பதிவு செய்த நாள்
15
நவ
2011
04:11
நாட்டில் ஐயப்பனுக்கென பல கோயில்கள் இருந்தாலும், கேரளமாநிலம், பந்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மட்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் இந்த ஐயப்பனை தரிசிக்க கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதில் வெளிநாட்டு பக்தர்களும் உண்டு. இங்குள்ள ஐயப்பன் பிரம்மச்சரிய கோலத்தில் குத்துக்காலிட்டு, யோகநிலையில், சின்முத்திரையுடன் அருள்பாலித்து வருகிறார். இவரை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்கள் 10வயதிற்குள்ளாகவும், 50 வயதிற்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே 11வயது முதல் 49 வயது வரை உள்ள பெண் பக்தர்களை பம்பைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவதே கிடையாது. அப்படி இவர்கள் வந்தாலும், பம்பையில் உள்ள கணபதி கோயிலிலேயே நிறுத்தப்பட்டு விடுகிறார்கள். அதே சமயம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களாக இருந்தாலும் கூட, பணியிலிருக்கும் போலீஸ்காரர்களுக்கு பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் வந்து விட்டால், அவர்களுடைய வயதை சரிபார்க்க பேன்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளார் அட்டை போன்ற போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்கும் படி கூறுகிறார்கள். இதில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டு, இது போன்ற அடையாள அட்டை இல்லாத நிலையில் அவர்கள் பம்பையிலேயே நிறுத்தப்படுகின்றனர். எனவே இந்த பெண்பக்தர்களால் ஐயப்பனை தரிசிக்க முடியாது. அதுமட்டுமின்றி, இவர்களுடன் வரும் ஆண் பக்தர்களும் இவர்களை தனியாக விட்டு விட்டு ஐயப்பனை தரிசிக்க செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்ற நடைமுறை சிக்கலை தவிர்க்க, பெண்பக்தர்கள் தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் அதற்கான போட்டோ காப்பியை எடுத்து செல்ல வேண்டும். இது போன்ற விஷயங்களை சபரிமலைக்கு அழைத்து செல்லும் டிராவல்ஸ் நிறுவனங்களும், குருசாமிமார்களும் பெண் பக்தர்களுக்கு எடுத்து கூறுவது மிக மிக முக்கியம்.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!