பதிவு செய்த நாள்
22
ஜூலை
2022
10:07
மேல்மருவத்துார்: சோத்துப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில், அக்னி வசந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று படுகளம் நிகழ்ச்சி நடந்தது. மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் கிராம குளக்கரையில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.இதன் 154ம் ஆண்டு அக்னி வசந்த திருவிழா, இம்மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் மாலையில், மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது. வில் வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜ சுய யாகம், திரவுபதி துகில், அர்ஜுனன் தபசு, கர்ண மோட்சம், பதினெட்டாம் போர், துரியோதனன் படுகளம் போன்ற கட்டை கூத்து நாடகம் நடக்கிறது. துரியோதனன், பீமன் சண்டையிடும் படுகளம் நிகழ்ச்சியும், பாஞ்சாலி கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும், வெகு விமரிசையாக நடந்தது.இதற்காக பிரமாண்ட களிமண் சிலை அமைக்கப் பட்டு, ஏராளமானோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடந்தது. இரவு தீமிதி திருவிழா நடந்தது. இன்று, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.