Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English
அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கோதண்டராமஸ்வாமி
  அம்மன்/தாயார்: சீதாதேவி
  தல விருட்சம்: வில்வ, அரச மரம்
  புராண பெயர்: அக்ரஹாரம், ரங்கநாதபுரம், கரிவரதபுரம்
  ஊர்: ராம்நகர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  இத்தலத்தில் நித்ய கணபதி ஹோமம், திருவோண நட்சத்திரத்தன்று மகாசுதர்சன ஹோமம், தன்வந்தரி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம் ஆகியவை சிறப்பாக நடந்து வருகிறது. பிரதோஷ காலத்தில் ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம் ஓத வேதவிற்பன்னர்கள் ருத்ரம், சமகம் பாராயணம் செய்ய பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே ஈசனுக்கு அபிஷேகம் செய்வது குறிப்பிடத்தக்கது. சித்திரை முதல் நாள், கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, ஆருத்ரா தரிசனம், சங்கராந்தி, பங்குனி உத்திரம், விநாயகர் சதுர்த்தி ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தினசரி விஸ்வரூபம், அபிகமனம், இஜ்யை, சாயிரக்ஷ்யை, திருவாராதனம் சயனம் என ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. பவுர்ணமியன்று இங்கு நடைபெறும் சத்யநாராயண பூஜையின் போது மட்டைத் தேங்காயை வைத்து பூஜை செய்து தருவார்கள். அதை வீட்டுக்குக் கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து தினசரி பிரார்த்தனை செய்து வர திருமணம், குழந்தைப்பேறு, நல்ல உத்யோகம் கிட்டுகிறது. இத்தலத்தில் முக்கியப் பெருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படும் ராமநவமி உற்சவமாகும். இதில் மூல ராமாயண பாராயணம், சொற்பொழிவுகள், லட்சார்ச்சனை, சீதா கல்யாணத்தைத் தொடர்ந்து ராம நவமியன்று ஸ்வாமிக்கு விசேஷ திருமஞ்சனம், அலங்காரத்துடன் வடை பருப்பு, பானகம், நீர்மோர் நிவேதனம் செய்யப்படும். மாலையில் நடைபெறும் உற்சவர் திருவீதியுலா நடக்கும். இந்த உற்சவத்தில் கலந்துகொள்பவர்களுக்கு சகல பாக்யமும் கிட்டும் என்பது நம்பிக்கை.  
     
 தல சிறப்பு:
     
  ராமபிரானும் அனுமனும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத பெருஞ்சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
  அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோயில், ராம்நகர், கோயம்புத்தூர் .641 009  
   
போன்:
   
  +91 422 2233926 
    
 பொது தகவல்:
     
  இக்கோயில் இந்து மதத்தின் முக்கிய பிரிவுகளான த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத் வைதம் ஆகிய மூன்று சம்பிரதாயங்கள் கடைபிக்க வேண்டுமென தீர்மானித்து மஹா கணபதி மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதிகளும் உருவாக்கப்பட்டன. அதை அடுத்து நவகிரஹ சன்னிதி இல்லை என்ற குறையைப் போக்க நவகிரஹ சன்னிதி ஒன்றையும் கட்டி முடித்தனர், ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், இசை நிகழ்ச்சிகள் நடந்த பிரசவன மண்டபம் ஒன்றை கட்டி முடித்து, 18.02.1968 அன்று ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாசுவாமிகள் திறந்து வைத்தார். இத்தலம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. கோயிலில் பூஜைகள், விழாக்கள் போன்றவை சீராக நடந்து வந்த நிலையில், இச்சிறப்பு மிக்க கோயிலுக்கு ராஜகோபுரமும் துவஜஸ்தம்பமும் இல்லையே என்ற குறை நீண்ட நாட்களாக பக்தர்கள் அனைவரது மனத்திலும் இருந்தது. கோயிலுக்கு வருகை புரிந்த ஆன்மீக சான்றோர்களும் ராஜகோபுரம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர். திருப்பணி மேற்கொள்ள ஒருகுழு அமைக்கப்பட்டது. ராஜகோபுர திருப்பணியுடன் பழமையான கட்டுமானத்தை புதுப்பித்தல், ஆஞ்சநேயர், ராமர் சன்னிதிகளுக்கு புதிய விமானங்கள் அமைத்தல் போன்ற திவ்யபணிகளுக்காக 3.2.2006 அன்று கால்கோள் விழா ஆன்மீக பெரியோர்கள் முன்னிலையில் விமர்சையாக நடைபெற்றது.

ராஜகோபுரம், துவஜஸ்தம்பம் கடந்து வந்தால் கருவறையில் தெற்குமுகமாக கல்யாண கோலத்தில் சீதாதேவி, லட்சுமணர் சமேதராக ராமசந்திரமூர்த்தி எழுந்தருளியுள்ளார். எதிரே இரு கரம் கூப்பி வணங்கியபடி ஆஞ்சநேயரும், இவருக்கு மேற்கே விநாயகப் பெருமானும் அருள்கிறார்கள். ராமர் சன்னிதி கருவறையின் முகப்பில் கலைநயமிக்க கற்சிற்பங்களும், வெள்ளித்தகடுகள் பொருத்தப்பட்ட கதவுகளில் அஷ்ட லக்ஷ்மிகளின் திருவுருவமும் அழகுற அமைந்துள்ளன. ராமர் சன்னிதிக்கு கிழக்கு பக்கமாக விசாலமான மண்டபத்தில் நவகிரஹங்களுக்கு என தனிச் சன்னிதி உருவாக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் 13 கோடி ராமநாமம் அடங்கிய பெட்டகம் உள்ளது. 24.7.2006 அன்று 42வது பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறையின் பின்புறத்தில் ஸ்வாமி உலா வருவதற்கு ஏதுவாக சொர்க்க வாசல் அகலமாக அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப் பிராகாரத்தில் நிருத்த கணபதி, சித்தி, புத்தி கணபதி, பாலகணபதி, புன்னைமர கிருஷ்ணன், பட்டாபிஷேக ராமர், பத்ராச்சல ராமர், பூஜித ராமர், தசாவதார ராமர், யோகராமர், என கல் சிற்பங்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தின் மேல் நிலையில் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், சிவன், விநாயகர், ஐயப்பன், ராமபிரான் பட்டாபிஷேகம், தசாவதாரம் என சுதைச் சிற்பங்கள் கலைநயத்துடன் விளங்குகின்றன. கோயில் வளாகமே கலை நுணுக்கங்களுடன் பார்ப்போரை பிரமிக்க வைக்கின்றது.
 
     
 
பிரார்த்தனை
    
  ராமர் சன்னிதியில் நடக்கும் திருமணத்திற்காக, பெண் பார்க்கும் படலத்தில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால், அவர்களுக்கு ஏற்பட்டிருந்த சகல தோஷங்களும் தடைகளும் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் ராமருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.  
    
 தலபெருமை:
     
  ராமர் சன்னிதியின் பின் பகுதியில் வில்வமரத்தின் அடியில் வில்வ லிங்கேஸ்வரரும், அரசமர மேடையில் நாகர்களுடன் விநாயகப் பெருமானும் வீற்றிருக்கிறார்கள். ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக பிரசவன மண்டபமும் உள்ளது. சிற்ப கலை நயத்துடனும் இறைப் பொலிவுடனும் ஐந்து நிலை ராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. முன்பு கோயில் நுழைவாயிலில் இருந்த தீபஸ்தம்பம் அகற்றப்பட்டு மறு சிற்ப வேலைப்பாடுகளுடன் ராஜகோபுரத்தின் கிழக்குபக்கமாக அமைத்துள்ளனர். முன்பு தீபஸ்தம்பம் இருந்த இடத்தில் துவஜஸ்தம்பம் நிறுவப்பட்டது. இத்துடன் மூலவர் இரு நிலை விமானம், விநாயகர், ஆஞ்சநேயர் விமானங்கள் என அனைத்து  திருப்பணிகளும் நிறைவு பெற்று 18.2.2008 அன்று ஆன்மிக சான்றோர் முன்னிலையில் வேத பாராயணங்கள் ஒலிக்க மஹா கும்பாபிஷேகம் இனிதே நிறைவேறியது. பொதுவாக கோயில்களில் கும்பாபிஷேகம் முடிந்த பின் 48 நாட்கள் மண்டல பூஜை மட்டுமே நடக்கும். மாறாக இத்தலத்தில் ஒவ்வொரு நாளும் ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பட்டிமன்றம் என நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஒரு கோயிலில் தொடர்ந்து ஜபிக்கப்படும் வேத மந்திரங்கள், இதிகாச புராணங்களின் பாராயணம், ப்ரவசம் மற்றும் பஜனோத்ஸவங்கள் போன்ற சத்காரியங்களை நிகழ்த்துவதன் மூலம் அத்தலத்தின் சாந்நித்தியமும் தெய்வீக அதிர்வுகளும் அமைகின்றன. என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து.  
     
  தல வரலாறு:
     
  ஒவ்வொரு மொழிக்கும் ஓர் இலக்கணம் உண்டு. அதுபோல் கோயில்களுக்கு ஓர் இலக்கணம் உண்டு என்றால் இத்தலம் அதற்கு சான்றாக அமையும் எனலாம். கோயிலில் எங்கு நோக்கினும் தூய்மை தூய்மை ஒரு சிறு குப்பையைக் கூட காண முடியாத வகையில் மிகவும் நேர்த்தியாக பராமரித்து வருகின்றனர். இச்சிறப்பு மிக்க கோயில் கோவை மாநகரின் மையப் பகுதியான ராம் நகரில் அமைந்துள்ள கோதண்டராம ஸ்வாமி கோயில். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் எந்தவித பேதமும் இன்றி சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் நகரம் கோவை. தற்போது கோயில் அமைந்துள்ள ராம்நகர் 95 ஆண்டுகளுக்கு முன் விவசாய நிலப்பகுதியாக இருந்தது. அச்சமயத்தில் வக்கீல்கள், வக்கீல் குமாஸ்தாக்கள் கோவையின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தனர். இவர்கள் ஒன்று சேர்ந்து ஆலோசித்து அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்து வசிப்பதற்காக முடிவு செய்து, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்லாடர் அவர்களிடம் மனு ஒன்றை அளித்தனர். அதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் தற்போதுள்ள  ராம்நகர் பகுதியைத் தேர்வு செய்து அங்கீகாரம் வழங்கினார். அங்கு வக்கீல்களும் குமாஸ்தாக்களும் வீடுகளைக் கட்டிக் கொண்டு குடியேறினர். அப்பகுதி அக்ரஹாரம், ரங்கநாதபுரம், கரிவரதபுரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. அப்பகுதியில் வழிபாட்டுக்கு ஒரு கோயில் இல்லையே என்ற குறை இருந்து வந்தது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற வாக்குக்கு ஏற்ப கோயில் ஒன்றைக் கட்ட முடிவு எடுத்து அதற்காக 85 சென்ட் பரப்பளவு உள்ள நிலம் வாங்கப்பட்டது. கோயில் நிர்மாணிப்பதற்காக ஒரு குழுவை அமைத்தனர். கோதண்டராம ஸ்வாமி கோயில் கட்ட முடிவு செய்து, அங்கத்தினர்கள் மற்றும் பொது மக்களிடம் நிதி வசூல் செய்து 5.2.1933-ம் ஆண்டு அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தேறியது. மூலவராக சீதாதேவி லட்சுமணர் சமேத ராமசந்திர மூர்த்தி கல்யாண கோலத்தில் எழுந்தருளி உள்ளார். ராமருக்கு ஓர் கோயில் கட்டப்பட்டது. அதன்பின்னர் இப்பகுதி, ராம் நகர் என அழைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று சீரும் சிறப்புமாக விளங்கி வருகிறது. ராம்நகர் கோதண்டராமஸ்வாமி கோயில்.

படம், தகவல்
: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ராமபிரானும் அனுமனும் எதிர் எதிரே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது வேறு எந்த தலத்திலும் காணமுடியாத பெருஞ்சிறப்பு.
 
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.