பதிவு செய்த நாள்
09
நவ
2011
03:11
துலாம் (50/100) ஏழரையின் உச்சத்தை எப்படியோ சமாளியுங்க!
தோற்றப் பொலிவின் மூலம் பிறரை வசீகரிக்கும் துலாம்ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருந்த சனிபகவான் இப்போது ஜென்மச்சனியாக ராசியில் அமருகிறார். இது ஏழரைச் சனியின் உச்சகட்டம். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே தைரியம், புகழ், களத்திரம், தொழில் ஸ்தானங்களை பார்க்கிறார். ஆனாலும், ராசிநாதன் சுக்கிரனுக்கு சனி நட்புக்கிரகமாகி, துலாம் வீட்டில் உச்சம் பெறுவதால் அதன் கெடுபலன் குறைந்தளவிலேயே இருக்குமென எதிர்பார்க்கலாம். நீங்கள் உயர்நிலையில் இருந்தால் மதிப்பதும், தாழ்நிலைக்குச் சென்றால் ஏளனம் செய்வதுமாக உறவினர்கள் இரட்டை வேடம் போடுவர். செயல்களில் குளறுபடியும், சிந்தனையில் குழப்பமும் இருக்கும். நற்குணம் உள்ளவர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது சிரமங்களைக் குறைக்கும். பேச்சில் கண்டிப்பு, துடுக்குத்தனத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. சமூகத்தில் கிடைத்த அந்தஸ்துக்கு குறையேதும் வராது. வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு இருக்கும். துலாமுக்கு பிடித்தவர் சனி என்பதால் சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குகிற அனுகூல பலன் ஏற்படும். புத்திரர்கள் உங்கள் சொல்லை கேட்கமாட்டார்கள். அவர்கள் போக்கில் சென்று விட்டுப்பிடிப்பதே நல்லது. பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானத்தின் அளவு குறையும்.
உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால். சிறு பிரச்னையானாலும் டாக்டரைப் பாருங்கள். எதிரிகளால் பெரும் பிரச்னைகள் ஏற்படலாம். இந்த வகையில் செலவும் அதிகமாகும். அவர்கள் திட்டினாலும் பொறுமை காப்பதே பெருமை. கணவன், மனைவியிடையே ஒருவர் கருத்தை ஒருவர் புரிந்துகொள்ளாமல் தேவையற்ற சண்டையிடும் நிலை வரும். விட்டுக்கொடுத்து நடந்தால், சனிபகவான் உங்கள் பக்கம் திரும்பமாட்டார். நண்பர்களிடம் எதிர்பார்க்கிற உதவி ஓரளவு கிடைக்கும். பயணங்களிலோ பிற வகைகளிலோ வருகிற ஆபத்தை தவிர்க்க இஷ்டதெய்வத்தை தினமும் காலையில் நினைத்து விடுங்கள். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற இப்போதைக்கு இயலாது. வெளியூர் பயணம் சிறப்புற அமையும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்களுக்கு கவனம் வேண்டும். சரியான நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, டிராவல்ஸ், டிபார்ட்மென்டல் ஸ்டோர், கல்வி, நிதிநிறுவனம், ஓட்டல், லாட்ஜ் அதிபர்கள், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், ரைஸ்மில், பால்பண்ணை, ஆட்டோமொபைல், அச்சகம், பட்டாசு, மின்சார, மின்னணு சாதனம், மினரல் வாட்டர், பர்னிச்சர் உற்பத்தி செய்பவர்களுக்கு ஓரளவுக்கு உற்பத்தியும், சுமாரான லாபமும் கிடைக்கும். மற்றவர்கள் இவர்களை விட சற்று அதிக லாபம் பெறுவர். பயணம் அதிகரிக்கும். சக தொழில் சார்ந்தவர்களிடம் அதிக எதிர்பார்ப்பு கூடாது.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், பால் பொருள், குளிர்பானம், எண்ணெய், பெயின்ட், அழகுசாதனம், மீன், மின்சார, மின்னணு பொருள், இறைச்சி, மருந்து விற்பனை செய்பவர்கள் கூடுதல் மூலதன தேவைக்கு உட்படுவர். இதனால் கடன்சுமை ஏற்படும். சுமாரான லாபம் உண்டு. சரக்கு வினியோகத்தில் பாதுகாப்பு நடைமுறை அவசியம். கொள்முதலை அதிகப்படுத்தினால் பணச்சிக்கலுக்கு ஆளாக நேரலாம்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சோம்பல் தன்மைக்கு உட்படுவர். பொறுப்பு உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாகாமல் தப்பலாம். சக பணியாளர்கள் சொல்கிற கருத்துக்களை மதித்து நடப்பது போல நடிக்கவாவது செய்யுங்கள். நீண்டகால நண்பர்களால் உதவி உண்டு. குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்கு கடன் பெறுவீர்கள். மின்சார பணியில் உள்ளவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதால் சிரமம் தவிர்க்கலாம். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களின் மனதில் உற்சாக குறைவு ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். சலுகைகள் ஓரளவே கிடைக்கும். சக பணியாளர்களின் நல்ல கருத்துக்களை மதித்து ஏற்றுக்கொள்வீர்கள். குடும்பப் பெண்கள் பொறுப்புகளை கூடுதலாக ஏற்கிற சூழ்நிலை பெறுவர். கணவரிடம் கருத்து வேறுபாடு வளராத அளவிற்கு நடப்பது நலம். வீட்டுத்தேவைக்கு பற்றாக்குறை ஏற்படும். சிக்கனம் சிரமம் தவிர்க்கும். சுயதொழில் புரியும் பெண்கள் தீவிரமாகப் பாடுபட்டால் தான் சுமாரான லாபத்தையாவது பெற முடியும்.
மாணவர்கள்: இன்ஜனியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, பியூட்டீஷியன், ஜர்னலிசம், கலை, அறிவியல், வணிகத்துறை, கம்ப்யூட்டர் மாணவர்களுக்கு படிப்பதில் ஆர்வக்குறைவும், ஞாபகத்திறன் வளர்வதில் சிரமமும் இருக்கும். பிற துறை மாணவர்களும், ஆரம்பக் கல்வியினரும் சுமாராகவே படிப்பர். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணை புரிவர். ஆடம்பரப் பொருள் வாங்கும் விருப்பங்களை தவிர்ப்பது நல்லது. விளையாட்டு பயிற்சியில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பெற்றோரின் அனுமதி இன்றி பிறரது உதவியை ஏற்பது சிக்கலை உண்டாக்கும்.
அரசியல்வாதிகள்: மூன்றாண்டுகளுக்கு சோதனையான நேரமே. எதிரிகள் தொந்தரவு செய்வர். சிலருக்கு எதிர்பார்த்த பதவி அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். உறவினர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் திறமைமிகு பணியாளர்களை நியமித்தால் தான், உற்பத்தி, விற்பனையைத் தக்க வைக்கலாம்.
விவசாயிகள்: விவசாயப் பணிகளை நிறைவேற்ற தேவையான அனைத்து வசதியும் கிடைக்கும். மந்தநிலையைத் தவிர்த்து பாடுபட்டால் தான் மகசூல் உயரும். கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரங்கள் வரும். பொறுமையுடன் இருங்கள்.
பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வழிபடுவதால் மனதில் புத்துணர்வும் தொழிலில் சிறப்பும் ஏற்படும்.
பரிகாரப் பாடல்
ஆயிரம் பெயர் கொண்டவனின்
அழகுக் கையில் சுழல்பவரே!
அன்புவழி நடப்போர் சங்கடம்
அழிக்க துள்ளியோடி விரைபவரே!
கஜேந்திரனின் காலைப் பிடித்த
கடுமுதலை முதுகை அறுத்தவரே!
பாவத்தை வேரறுக்கும்
பரம்பொருளே! காத்தருள்வாய்.
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசிக்கு இடம்பெயருகிறார். இதனால் உங்கள் ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனி என்கிற நிலை திரும்பவும் வருகிறது. ஆடம்பரத்தை தவிர்த்து சிக்கன நடைமுறை பின்பற்றுவதால் சிரமங்களை பெரிதும் தவிர்க்கலாம். மிகவும் அன்பு பாராட்டுபவர்களிடம் உரிமைகொண்டு கடின வார்த்தை பேசுவதை தவிர்ப்பது நல்லது. நிலுவைப்பணம் வசூலாகும். வழக்கு விவகாரத்தில் சாதகத் தீர்வு வரும். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும்.
விருச்சிகம்(55/100) வந்துட்டதைய்யா! ஏழரை வந்துட்டதைய்யா!
முயற்சி திருவினையாக்கும் என்பதை மனதில் நிறுத்தி எதிலும் வெற்றி பெறுகிற விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் மிகவும் அனுகூலமாக இருந்த சனிபகவான் இப்போது ஏழரைச் சனியின் துவக்கமாக ராசிக்கு பன்னிரெண்டாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். கடந்த காலங்களில் சனிபகவானின் கருணையினால் அளப்பரிய நற்பலன்களை பெற்றீர்கள். இனி, ஏழரையின் தாக்கத்தால் அதை எதிர்பார்க்க இயலாது. தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 2, 6, 9ம் இடங்களான தனம், குடும்பம், எதிரி, பிணி, பிதா, பாக்ய ஸ்தானங்களை பார்க்கிறார். உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு சம அந்தஸ்துள்ள கிரகமான சுக்கிரன் வீட்டில் உள்ளார். உங்கள் கைவசம் இருக்கிற பணத்தை சுதந்திரமாக செலவு செய்ய இயலாத மாறுபட்ட நிலை உருவாகும். பேச்சில் எரிச்சல் உணர்வும், விரக்தியும் சமஅளவில் கலந்திருக்கும். கண் தொடர்பான பிணி அணுகாதிருக்க கவனமான மருத்துவமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சமூகத்தில் பெற்ற நற்பெயரும் புகழம் ஓரளவு துணை நிற்கும். உடன் பிறந்தவர்கள் உருவாக்குகிற நிர்ப்பந்தத்தினால் தேவையற்ற செலவு ஏற்படும். வீடு, வாகன வகையில் தேவையான மாற்றம் செய்வீர்கள்.
தாயின் அன்பு, ஆசி உங்களின் முக்கிய செயல்களுக்கு துணை நிற்கும். புத்திரர்கள் கவனக்குறைவான நடவடிக்கைகளால் சில சிரமங்களை எதிர்கொள்வர். உங்களின் மென்மையான பேச்சு மூலம் அவர்களை நல்வழியில் நடத்துங்கள். உடல்நலம் ஒருநேரம் போல மறுநேரம் இராது. நேரத்துக்கு உணவு, தகுந்த ஓய்வு எடுப்பது அவசியம். எதிரிகளால் இருந்த கஷ்டங்கள் பெருமளவில் குறையும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றி மகிழ்வீர்கள். கணவன், மனைவி எதிரெதிர் கருத்துடன் செயல்படும் கிரகநிலை உள்ளது. குடும்பப் பெருமை, நலன் கருதி விட்டுக்கொடுத்து செயல்படும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். நண்பர்கள் பிறரது பேச்சைக் கேட்டு, உங்களிடம் பிரச்னை செய்வர். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் ஓரளவு லாபம் பெறுவர்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, டிராவல்ஸ், ஓட்டல், லாட்ஜ், அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், காகிதம், மின்சார, மின்னணு சாதனம், கட்டுமானப்பொருள் உற்பத்தி செய்வோர் தங்கள் நிறுவனத்தின் பெயர், புகழை வளர்ப்பதில் கூடுதல் கவனம் கொள்வர். உற்பத்தி ஓரளவுக்கு இருக்கும். சுமாரான லாபம் கிடைக்கும். நிர்வாகச்செலவு கூடும். பேச்சில் நிதானமும் கண்ணியமும் கலந்தால் பணியாளர்களின் அதிருப்தியை சம்பாதிப்பதில் இருந்து தப்பலாம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மருந்து, எண்ணெய், மின்சார, மின்னணு சாதனம், கம்ப்யூட்டர், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள், தோல் பொருள், பூ, காய், இறைச்சி விற்பனை செய்பவர்கள் சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்வர். மற்ற பொருட்களை விற்பவர்கள் லாபம் குறைத்து விற்றால் நிலைமை சீராக இருக்கும். சரக்கு வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும். அளவான கொள்முதல், ரொக்கத்திற்கு விற்பனை என்ற நடைமுறையை பின்பற்றுவது நல்லது. வியாபாரம் தொடர்பான பயணங்கள் புதிய அனுபவத்தைப் பெற்றுத்தரும்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். நிர்வாகத்திடம் நற்பெயர் பெற அதிக உழைப்பு அவசியம். சலுகைகள் ஓரளவுக்கே கிடைக்கும். சிலருக்கு பணியிட மாற்றம், வீடு, வாகன மாற்றம் இருக்கும். குடும்பத்தின் முக்கிய செலவை சரிக்கட்ட அலுவலகத்தில் கடன் வாங்க வேண்டி வரும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்னைகளைப் பெரும்பாலும் தவிர்த்து விடலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள பணிச்சுமைக்கு உட்படுவர். பணி சார்ந்த குளறுபடிகள் மனக்கஷ்டத்தை தரும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். சலுகைகள் பெறுவதில் தாமதம் இருக்கும். குடும்பப் பெண்கள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகலாம். சுபநிகழ்ச்சிகளை நடத்த கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். தாய்வழி சீர்முறை எதிர்பார்த்தபடி கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை உயர்த்தும் வகையில் நடைமுறை மாற்றங்களைப் பின்பற்றுவர். பணவரவு சுமாரான அளவில் கிடைக்கும்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், கேட்டரிங், வணிகவியல், கலைத்துறை, அறிவியல் துறை மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து படிப்பதால் மட்டுமே எதிர்பார்த்த தரத்தேர்ச்சி கிடைக்கும். மற்ற துறை மாணவர்கள் கவனக்குறைவால் மார்க் குறைய நேரிடலாம். குறிக்கோளை எட்ட வேண்டுமென்ற லட்சியமுள்ள மாணவர்களுக்கு சனீஸ்வரரின் உதவி நிச்சயம் உண்டு. சக மாணவர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது. படிப்புக்கான பணவசதி கிடைக்க தாமதமாகும். படித்து முடிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வருமானத்துக்கு குறைவாக வேலை கிடைக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வர்.
அரசியல்வாதிகள்: எதைச் செய்தாலும் பணம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலிடும். இந்த எண்ணம் சட்ட சிக்கலுக்கு வழிவகுக்கும். ஆதரவாளர்கள் அதிருப்தி கொள்வர். அரசு அதிகாரிகளின் உதவி எதிர்பார்க்கும் அளவுக்கு இராது. எதிரிகளின் தொல்லை குறையும். குடும்ப உறுப்பினர்கள் அரசியல் பணியில் தலையிட்டு கெட்ட பெயரை ஏற்படுத்தலாம். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு லாபம் சுமாராகவே இருக்கும்.
விவசாயிகள்: எதிர்பார்ப்பைவிட திருப்திப்படும் வகையில் மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் லாபம் உண்டு. கூடுதல் நிலம் வாங்க உருவாகிற வாய்ப்பை கடன் வாங்கினால் தான் செயல்படுத்த முடியும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் மனதில் துணிச்சலும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.
பரிகாரப் பாடல்
ஆடிப்பாடி அகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாள் நுதலே.
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி கன்னிராசியில் பிரவேசிக்கிறார். இந்த அமர்வு ஆதாயச்சனி என்ற பெயர் பெற்று உங்கள் வாழ்வில் வளர்ச்சி தருகிற புதிய திருப்பங்களை ஏற்படுத்தும். இந்த ஆறுமாத காலத்தில் தாராள பணவரவு, தொழில் அபிவிருத்தி உண்டாகும். உறவினர்களிடம் மதிப்பு, மரியாதை பெறுவீர்கள். கூடுதல் சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்வுகளும் நிறைந்திருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் பதவி, பொறுப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்படும் பிரச்னை குறையும்.
தனுசு (85/100) மனசை நிறைக்க வசந்தம் வந்தாச்சு!
நல்ல எண்ணத்துடன் செயல்படும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் அனுகூலக் குறைவாக இருந்த சனிபகவான் இப்போது ராசிக்கு லாப ஸ்தானமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசி, ராசிக்கு 5, 8ம் இடங்களை பார்க்கிறார். ராசிநாதன் குருவுக்கு பகை கிரகமான சுக்கிரன் வீட்டில் சனி உள்ளார். இதனால் எதிரிகளும் பார்த்து வியக்கிற அளவில் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். புதிய சிந்தனைகளை செயல்படுத்தி வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவீர்கள். தொழிலில் வளர்ச்சியும் தாராள பணவரவும் காண்பீர்கள். பேச்சில் நிதானம் வெளிப்படும். இளைய சகோதரர் உங்களை தந்தைக்கு நிகராக வைத்து நல்வழியில் செயல்படுவர். சமூகப்பணியாற்றி மக்கள் மத்தியில் புகழ் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் திட்டமிட்ட மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள்.
வாகன பயணங்களில் மிதவேகம் பின்பற்றுவது அவசியம். பூர்வசொத்தில் பெறுகிற வருமானம் உயரும். புத்திரர் நல்லவிதமாக படித்து கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் பெறுவர். புத்திர வகையிலான மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். இஷ்டதெய்வ வழிபாட்டால் வாழ்வு நலம் பெறுவீர்கள். எதிரியின் தந்திரம் பயனற்றுப் போகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்கள் வகையில் விருந்து, உபசரிப்பில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். தம்பதியர் பாசத்துடன் சந்தோஷ வாழ்வு நடத்துவர். நண்பர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை மறையும். விலகி சென்ற நண்பர்கள் வலியத் தேடி வந்து அன்பு பாராட்டுவர். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணத்தால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் சார்ந்த வகையில் குறுக்கிட்ட சிரமம் நீங்கி நன்மை உண்டாகும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் சனியின் வக்ரகதிக்கு பிறகு வரும் காலங்களில் வெற்றியும், நல்ல லாபமும் காண்பர்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், கல்வி, நிதி நிறுவனம், மருத்துவமனை, டிபார்ட்மென்டல் ஸ்டோர், லாட்ஜ், ஓட்டல் நடத்துவோர், காகிதம், டெக்ஸ்டைல்ஸ், தோல், கட்டுமானப்பொருள், பர்னிச்சர், பாத்திர உற்பத்தியாளர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவர். மற்றவர்களுக்கும் உற்பத்தி சிறந்து தாராள பணவரவைப் பெற்றுத்தரும். புதிய தொழில் துவங்கவும், சொத்து வாங்கவும் யோகம் உண்டு. சக தொழிலதிபர்களின் மத்தியில் அந்தஸ்து உயரும். சிலருக்கு தொழில் கூட்டமைப்பில் கவுரவமான பதவி கிடைக்கும். வெளிநாடு சுற்றுலா பயணத்திட்டம் நிறைவேறும்.
வியாபாரிகள்: தங்க நகை, ரெடிமேட் ஆடை, ஸ்டேஷனரி பொருட்கள், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், மருந்துப் பொருட்கள், சமையலறை சாதனங்கள், தோல் பொருட்கள், பூஜை பொருட்கள், இனிப்பு பண்டங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டிட கட்டமானப் பொருள் போன்றவற்றை விற்பனை செய்பவர்களுக்கு சந்தையில் இருந்து வந்த போட்டி குறையும். தாராள விற்பனை, அபரிமிதமான பணவரவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி நற்பெயர் பெறுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். திட்டமிட்டபடி புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணித்திறமையில் முன்னேற்றம் பெறுவர். குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி நிர்வாகத்திடம் நற்பெயர் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். சம்பள உயர்வு அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் நட்புறவு பலப்படும். விருந்து உபசரிப்பில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றத் தேவையான பணவசதி கிடைக்கும். எந்திர பயன்பாடு, தொழில்நுட்பம் சார்ந்த பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பும் அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். குறைவில்லாத ஜீவனமும், பசு, பால் பாக்ய யோகமும் உண்டு.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்படுவர். திறமையுடன் பணியாற்றி குறித்த நேரத்திற்கும் பணியிலக்கை எட்டிப் பிடிப்பர். நிர்வாகத்திடம் பாராட்டு, சலுகைப்பயன் தாராள அளவில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பு, பாசம் கிடைத்து இனிய வாழ்வு நடத்துவர். புத்திரர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவர். ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். உற்பத்தி, விற்பனை சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும். உபதொழில் துவங்குவதற்கான சூழ்நிலையும் தானாக வந்து சேரும்.
மாணவர்கள்: மருத்துவம், சட்டம், கலை, இலக்கியம், ஆசிரியர், ஜர்னலிசம், தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், விவசாயம், ஓட்டல் மேனேஜ்மென்ட் போன்ற துறை சார்ந்த மாணவர்கள் ஒருமுகத் தன்மையுடன் படித்து உயர்ந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். படிப்புக்கான பணவசதி எதிர்பார்த்தபடி கிடைக்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி நட்பு மலரும். விளையாட்டு, கலைத்துறையிலும் ஈடுபட்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து இன்பச் சுற்றுலா சென்று வருவர். வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்த வருடங்களில் தடைபட்ட சமூகப்பணியை புது உத்வேகத்துடன் நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். அரசு தொடர்பான காரியம் அதிகாரிகளின் உதவியால் எளிதாக நிறைவேறும். ஆதரவாளர் உங்களிடம் கூடுதல் நம்பிக்கை கொள்வர். எதிரி வியக்கும் அளவில் வளர்ச்சி உண்டாகும். புத்திரரின் ஒத்துழைப்பால் அரசியல் பணி மேலும் சிறக்கும். புதிதாக சொத்து வாங்கும் எண்ணமும் நிறைவேறும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு உற்பத்தி, விற்பனை சிறந்து வருமானம் பலமடங்கு அதிகரிக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான வசதி அனைத்தும் எளிதாக கிடைக்கும். மகசூல் சிறந்து தானியங்களுக்கு தாராள விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பால் ஆதாய பணவரவு கூடும். நிலப்பிரச்னையில் இருந்து விடுபட்டு மனநிம்மதி காண்பர். குடும்பத்தில் திட்டமிட்ட மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் துர்கையை வழிபடுவதால், கிடைக்கவிருக்கும் நற்பலன் இரட்டிப்பாகும்.
பரிகாரப்பாடல்
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று
ஆகி கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே!
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ர கதியாகி திரும்பவும் கன்னிராசியில் பிரவேசிக்கிறார். இந்த அமர்வு தொழில் வகையில் குளறுபடியை உருவாக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற தாமதமாகும். தேவையற்ற செலவு அதிகமாகும். புத்திரர் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். தம்பதியர் கருத்துவேறுபாடு கொள்வர். வெளியூர் பயணங்கள் மூலம் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது.
மகரம் (60/100) தொழில், வேலையில் கவனமா இருங்க!
ஆன்மிகப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு, மறுபிறவிக்கும் புண்ணியம் சேர்க்கும் மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் அனுகூலக் குறைவாக இருந்த சனிபகவான் இப்போது ராசிக்கு பத்தாம் இடமான துலாத்திற்கு, ஜீவனச்சனி என்ற நிலையில் பெயர்ச்சியாகி உள்ளார். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 12, 4, 7 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். உங்களுக்கு ராசிநாதனே சனி என்பது பிளஸ் பாயின்ட். அவர் தனது நட்பு கிரகமான சுக்கிரன் வீட்டில் உச்சம் பெறுவதால், ஒரு சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். உங்கள் பணிகளை நிகழ்த்துவதில் குறுக்கீடு ஏற்படும். அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனம் தேவைப்படும். தேவையற்ற பேச்சு பிரச்னைகளை நிறைய கொண்டு வரும் என்பதை உணர்ந்து நடப்பது நல்லது. இளைய சகோதர, சகோதரிகள் அலுவல் காரணமாக வெளியூருக்கு மாற்றலாகிற சூழ்நிலை உண்டு. வீடு, வாகன வகையில் வசதிக் குறைவு ஏற்படும் என்பதால், வேறு வழியின்றி சகித்துக் கொள்ள வேண்டிய சூழல் வரும். தாய்வழி உறவினர்கள் உங்களிடம் கொண்டிருந்த அன்பு குறையும். புத்திரர்கள் கவனக்குறைவான செயல்களால் உடல்நல பாதிப்பு அடைவர். அவர்களை கவனமாக இருக்கச் சொல்லுங்கள். மருத்துவச்செலவு கையைக் கடிக்கும்.
எதிரிகளால் இருந்த சிரமம் குறையும். பணவரவு சுமாராகவே இருக்கும். குடும்பத்தின் முக்கிய செலவுகளுக்கு சேமிப்புபணத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிலசமயங்களில் கடன் பெறும் சூழ்நிலையும் உண்டு. தந்தைவழி உறவினர்கள் சொல்கிற ஆலோசனை வழி நடந்து வருமானத்தை ஓரளவு உயர்த்திக் கொள்ளலாம். வழக்கு, விவகாரத்தில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். ஆனால், அதைக் கொண்டாடி மகிழ்வதைத் தவிர்க்கவும். நண்பர்கள் உதவும் சூழ்நிலை உண்டு. கவலையைக் குறைக்க தியானம், சுவாசப்பயிற்சி அவசியம். பங்குச்சந்தை வர்த்தகம் அதிகமாக கை கொடுக்காது. முதலீடு செய்வதில் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தொழிலதிபர்கள்: மருத்துவமனை, ஓட்டல், டிராவல்ஸ், டிபார்ட்மென்டல் ஸ்டோர், கல்வி, நிதிநிறுவனம், பால் பண்ணை அதிபர்கள், பாத்திரம் தயாரிப்போர், ஆட்டோமொபைல், அச்சகம், அரிசி ஆலை, மினரல் வாட்டர், குளிர்பானம், மின்னணு சாதனம், காகிதம், கம்ப்யூட்டர், பர்னிச்சர் உற்பத்தியாளர்கள் தொழிலை நினைத்து மனதில் பதட்டம் கொள்வர். பிற வகை தொழில் செய்வோரும் கூடுதல் கவனத்துடன் இருந்தால் தான் தொழில் சிரமத்தைத் தவிர்க்கலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பை பெற்று உற்பத்தி இலக்கை நிறைவேற்றுவது அவசியம். நிர்வாக நடைமுறைச்செலவு கூடும். பொதுப்பணியில் ஆர்வம் குறையும். சக தொழில் சார்ந்தவர்களிடம் கருத்து வேறுபாடு அதிகரிக்காத அளவிற்கு நடந்துகொள்வது நல்லது.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள், பால் பொருட்கள், விவசாய விளைபொருட்கள், மின்சார, மின்னணு சாதனங்கள், பேக்கரி, மருந்து, அலங்காரப் பொருள், குளிர்பானம், மினரல் வாட்டர், எண்ணெய், பெயின்ட், கண்ணாடி விற்பனை செய்பவர்கள் அளவான விற்பனை, சுமாரான பணவரவு என்கிற நிலையை எதிர்கொள்வர். மற்ற வியாபாரம் செய்பவர்களுக்கு இவர்களை விட சற்று அதிக லாபம் கிடைக்கும். குடும்ப செலவுகளுக்கான பணத்தேவை அதிகரிப்பதால் கவலை ஏற்படும். வியாபார நுணுக்கங்களை தகுந்தபடி செயல்படுத்துவதால் விற்பனை, லாபம் அதிகரிக்கும். வாகன பாதுகாப்பு, பராமரிப்பில் கவனம் வேண்டும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நடப்பது நல்லது. சக பணியாளர்களின் குளறுபடியான செயல்களால் உங்கள் மீது அவப்பெயர் ஏற்படலாம். கவனம் தேவை. குடும்பத்திற்கான தேவையை நிறைவேற்ற கணிசமான கடன் பெறுவீர்கள். நிச்சயமற்ற வேறு பணிக்கு செல்கிற வாய்ப்புகளை சிறிதுகாலம் கடந்து பயன்படுத்தலாம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு குளறுபடி உருவாகி நிர்வாகத்தின் கண்டிப்புக்கு உட்பட நேரும். சலுகைகள் அதிகம் கிடைக்காது. கூடுதல் கவனம் நற்பலன் பெற உதவும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் மட்டுமே சச்சரவு இல்லாத வாழ்க்கைமுறை தொடரும். தாய்வழி உறவினர்களிடம் சீர்முறை பெறுவதில் அதிக எதிர்பார்ப்பை வளர்த்துக்கொள்ளக் கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான உற்பத்தி, அளவான லாபம் காண்பர். அதிக கடன் பெற்று அபிவிருத்தி பணி செய்வதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள்: இன்ஜனியரிங், விவசாயம், மருத்துவம், ஜர்னலிசம், ஆசிரியர் பயிற்சி, ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், பிரிண்டிங் டெக்னாலஜி, கலை, அறிவியல், வணிகத் துறை, ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு கவனச்சிதறலும் அதனால் மதிப்பெண் குறைவதுமான சூழ்நிலை இருக்கும். மற்ற துறையினரும் எதிர்கால நலன் கருதி கடும் முயற்சியுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி அதிகரிக்கும். ஆடம்பரப் பொருள் வாங்க விரும்புகிற பிடிவாத குணத்தை தவிர்ப்பது நல்லது. ஆசிரியரின் கண்டிப்பையும், பெற்றோரின் அறிவுரையையும் ஏற்றால் படிப்பு சீராக இருக்கும். சக மாணவர்களிடம் தேவையற்ற விவாதம் கூடாது.
அரசியல்வாதிகள்: பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற இயலாத வகையில் குறுக்கீடுகள் வந்து சேரும். அனுபவசாலியின் ஆலோசனை, தகுதி வாய்ந்தவர்களின் உதவியைப் பெறுவதால் நிலைமை சீராகும். உங்கள் ஆதரவாளர்களே எதிரிகளின் மறைமுக நடவடிக்கைக்கு துணைபோவர். இதனால் எவரிடமும் முக்கியமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் அபவிருத்தி பணிகளை செய்ய உகந்த நேரம் அல்ல.
விவசாயிகள்: விவசாயப்பணிகளுக்கான செலவு அதிகரிக்கும். அதிக லாபம் தருகிற பயிர் வகை வளர்ப்பதால் மட்டுமே எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அளவானலாபம் உண்டு. நிலம் தொடர்பான விவகாரத்தில் சாதகத் தீர்வு பெற தாமதம் ஏற்படும்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் தொழில் சார்ந்த இடர் விலகி மனதில் மகிழ்ச்சி கூடும்.
பரிகாரப் பாடல்
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி சுமார் ஆறுமாத காலம் கன்னிராசியில் பிரவேசிக்கிறார். இதனால் தொழில் வகையில் இருந்த மந்தநிலை விலகும். வாகன போக்குவரத்தில் கவனம் வேண்டும். பணவரவு அதிர்ஷ்டகரமாக வந்துசேரும். எதிரிகளால் தொல்லை வரும். புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் பெறுவர். தம்பதியர் ஒற்றுமை சிறந்து குடும்பத்திற்கு பெருமையும் புகழும் தேடித்தருவர். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை நடத்துவீர்கள்.
கும்பம்( 65/100)
எந்த சூழ்நிலையிலும் திடமான சிந்தனையுடன் செயல்படுகின்ற கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் அஷ்டமச்சனியாக இருந்த சனிபகவான் இப்போது ஒன்பதாம் இடமான துலாம் வீட்டிற்கு பெயர்ச்சியாகி உள்ளார். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 11, 3, 6 ஆகிய இடங்களை பார்க்கிறார். சனி தனது நட்பு கிரகமான சுக்கிரன் வீட்டில் உச்ச பலத்துடன் அமர்வது சில நல்ல பலன்களையும் பெற்றுத்தரும். பேச்சில் நிதானமும், செயலில் நேர்மையும் பின்பற்றி தேவையான செயல்களை நிறைவேற்றுவீர்கள். புகழ் பெறுவதின் மீதான ஆர்வம் குறையும். இளைய சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்ற உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால் செலவு அதிகரிக்கும். தாயின் உடல் நலத்திற்காக மருத்துவசிகிச்சை செய்ய நேரிடும். புத்திரர்களின் செயல்பாடு மனதிற்கு ஆறுதல் தரும்.
பூர்வசொத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாட்டை பொது இடங்களில் விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. உடல்நலம் சீராக இருக்க முறையான உணவும், ஓய்வும் தேவை. உறவினர்களின் உதவியும், ஒத்துழைப்பும் அவ்வப்போது கிடைக்கப் பெறுவீர்கள்.தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்க்கையை மகிழ்ச்சியான வழியில் கொண்டு செல்வர். உங்களைப் பற்றிய தந்தையின் மனதில் அதிருப்தி எண்ணங்கள் உருவாகும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் லாபமும், நஷ்டமும் கலந்து சந்திக்கின்ற சூழல் உருவாகும்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, ஓட்டல், லாட்ஜ், நிதி, கல்வி நிறுவனம், அச்சகம், டிராவல்ஸ் நடத்துவோர், காண்டிராக்டர், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், பட்டாசு, கட்டுமானப் பொருள், பாத்திரம் உற்பத்தி செய்வோர் சுமாரான வளர்ச்சி காண்பர். தொழிலில் மறைமுகப்போட்டியை எதிர்கொள்ள நேரிடும். தொழிலுக்காக கடன் பெறுவதில் நிதான நடைமுறை நல்லது. மற்றவர்களை நம்பாமல், நேரடியாக நீங்களே களத்தில் இறங்கி செயல்படுங்கள். புகழ்பெறுவதைவிட பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் அதிகமாகும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மருந்து, சமையலறை சாதனங்கள், ஸ்டேஷனரி, தோல் பொருட்கள், பழம், பட்டாசு, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பர்னிச்சர் விற்பனை செய்பவர்கள் போட்டியைச் சந்தித்தாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. பிற வியாபாரிகளுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். கடையை அழகுபடுத்தலாம் என்று தகுதிக்கு மீறிய அளவில் கடன் பெறக்கூடாது. பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம். நிலுவைப்பணம் வசூலிப்பதில் மென்மையான போக்கை கடைபிடிப்பது நன்மை தரும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உள்ளாவர். சக பணியாளர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது எதிர்கால நலனுக்கு உகந்ததாகும். இயந்திரப்பணியில், கருவிகளை கையாளும்போது விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். ஆடம்பர செலவைக் குறைத்தால் தான் வருமானம் போதுமானதாக இருக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் குளறுபடியை எதிர்கொள்வர். நிர்வாகத்தின் கண்டிப்பு, நடவடிக்கைகளால் மனதில் கவலை அதிகரிக்கும். அனுபவம் பெற்றவர்களின் ஆலோசனை கேட்டு குறையை நிவர்த்தி செய்வது நல்லது. பணத்தேவை அதிகரிக்கும். குடும்ப பெண்கள் கணவரின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பர். சிக்கனத்தைக் கடைபிடித்து நல்வாழ்க்கை நடத்துவர். உறவினர்களிடம் தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதம் கூடாது. உடல்நலம் பேணுவதில் அக்கறை தேவைப்படும். சுயதொழில் புரியும் பெண்களில் சிலர் பணப்பற்றாக்குறைக்கு ஆளாவர். உற்பத்தியைப் பெருக்குவதிலும் போட்டியை சமாளிப்பதிலும் நேரத்தைச் செலவழிப்பர். உழைப்புக்கேற்ற லாபம் பெற்று திருப்தி காண்பர்.
மாணவர்கள்: விவசாயம், மருத்துவம், இன்ஜினியரிங், கலை, அறிவியல், சட்டம், ஜர்னலிசம், கம்ப்யூட்டர் துறை மாணவர்கள் அமைதியான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது நல்லது. மற்ற துறையில் உள்ளவர்களுக்கும் கவனம் தேவை. வீண்பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு சீராகக் கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: கவனக்குறைவாக செயல்பட்டால் எதிரிகள், உங்களுக்கு கெடுதல் செய்ய முற்படுவர். அதே நேரம், ஆதரவாளர்களின் ஒத்துழைப்பு கண்டு பிரமிப்பு உண்டாகும். நம்பிக்கைக்கு உரியவர்களை மட்டும் உடன் வைத்துக் கொள்வது அவசியம். நடைமுறை செலவு நாளுக்கு நாள் அதிகமாகும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் சுமாரான உற்பத்தி, அதற்கேற்ற லாபம் காண்பர்.
விவசாயிகள்: விவசாயப்பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நடைமுறை செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படும். அளவான மகசூல் உண்டு. கால்நடை வளர்ப்பில் மிதமான லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னையில் இருந்து தப்பிக்க முன்யோசனை தேவைப்படும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் துன்பம் விலகி நன்மையான பலன் நடக்கும்.
பரிகாரப் பாடல்
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனி பகவான் வக்ரகதியாகி மீண்டும் கன்னிராசியில் அஷ்டமச்சனியாக இடம்பெறுகிறார். இதனால், விலகிப் போனவர்களால் கூட புதிய சிரமங்கள் உண்டாகும். இக்காலகட்டத்தில் வீண் செலவைக் குறைத்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உறவினர்களிடம் வாக்குவாதம் செய்ய நேரிடும். பணியிட மாற்றமும் சிலருக்கு ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். விலை மதிப்பான பொருட்களை இரவல் வாங்கவோ, கொடுப்பதோ கூடாது.
மீனம் (50/100) புடிச்சாச்சு அஷ்டமத்து சனி!
பரந்த மனப்பான்மையும் இரக்க சிந்தனையும் உள்ள மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் கண்டகச்சனியாக இருந்த சனிபகவான் இப்போது எட்டாம் இடமான துலாம் வீட்டில் அஷ்டமச்சனியாக இடம் பெயருகிறார். கடந்த இரண்டரை வருடத்தில் எதிர்கொண்ட சிரமங்களை விடவும் சற்று அதிகமாக தரும் வகையில் இந்த சனிப்பெயர்ச்சி அமையும். சனி தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 10, 2, 5 ஆகிய இடங்களான தொழில், பணவரவு, பூர்வ புண்ணிய ஸ்தானங்களை பார்க்கிறார். எந்தச் செயலை செய்தாலும் குறுக்கீடுகளும் அதனால் மனம் தளர்வதுமான சூழ்நிலை இருக்கும். பணவரவைப் பெற கடினமாக உழைக்க நேரிடும். பொது இடங்களில் அதிகம் பேசுவது, உறவினர் கருத்தை விமர்சிப்பது கூடாது. சகோதரர்கள் உதவுவதாக எண்ணிச் சிரம சூழ்நிலையை உருவாக்கி விடுவர், கவனம். வீடு, வாகனத்தில் கிடைக்கும் வசதி சீராக இருக்கும்.
புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் பின்தங்க நேரிட்டாலும், தக்க வழிகாட்டுதலால் ஊக்கப்படுத்துவீர்கள். பூர்வசொத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்களைப் பிறர் பொறுப்பில் தரக்கடாது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற அவ்வப்போது கடன் வாங்குவீர்கள். மாற்றுகுணம் கொண்டவர்களிடம் இருந்து தப்பிக்க அவர்களிடம் இருந்து விலகிச் செல்வது அல்லது அமைதி காப்பது என்கிற நடைமுறையை பின்பற்றுவது நல்லது. அடிக்கடி கடின அலைச்சல் மிக்க பயணம் ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியர் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர். குடும்ப வாழ்வு அமைதியாக இருக்கும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ளவர்கள் சுமாரான லாபம் கிடைக்கப்பெறுவர்.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், நிதி, கல்விநிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், ஓட்டல் அச்சகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர், பால்பண்ணை, நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், ஆட்டோமொபைல், மின்சார, மின்னணு சாதனங்கள், பர்னிச்சர், தோல் பொருள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதில் பின்தங்கிய நிலை காண்பர். மற்றவர்களுக்கும் சுமாரான நிலையே இருக்கிறது. ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் ஏற்படும். லாபம் ஓரளவுக்கே இருக்கும். விடாமுயற்சியும் கடின உழைப்புமே வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி. அழகு சாதனம், பர்னிச்சர், பால் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள், மினரல் வாட்டர் விற்பனை செய்பவர்கள் அளவான விற்பனை, மிதமான பணவரவு என்கிற நிலையை எதிர்கொள்வர். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட சற்று அதிக லாபம் உண்டு. புதிய வியாபாரத்தில் மூலதனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வாகன வகையில் அதிக செலவாகும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியில் குளறுபடிகளை எதிர்கொள்வர். துறை சார்ந்த அனுபவசாலிகளின் வழிகாட்டுதல், ஆலோசனை பெற்று செயல்படுவது நன்மை தரும். குடும்பத்திற்கான முக்கிய செலவுகளுக்கு கடன் பெற நேரிடும். சக பணியாளர்களிடம் நட்பு நிலைத்திருக்கும். பணியிட மாற்றம் ஏற்படுமோ என்ற அச்சம் மனதில் குடிகொள்ளும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். பணியில் கவனமின்மையால் அவப்பெயர் உண்டாகும். விரும்பாத இடமாற்றம் பெற வேண்டியதிருக்கும். குடும்ப பெண்கள் நல்லது என்ற எண்ணித் தொடங்கிய செயல்களில் எதிர்மறையான பலன்களைப் பெறுவதற்கான கிரக சூழ்நிலை உள்ளது. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பின் மூலம் விற்பனையை தக்க வைத்துக் கொள்வர். வியாபாரம் தொடர்பான அலைச்சல் அடிக்கடி உண்டாகும்.
மாணவர்கள்: இன்ஜனியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், மேனேஜ்மென்ட் படிப்பு மாணவர்களுக்கு ஆர்வம், ஞாபகத்திறன் குறையும். எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் மட்டுமே தரத்தேர்ச்சி பெற இயலும். விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்படும்.
அரசியல்வாதிகள்: அரசு தொடர்பான விஷயங்களில் தாமதம் ஆவதால் கவலை அதிகரிக்கும். அதிகாரிகளிடம் கண்டிப்புடன் பேசி சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். உங்களின் சிரமங்களைக் கண்டு எதிரிகள் பரிகாசம் செய்வர். வகிக்கிற பதவி, பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாததால் சிலர் தலைமையின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுவர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் அரசின் சட்டதிட்ட நடைமுறை விதிகளை மதித்து நடத்துவது நல்லது.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான வசதி கிடைப்பதில் தாமதம் இருக்கும். அளவான மகசூல், மிதமான பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற வருமானம் குடும்பத் தேவைக்கு உதவியாக இருக்கும். சொத்து ஆவணங்களைப் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவதில் உறவினர்களின் உதவி கிடைக்கும்.
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் கெடுபலன் குறைந்து, பொருளாதார முன்னேற்றமும், தொழில் வளமும் ஏற்படும்.
பரிகாரப் பாடல்
கயிரவ நாணமலர்க் கவின் கணார் மயற்
செயிரவ நாடொறும் இயற்றியே திரி
யுயிரவ நானென வொறாது காத்தருள்
வயிரவ நாதனை வணங்கி வாழ்த்துவாம்!
சனி வக்ரகால பலன்: 26.3.2012 முதல் 10.9.2012 வரை சனிபகவான் வக்ரகதியாகி மீண்டும் கன்னிராசியில் கண்டகச்சனியாக இடம்பெயருகிறார். இதனால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பார்ப்புக்களை குறைத்துக் கொண்டு செயல்படுங்கள். அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவி சிரமத்தை வரவழைத்துக் கொள்வீர்கள்.