பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
10:07
திருப்பதி: ஏழுமலையானின் வேண்டுதலில், பக்தர்கள் குறை வைத்தால், அவர் வட்டியும் முதலுமாக வசூல் செய்து விடுவார் என்ற நம்பிக்கை, பக்தர்களுக்கு உண்டு. ஆனால், அவருக்கு கிடைக்கும் வட்டியையே, வங்கிகள் தற்போது குறைத்து விட்டன. திருமலை ஏழுமலையானுக்கு, உண்டியல் வருமானம், கல்யாண மண்டபங்கள், வாடகை அறைகள், தலைமுடி காணிக்கை, ஆர்ஜித சேவா டிக்கெட், பிரசாத விற்பனை உள்ளிட்டவற்றால் கிடைக்கும் வருமானத்தை, செலவு போக தேவஸ்தான நிர்வாகம், வங்கிகளில், டிபாசிட் செய்துள்ளது. டிபாசிட் காலம் முடிந்ததும், அதற்கு கிடைக்கும் வட்டியையும் சேர்த்து, மீண்டும் வங்கிகளில் டிபாசிட் செய்யப்படும்.
வட்டியாக, 780 கோடி ரூபாய்: அதனால், ஆண்டிற்கு ஆண்டு தேவஸ்தானத்துக்கு கிடைக்கும் வட்டி, அதிகரித்து வந்தது. அதன்படி, 2016ம் ஆண்டு, 9 சதவீத வட்டியில், தேவஸ்தானம், 10 ஆயிரம் கோடி ரூபாயை, பல வங்கிகளில் நிரந்தர கால வைப்பு நிதியில், மூன்று ஆண்டு காலத்திற்கு டிபாசிட் செய்துள்ளது. 2016 - 17ல், இதற்கு வட்டியாக, 780 கோடி ரூபாய் கிடைத்தது. மேலும், 2017 - 18ம் ஆண்டிற்கு, இது, 801 கோடி ரூபாயாக உயரும் எனதேவஸ்தானம் கணக்கிட்டது. இந்நிலையில், தற்போது தேசிய வங்கிகள், தங்களின் நிரந்த கால வைப்பு வட்டி விகிதத்தை, 6.8 சதவீதமாக குறைத்து விட்டன.
ரூ. 200 கோடி வருமான இழப்பு: இதனால், டிபாசிட் காலக்கெடு முடியும்போது, நடப்பில் இருக்கும் வட்டி விகிதம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு, அதற்கேற்ற வட்டியை வங்கிகள் வழங்குவது வழக்கம். அதன்படி, தற்போதய வட்டி விகிதத்தின் படி, நடப்பு நிதியாண்டு, தேவஸ்தானத்திற்கு, 600 கோடி ரூபாய் மட்டுமே வட்டியாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு, 200 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட உள்ளது.