பல கூறினார். அதில் ஒன்றுதான் விஷ்ணு சகஸ்ரநாமம். தான் விரும்பியபோல் மரணம் ஏற்பட வில்லையே ஏன்? மனதிற்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்தார் வேத வியாசர். வியாசரைக் கண்டதும் அவரிடம் பீஷ்மர், நான் என்ன பாவம் செய்தேன். நான் விரும்பிய படி ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை? என்று வருந்தினார். அதற்கு வியாசர், பீஷ்மரே, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்குத் தீமை அநீதிகளைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும் கூட பாவம்தான் அதற்கான தண்டனையையும் அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில்தான் இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடல் அளவில் அவஸ்தைபட்டாலும், அதை விடஉள்ளம் படாத பாடுபடும். அந்த வேதனையே பெரும் தண்டனைதான் என்றார். பீஷமருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை. அந்த அவையில் பீஷ்மரும் இருந்தார். ஒரு மாபெரும் அநியாயம் நடந்தும் அதைத் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தும், அதைத் தடுக்காமல் போனதன் காரணமாகத்தான் இப்போது அம்புப் படுக்கையில் உயிர் பிரியாமல் தவிப்பதை உணர்ந்தார் பீஷ்மர்.

வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம், இதற்கு என்ன பிராயச்சித்தம்? என்று கேட்டார். யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போது அந்தப் பாவம் அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது. எனவே பீஷ்மர் நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது உன்னிடமிருந்து அகன்றுவிட்டது. இருந்தாலும் திரவுபதி கண்ணா, என்னைக் காப்பாற்றமாட்டாயா என்று துரியோதனன் அவையில் கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வையிருந்தும் பார்த்தும் பாராததுபோல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக்கேட்காத உன் வாய், உன்னிடமிருந்த அளப்பரிய தோள் வலிமையை சரியான நேரத்தில் உபயோகிக்காமலிருந்த உன் வலுவான தோள்கள், வாளையெடுத்து எச்சரிக்கைவிடாத உன் உறுதியான இரு கைகள், ஆரோக்கியமுடன் அமர்ந்திருந்தபோது இருக்கையிலிருந்து எழாமல் இருந்த உன் இரு கால்கள், நல்லது எது? கெட்டது எது என்று யோசிக்காத உன் புத்தி இருக்கும் இடமான உன் தலை ஆகியவற்றுக்கும் தண்டனை கிடைத்தே தீரவேண்டும் என்பது விதி என்றார். அப்படியென்றால் என்னுடைய இந்த அங்கங்களையும் பொசுக்கக்கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியன்தான். சாதாரண அக்னியின் சூடு போதாது. என் அங்கங்களைத் தீய்க்க சூரியசக்தியைப் பிழிந்து தாருங்கள் என்று தன்னிலை உணர்ந்து வேதவியாசரிடம் வேண்டினார் பீஷ்மர்.

உடனே வேதவியாசர் முன்கூட்டியே கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, பீஷ்மா இந்த எருக்கன் இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழு சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும் என்றவர், அதன்படி பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார். பீஷ்மருக்கு வருங்காலத்தில் சிரார்த்தம் போன்றவை செய்ய யாருமே இல்லையே. திருமணமாகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக அவர் உயிர் நீத்துவிட்டாரே என்று வருந்தினார் தர்மர். அப்போது வியாசர். தர்மரே வருந்த வேண்டாம் ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஓர் உயர்நிலைக்குப் போய்விடுகிறார்கள். சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகத் திகழ்பவர்கள் தான் பாவிகள். ஆனால் பீஷ்மர் தன் வாக்கு தவறாத தூய்மையானவர். இனி வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வார்கள். அதோடு பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் கிடைக்கும் என்று வியாசர் கூறினார்.

 
மேலும் துளிகள் »
temple news
ராமாயண காலத்தில் சீதையை, ராவணன் இலங்கைக்கு கடத்திச் சென்றான். அங்கு இருந்து சீதையை மீட்டு வர ராமனுக்கு, ... மேலும்
 
temple news
முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை ... மேலும்
 
temple news
பொதுவாக கோவில்களை ஹிந்து மதத்தவர் கட்டுவது வழக்கம். ஆனால் முஸ்லிம் சமுதாயத்தினர் ஒருவர் அற்புதமான ... மேலும்
 
temple news
சோமவார பிரதோஷம், சிவராத்திரி சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இன்று சிவனை வழிபட மிக ... மேலும்
 
temple news
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar