மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 1 · பக்கம் 26 · 10 / 159

குட்டி குட்டி தகவல்கள்

  • சக்தி பீடங்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த நூற்றாண்டில் 1923, 1963, 1974, 1995, 2009ல் நடந்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் இன்று கோலாகலமாக நடக்கிறது.
  • 1923க்கு பிறகு 40 ஆண்டுகளுக்கு பின், 1963 ஜூனில் காமராஜர் ஆட்சி காலத்தில் காஞ்சி மஹாபெரியவர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • 2009ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது 320 உபயதாரர்கள் மூலம் 14 கோடி ரூபாய்க்கு திருப்பணி நடந்தன. பக்தர்கள் காணிக்கை 30 கிலோ தங்கத்தில் அம்மன் சன்னதி கோபுரத்திற்கு தங்க கவசம் செய்யப்பட்டது. இதன் அன்றைய மதிப்பு ரூ.4 கோடி
  • இந்த முறை கோயில் நிதி ரூ.15.81 கோடியில் திருப்பணி நடந்துள்ளது. திருப்பணி, யாகசாலை பூஜைக்கு ரூ.21 கோடி உபயதாரர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
  • கும்பாபிஷேகத்திற்காக கோயிலின் இரண்டு தங்க கோபுரம் உட்பட 14 கோபுர கலசங்களில் வரகு, நெல், கம்பு, உட்பட 9 வகை தானியங்கள் மொத்தம் 7 டன் (7 ஆயிரம் கிலோ )அளவில் நிரப்பப்பட்டுள்ளன.

இனி கோயிலுக்குள் வலம் வருவோம்...

  • பரந்து விரிந்த மீனாட்சியம்மன் கோயில் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் கட்டப்படவில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விரிவாக்கம் செய்து கட்டப் பட்டுள்ளது. ஆதியில் இக்கோவிலை கட்டியவர் குலசேகர பாண்டியன் (1168 – 1175).
  • மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. தங்க கோபுரங்களை சேர்த்தால் 14. கோபுரங்களில் சிவமகா புராணம், திருவிளையாடற் புராணம், லிங்க புராணம், தேவி மகாத்மியம் முதலிய புராணங்கள் தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கோபுரமும் 60 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட வாயில் தூணோடு தொடங்கி படிப்படியாக பல அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே, கிழக்கு ஆடி வீதியை சார்ந்து அமைந்துள்ள கிழக்கு கோபுரம் தான் பழமையானது. இதன் உயரம் 153 அடி. மொத்தம் 1,011 சுதைகளுடன் ஒன்பது நிலைகளை கொண்டது. மாறவர்ம பாண்டியனால் (1216 – 1238ல்) கட்டப்பட்டது.
  • வெளிப்புற 4 கோபுரங்களில் தெற்கு கோபுரம் தான் மிக உயரமானது. உயரம் 160 அடி. 9 நிலைகளை கொண்டு அமைந்துள்ள இந்த கோபுரத்தில் 1,511 சுதை சிற்பங்கள் உள்ளன. சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியாரால் 1559ல் கட்டப்பட்டது.
  • மேற்கு கோபுரம் உயரம் 154.6 அடி. இதில் 1124 சுதை சிற்பங்கள் உள்ளன. சித்திரை வீதியில் இருந்து வாகனங்களில் பொருட்களை கோயிலுக்குள் எடுத்து செல்ல ஏதுவாக படிகள் இல்லாதபடி இக்கோபுர வாசல் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டியனால் (1315– 47ல்) கட்டப்பட்டது.
  • வடக்கு கோபுரம் உயரம் 152 அடி. ஒன்பது நிலைகளை கொண்டது. இதற்கு மொட்டை கோபுரம் என மற்றொரு பெயர் உண்டு. காரணம் மற்ற கோபுரங்களுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த அளவாக 404 சுதை (சுண்ணாம்பு) சிற்பங்களே உள்ளன. இதன் கட்டுமானப்பணியை 1564– 72ல் கிருஷ்ணப்ப நாயக்கர் தொடங்கினார். 1878 ல் வயிநகரம் செட்டியார் நிறைவு செய்தார்.
  • நான்கு வெளிப்புற கோபுரங்கள் தவிர, புது மண்டபத்திற்கு கிழக்கே ஒரு கோபுரம் உண்டு. ராயகோபுரம் என அழைக்கப்படும். இந்த கோபுரத்தின் கட்டுமான பணி 57 அடி முதல் தளத்துடன் நின்று விட்டது. இதுதவிர, கோயிலுக்குள் உள்ள உள் கோபுரங்களும், மண்டபங்களும், சன்னதிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டன.
  • கோயிலில் தினமும் முதல் பூஜை அம்மனுக்கே செய்யப்படுகிறது. பின்பு சொக்கநாதருக்கு பூஜைகள் தொடங்கும். தினமும் இரவு அம்மன் சன்னதியில் உள்ள பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரின் பாதுகைகள் சுவாமி சன்னதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தேறிய பின்பு நடை சாத்தப்படும்.
  • கருவறையில் மீனாட்சி அம்மன், வலது திருக்கரத்தில் மலரை ஏந்தி, வலது தோளில் பச்சைக் கிளியுடன் காட்சி தருகிறார். அம்மனின் கீரிட அலங்காரம் நாயக்கர் காலத்து அமைப்பை போன்று இடது பக்கம் கொண்டை யிட்ட நிலையில் உள்ளது. பச்சை மரகதக் கல்லினால் ஆன அம்மனின் திருவுருவம் குழந்தை முகத்தோடும், அருள்பொழியும் கண்களோடும் காட்சி தருகிறது.
  • இக்கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு நடக்கும் அபி ஷேகங்களை பார்க்க முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் சுந்தரேஸ்வரருடன் அம்மன் எழுந்தருள்வார். அப்போது அபிஷேகத்தை கண் குளிர பார்க்கலாம்.
  • மீனாட்சி கோயிலில் பல பகுதிகள் மண்டபங்கள் என குறிப்பிடப்படுகின்றன. தெற்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்ததும் 100 அடி தூரத்தில் உள்ளது, கண்ணாடி ஊஞ்சல் மண்டபம். வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உற்ஸவ மூர்த்திகளை அமர்த்தி ஊஞ்சலாட்டுவர்.
  • இதற்கு அடுத்து உள்ளது கிளிக்கூண்டு மண்டபம். பல ஆண்டுகளுக்கு முன் இங்கு கூண்டுகள் அமைத்து, கிளிகள் வளர்க்கப்பட்டன. தற்போது இல்லை. இங்கு கலை நயமிக்க 28 தூண்களில் மகாபாரத கதாபாத்திரங்களான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், கர்ணன், ராமாயண கதாபாத்திரங்களான வாலி, சுக்ரீவன் சிலைகள் உள்ளன.
  • கிழக்கு வாயிலில் நுழைந்து மீனாட்சி அம்மன் சன்னதி நோக்கி செல்லும் போது வரும் முதல் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம். எட்டு சக்திகளின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. எல்லா திருவிழாக்களின் போதும் உற்ஸவ மூர்த்திகள் இந்த வழியாக திருவீதி உலா சென்று, இதே மண்டபம் வழியாக மீண்டும் கோயிலுக்கு வந்து சேர்கின்றனர். அஷ்ட சக்தி மண்டபத்தில் இடது பக்க தூணில் திருமலை நாயக்கர் மன்னர் மனைவியருடன் இருக்கும் காட்சி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
  • சுவாமி சன்னதி சுற்று பிரகாரங்களில் ஈசனின் 64 திருவிளையாடலில் 54 திருவிளையாடல் காட்சிகள் சுதை (சுண்ணாம்பு) சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
  • பொற்றாமரை குளம், நந்திதேவரின் வேண்டுகோளின்படி பெருமான் தமது சூலத்தை பூமியில் ஊன்றி உண்டாக்கியது என்பர். இந்திரன் கடம்பவனத்தை (மதுரையை) அடைந்த போது இறைவனை பூஜிக்க பொன் தாமரைகளை கொண்ட தடாகம் ஒன்றை அமைத்ததாகவும், அதுவே பொற்றாமரை குளம் எனப்படுகிறது. குளத்தின் ஒவ்வொரு புறத்திலும் படிக்கட்டுகளும், பிரகாரங்களும் வெவ்வேறு கால கட்டங்களில், வெவ்வேறு மன்னர்களால் கட்டப்பட்டது. திருவிளையாடற் புராண நிகழ்ச்சிகள் நடந்தேறிய சிறப்பை பெற்றுள்ள பொற்றாமரை குளத்தில் மீன்கள் எப்போதும் இருந்ததில்லை.
  • 2003ல் காஞ்சி பீடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இணைந்து பொற்றாமரை குளத்தில் பொன் தாமரையை மிதக்க விட்டனர்.
  • சுவாமி சன்னதி பிரகாரத்தில் உள்ள லிங்கங்கள்: சகஸ்ர லிங்கம், ஏகாதச லிங்கம், சோடச லிங்கம், பஞ்சமுக லிங்கம், ஜுர லிங்கம், சுந்தர மகாலிங்கம், காசி விஸ்வநாதர், ஆகாச லிங்கம், நிருதி லிங்கம், பூவ லிங்கம்.
  • கிழக்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்து, அம்மனின் சன்னதி நோக்கி செல்லும் போது, 25 அடி உயர திருவாட்சி உள்ளது இது 108 எண்ணெய் விளக்குகளை கொண்டுள்ளது. இதை மருது சகோதரர்கள் கோயிலுக்கு வழங்கி உள்ளனர். இன்றும் சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்தவர்கள் கட்டளைகளை நிறுவி இந்த விளக்குகள் ஏற்றப்பட்டு வருகிறது.
  • சுந்தரேஸ்வரர் சன்னதியை தாங்கி நின்று, காவலாக இருப்பது போல எட்டு வெள்ளை யானைகள் சிற்பங்கள் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளன. சுவாமி சன்னதிக்குள் புண்டரீகன் (கபிலன்), ஐராவதம் என இரு யானைகளும், சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு வெளியே வந்ததும், தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு இருபுறமும், வாமனன், குமுதன் என இரு யானைகளும், சுவாமி சன்னதியை வலம் வரும் போது, லிங்கோத்பவர் சன்னதியின் இரு புறமும் அஞ்சனன், புஷ்பதந்தன் யானைகளும், துர்கை அம்மன் சன்னதிக்கு இரு புறம் சுப்ரீதிகன், சர்வ பெளமன் என, இரு யானைகளும் பக்கச் சுவற்றுக்கு உள்ளிருந்து வெளியே வந்து பார்ப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
  • ராஜசேகர பாண்டிய மன்னருக்காக பெருமான் கால் மாற்றி, அதாவது இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி மாற்றி ஆடினார். இப்பெருமானே சுவாமி சன்னதியில் 10 கரங்களுடன் வெள்ளி அம்பலவாணராக காட்சி தருகிறார்.
  • சுவாமி சன்னதி நேர் எதிரே கோயிலின் முக்கிய திருவிழாக்களின் கொடியேற்றம் நடக்கும் கம்பத்தடி மண்டபம் உள்ளது. கொடி மரத்தை சுற்றி சிவபெருமானின் சிறப்புமிக்க 25 வடிவங்கள் தத்ரூப சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் காலசம்ஹார மூர்த்தி, நடராஜர், சந்திர சேகர மூர்த்தி, ரிஷபாரூட மூர்த்தி, லிங்கோத்பவ மூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், சங்கர நாராயணர், தட்சிணா மூர்த்தி, பிட்சாடனர், வீரபத்திரர், சோமாஸ்கந்த மூர்த்தி. ஒவ்வொறு சிற்பத்தையும் நின்று ரசித்து பார்த்தால் பிரமிக்க வைக்கும். இங்குள்ள திருக்கல்யாண சிற்ப தூணின் கீழேயும், இன்னொரு புறத்தில் சோமாஸ்கந்த மூர்த்தி சிற்பத்தூணின் கீழேயும் பெருமாளின் தசாவதார காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.
  • சொக்கலிங்கப் பெருமான் தன் பக்தை வந்தியம்மைக்காக பிட்டமுது உண்டு, வைகைக் கரையில் கூலி ஆளாக மண் சுமந்த சிற்பமும், வந்தியம்மை சிலையும் கம்பத்தடி மண்டபத்தில் அனுமன் சிலைக்கு எதிரே உள்ளது.
  • மீன் உணவை நீக்கி தன்னை வழிபட்ட நாரைக்கு சுவாமி வரம் அருளி முக்தி கொடுத்து அருளிய சிற்பம், கம்பத்தடி மண்டபத்தில் அகோர வீரபத்திரருக்கு இடது புறத்தில் உள்ளது.
  • கம்பத்தடி மண்டபத்திலிருந்து வெளியே வந்ததும், புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் வீர வசந்தராயர் மண்டபம் 400 ஆண்டுகள் பழமையானது. பரப்பு 7,000 சதுரஅடி. 2018ல் நடந்த தீ விபத்துக்கு பின் ரூ.38.30 கோடியில் புனரமைப்பு பணி 8 ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்து, கடந்த 30ல் திறக்கப்பட்டது. மொத்தம் 79 தூண்கள், நடுவில் நந்தி சிலை கொண்ட இந்த மண்டபத்தில் முன்பு பூஜை பொருட்கள், பிளாஸ்டிக், கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருந்தன.
  • தமிழர் கட்டிடக்கலை, சிற்ப கலைக்கு மிக சிறந்த சான்றாக உள்ளது, ஆயிரம் கால் மண்டபம். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள 985 தூண்களில் பிரமிக்க வைக்கும் 24 யாளி தூண்கள், 12 அலங்கார வேலைப்பாடு தூண்கள், 13 கடவுளின் திருவுருவ தூண்கள் அடக்கம். மண்டபத்தின் நடுவில் நடராஜர் சிலை உள்ளது.
  • கோயிலின் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசை எழுந்திடும் 5 இசைத் தூண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் 2 இசை தூண்களும் உள்ளன.
  • 33,000 சிற்பங்கள் உள்ள மீனாட்சி கோயில் புதிய உலக அதிசயங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
  • மீனாட்சி கோயிலுக்குள் 15க்கும் மேற்பட்ட விநாயகர்கள் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விநாயகர்கள்: கிழக்கு வாயிலில் நுழைந்ததும் அஷ்டசக்தி மண்டபத்தில் அருள்புரிகிறார் வல்லப கணபதி. வல்லபையை இடது மடியில் அமர வைத்து, தனது 10 கரங்களிலும் ஆயுதம் ஏந்தியபடி மூஞ்சுறு வாகனத்தில் அமர்ந்துள்ளவாறு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை கடந்து, பிரமாண்ட திருவாட்சியை தாண்டியதும் உள்ள முதலி மண்டபத்தில் அருள்புரிகிறார் நர்த்தன விநாயகர்.
  • மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனை கட்ட தெப்பக்குளத்தில் மண் அள்ளிய இடத்தில் கிடைத்த எட்டு அடி விநாயகர் சிலை தான், முக்குறுணி விநாயகர் என்றும், பின் அதை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • கோயிலுக்குள் தெற்கு ஆடி வீதியில், நூலகம், தேவாரப் பாடசாலை, திருப்புகழ் சபை, தெய்வ நெறிக் கழகம், பன்னிரு திருமுறை மன்றம் உள்ளன.
  • மேற்கு ஆடி வீதியில் கோசாலை உள்ளது. மக்களால் தானமாக வழங்கப்பட்ட பசுக்கள் இங்கே பராமரிக்கப்படுகின்றன.
  • வடக்கு ஆடி வீதியில் திருவள்ளுவர் கழகம், யஜூர் வேத பாடசாலை, சிருங்கேரி சங்கரமடம், சமரச சன்மார்க்க சபைகள் உள்ளன.
  • கிழக்கு ஆடி வீதியில் வன்னிமரத்தடி விநாயகர் சன்னதியை சுற்றி 9 விருட்சங்கள் உள்ளன. நாவல்மரம், அரசமரம், வேப்பமரம், வன்னி மரம், வில்வம், நெல்லி, அத்தி, பூவரசு. இவற்றை சுற்றி வந்தால் நவகிரகங்களை சுற்றிய பலன் உண்டு.
  • மீனாட்சியம்மன் கோயிலில் 12 மாதமும் திருவிழா தான்... சித்திரை பிரம்மோற்ஸவம், ஆடி முளைக்கொட்டு உற்சவம், ஆவணி பிட்டுத்திருவிழா, கார்த்திகை 10 நாள் தீபத்திருவிழா, தை 12 நாள் தெப்ப திருவிழா, மாசி மண்டல உற்ஸவம், வைகாசி வசந்த உற்ஸவம், ஆனி உஞ்சல் உற்ஸவம், புரட்டாசி 9 நாள் நவராத்திரி விழா, ஐப்பசி ஆறு நாள் கோலாட்ட திருவிழா, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்ஸவம் அஷ்டமி சப்பரம், பங்குனி 10 நாள் கோடை வசந்த விழா, பவித்ரோத்ஸவம்.
  • மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னர்களின் குலதெய்வம். அவர்களின் அடையாளமான வேப்பம் பூ மாலையை பட்டாபிஷேகத்தின் போது அம்மனுக்கு அணிவது சிறப்பு.

— தொகுப்பு: சி.எல்.ரவிச்சந்திரன், மதுரை

விளம்பரம்
மேலே
விளம்பரம்