புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2025 05:07
திருமழிசை; திருமழிசை அம்மை மரகதாம்பிகை சமேத புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில், இன்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
திருமழிசை பேரூராட்சியில் அம்மை மரகதாம்பிகை சமேத புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி பந்தல்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 30ம் தேதி முன்னவர் வழிபாடும், காப்பு நாண் அணிவித்தலும் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 8:00 மணிக்கு சதாசிவ வழிபாடு நடந்தது. கும்பாபிஷேக நாளான இன்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 10:10 மணிக்கு விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், மாலை 6:00 மணிக்கு அம்மையப்பர் – மரகதாம்பிக்கு திருக்கல்யாணமும், இரவு வீதியுலாவும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.