துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 2023ல் பெருந்திட்ட வளாக பணிகள் மற்றும் திருப்பணிகள் துவங்கின. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை, 6:15 முதல், 6:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று 12ம் கால யாகசாலை பூஜை அதிகாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, இன்று காலை 6:22 மணிக்கு ராஜகோபுர கும்ப கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதே நேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர் மற்றும் உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் பங்கேற்று தரிசனம் செய்தார். முன்னதாக சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நேற்று திருச்செந்துார் வந்தடைந்தார். அவருக்கு, கோயில் நிர்வாகம் தரப்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணா மஹாலில் சந்திர மவுலீஸ்வரர் பூஜையை அவர் நடத்தினார். பின்னர், கீழரதவீதியில் உள்ள சிருங்கேரி மடத்திற்கு சென்ற சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்