மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 1 · பக்கம் 27 · 11 / 159

கடம்பவனக்குயில் மீனாட்சி

  • மீனாட்சி அம்மன் கோயிலில் மூலவர் சொக்கநாதர். உற்ஸவர் சோமாஸ்கந்தர் இவரே திருவிழாக்களில் வீதிகளில் பவனி வருகிறார்.
  • சுவாமி சன்னதியில் உள்ள துவார பாலகர்களின் பெயர்கள் ஆட்கொண்டார். உய்யக்கொண்டார்.
  • கோயிலில் சங்கப்புலவர்கள் 49 பேருக்கும் சிலாரூபத்தில் சன்னதி உள்ளது. தினமும் பூஜையின்போது சன்னதி திறக்கப்படுகிறது.
  • பொற்றாமரைக்குளத்தின் தெற்குபகுதியில் தமிழ் வேதமாகிய திருக்குறளை சலவைக்கற்களால் பதித்து வைத்தவர் திருப்பனந்தாள் காசிமடத்து அருள்நந்தி சுவாமிகள்.
  • தமிழ் வேதமாகிய திருக்குறளின் பெருமையை நிலைநாட்ட சங்கப்பலகை தோன்றிய பொற்றாமரைக்குளமே இக்கோயிலின் முக்கிய தீர்த்தம்.
  • பொற்றாமரை குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள தூண்களில் 24 சங்கப்புலவர்களின் சிலைகள் உள்ளது.
  • நாயன்மார்களில் மங்கையற்கரசி, நின்றசீர்நெடுமாறன், குலச்சிறையார், மூர்த்தி நாயனார் ஆகிய நால்வரும் மதுரையை சேர்ந்தவர்கள்.
  • மதுரை நகரை தாமரை மலருக்கு நிகராக ஒப்பிடும் சங்க நூல் ‘பரிபாடல்’.
  • மதுரை நகரை ஆவணப்படமாக்கி நம் கண்முன் காட்டும் நூல் மாங்குடி மருதனார் எழுதிய ‘மதுரை காஞ்சி’.
  • அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற முருகன், ‘கூடல் குமரன்’ என்னும் பெயரில் மீனாட்சி அம்மன் சன்னதி பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார்.
  • பொற்றாமரை குளத்தில் சொக்கநாதர் அருளால் சிவலிங்கம் கண்டெடுத்த அருளாளர் குருஞானசம்பந்தர். தருமபுர ஆதினத்தை நிறுவி முதல் குருநாதராக இருந்தார். அன்று அவர் கண்டெடுத்த சிவலிங்கத்தையே தற்போதும் தருமபுர மடத்தில் பூஜை செய்து வருகின்றனர். சொக்கநாதர் கோயிலின் நுழைவு வாயிலில் இவருக்கு சன்னதி உள்ளது.
  • கலைக்கூடமாகத்திகழும் ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களே உள்ளன.
  • நூற்றுக்கால் மண்டபத்தை முன்பு ‘மண்டபநாயக மண்டபம்’ என அழைத்து வந்தனர்.
  • வடக்கு கோபுரம் அருகில் ஐந்து இசைத்தூண்கள் வரிசையாக அமைந்துள்ளன.
  • நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த சுவாமிகள் தங்கியிருந்த மடம் தெற்கு ஆவணி மூலவீதியில் அவருடைய பெயரிலேயே உள்ளது.
  • நந்தி மண்டபம் அருகில் உள்ள ஒரு தூணில் விநாயகர் பெண்வடிவில் காட்சியளிக்கிறார்.
  • நவக்கிரக மண்டபம் அருகில் ஒரு தூணில் உள்ள சட்டை நாதருக்கு பூட்டு காணிக்கை செலுத்துகின்றனர்.
  • 108 வீணை வழிபாடு விஜயதசமி நாளில் நடத்தப்படுகிறது.
  • கடம்பவனக்குயிலான மீனாட்சியை இசையில் ஆர்வமுள்ளவர்கள் தரிசித்தால் அதில் பிரகாசிக்கலாம்.
  • வந்தியம்மை என்னும் மூதாட்டி புட்டு வியாபாரம் செய்து வந்தாள். ஒருநாள் வைகையில் வெள்ளம் வரவே, அவருக்கு உதவி செய்ய பணியாராக வந்தார் சொக்கநாதர். இதற்கு கூலியாக வந்தியம்மையிடம் இருந்து பிட்டு வாங்கி சாப்பிட்டார். இதுவே பிட்டுக்கு மண்சுமந்து திருவிளையாடல் ஆகும். இத்திருவிளையாடலை தற்போதும் ஆண்டுதோறும் ஆரப்பாளையத்தில் உள்ள புட்டுத்தோப்பில் நடத்துகின்றனர்.
  • சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று அன்று மீனாட்சி அம்மன், சொக்கநாதரை தரிசனம் செய்தால் ஒரு ஆண்டு முழுவதும் தரிசித்த பலன் கிடைக்கும். இதை சொன்னவர் வேறு யாருமல்ல... சாட்சாத் அந்த சொக்கநாதரே... ஆம். சிவபூஜை செய்த இந்திரனிடம் அவர் கூறினார். இதை திருவிளையாடல் புராணம் நமக்கு கூறுகிறது.
விளம்பரம்
மேலே
விளம்பரம்