பதிவு செய்த நாள்
07
ஜூலை
2025
06:07
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இன்று காலை 6:15 முதல், 6:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜூன் 26ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோவிலில் ஜூலை 1ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. ராஜகோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோமகுண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு, 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன.
திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பெருமாளுக்கு தனியாக 5 ஹோம குண்டங்கள் வைத்து, பட்டாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று (ஜூலை 7) அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடைபெறுகின்றன. பின்னர், யாகசாலையில் இருந்து கும்பங்கள் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் ராஜகோபுர கும்ப கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதே நேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் கும்பாபிஷே க நிகழ்வை கண்டு களிக்க நகர் முழுவதும் 70 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகம் முடிந்ததும் கும்பாபிஷேகம் முடிந்ததும் பக்தர்கள் மீது 20 ட்ரோன்கள் கொண்டு புனித நீர் தெளிக்கப்பட்டது.
சிருங்கேரி விதுசேகர பாரதீ சன்னிதானம் தரிசனம்; கும்பாபிஷேகத்தில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் பங்கேற்று தரிசனம் செய்தார். முன்னதாக சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நேற்று திருச்செந்துார் வந்தடைந்தார். அவருக்கு, கோயில் நிர்வாகம் தரப்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணா மஹாலில் சந்திர மவுலீஸ்வரர் பூஜையை அவர் நடத்தினார். பின்னர், கீழரதவீதியில் உள்ள சிருங்கேரி மடத்திற்கு சென்ற சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்திலும், கோவிலை ஒட்டி கடற்கரையிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். விழாவில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. கோவில் வளாகத்தில் 6,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் இணையத்தில் நேரலை; திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் விழா நமது தினமலர் இணையத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.