பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
10:07
மதுரை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி மாதம் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தாலும், இந்த மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி கிருத்திகை அன்று, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில், வடபழனி முருகன், கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீசுவரர், பாடி திருவலிதாய நாதர், அண்ணாநகர் மேற்கு தென்றல் காலனி பாலசுப்பிரமணிய சுவாமி, அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர், புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர், குரோம்பேட்டை குமரன் குன்றம், குன்றத்துார் முருகன், பிராட்வே காளிகாம்பாள் கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருக பெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து கோவில்களில், பக்தர்கள் காவடி எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். திருத்தணி, திருப்பரங்குன்றம், வடபழனி, கந்தகோட்டம் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசைகளில் நின்று மூலவரை தரிசனம் செய்து வருகின்றனர்.