சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 48 · 101 / 159
திருப்புகழால் நிறைவேறிய திருப்பணி
வேத ரிஷிகள் என்றைக்கோ வாழ்ந்தவர்கள் அல்ல. இந்த கலியுகத்திலும் மக்களோடு மக்களாக வாழ்ந்து நல்வழி காட்டியவர்கள் தான் அவர்கள். அவர்களே பூவுலகத்தில் மானிடராக பிறந்த நாயன்மார்களாகவும், ஆழ்வார்களாகவும், இன்ன பிற அடியார்கள் என்று அழைக்கிறோம். இவர்களே உண்மையில் ஆன்மிகத்துக்கு தொண்டு செய்து ஏணியாக, தோணியாக, ஞானியாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அவர்களுள் ஒருவர் தான் மதுரை திருப்புகழ் ஐயர். இவரே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு ஞானகுரு. சுவாமிகளின் திருப்பெயரை ஒரு தரம் சொன்னாலே போதும் செய்த பாவம் தீரும். மற்றொரு முறை சொன்னாலே போதும் சர்வ புண்ணியமும் வந்து சேரும். பொருளாசை, புகழாசை இல்லாத மாமனிதராக வாழ்ந்து காட்டியவர் திருப்புகழ் ஐயர். மதுரை ஆடி வீதியில் திருப்புகழ் சபை அமைத்தவர் இவரே. திருப்புகழை பாடி வலம் வருவதே இவரது தினசரி பணியாகும். வாரியார் சுவாமிகள் தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இவரைப் பற்றி சுவைபட சொல்லியுள்ளார். இதோ உங்களுக்காக... ஒரு சமயம் மதுரைத்திருப்புகழ் சுவாமிகள் திருவண்ணாமலைக்குத் திருக்கார்த்திகை நாளில் திருப்புகழ் பாராயணம் செய்ய வந்தார். அவரை காங்கேயநல்லூருக்கு அழைத்து வந்து திருப்புகழை பாடினார். ஆர்க்காட்டுக்கருகில் என் தமக்கையாரும் அவர் கணவனாரும் தங்கள் ஊராகிய திமிரிக்கு அழைத்து சென்று விரிவுரை செய்வித்தார்கள். மறுநாள் காலை சுவாமிக்குப் பாதபூஜை செய்து பழங்கள் நிறைந்த தட்டில் 50 ரூபாய் வைத்துப் பாதகாணிக்கையாகத் தந்தார்கள். சுவாமிகள் சிறிது கோபத்துடன் நின்று கொண்டிருந்த என் தந்தையாரை நோக்கி எனக்கு ஏன் பணம் என்று கேட்டு முறைத்துப் பார்த்தார். அப்பொழுது சிறுவனாகிய நானும் அருகில் நின்று கொண்டிருந்தேன். என் தந்தையார் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிக் கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன் சுவாமிகள் கோபம் தணிந்து சாந்தமாக, "ஏன் அழுகின்றாய்?!" என்று கேட்டார். என் தந்தையார் "என்னுடைய கமலாட்சி என்ற இரண்டாவது புதல்வியைத் தருமலிங்கம் என்ற இவருக்கு மூன்றாம் தாரமாகத் திருமணம் செய்து கொடுத்தேன். திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இவர்கள் காசி, இராமேசுவரம் போய் வந்தார்கள். மாதந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று திருவண்ணாமலை சென்று மலைவலம் வந்து வழிபாடு செய்கின்றார்கள். புத்திர பாக்கியம் அமையவில்லை. அதுதான் எனக்குப் பெரும் கவலை" என்று கூறினார். உடனே, சுவாமிகள் ஆவேசம் வந்தவரைப்போல் தட்டிலிருந்த வாழைப் பழங்களில் இரண்டினை எடுத்து என் தமக்கையார் கையில் கொடுத்து "அம்மா! ஒரு பழத்தை நீயும், மற்றொரு பழத்தை உன் கணவனாரும் சாப்பிடுங்கள். இந்த மாதம் விலக்கம் வரும். அடுத்த மாதம் உன் மணி வயிறு வாய்க்கும் ஆண் குழந்தை பிறக்கும். அடுத்த கார்த்திகை விழாவிற்கு நான் திருவண்ணாமலைக்கு வரும்போது நீ குழந்தையுடன் வருக" என்று கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றார். இந்த நிகழ்ச்சி நிகழ்ந்தது கார்த்திகை மாதம். சுவாமிகள் புனித வாக்கின்படி என் தமக்கையார் மார்கழி மாதம் கருவுற்றுப் புரட்டாசி மாதம் ஆண் குழந்தையைப் பெற்றார். கார்த்திகை மாதத்தில் திருவண்ணா மலைக்குப் போய்த் தாங்கள் கட்டியுள்ள சத்திரத்தில் சுவாமிகளை அழைத்துப் பாதபூஜை செய்து, குழந்தையைச் சுவாமியின் திருவடியில் இட்டார்கள். சுவாமிகள் ஆசி கூறி, ‘அம்மா! இவனுக்குத் தம்பியும் பிறப்பான்’ என்று ஆசி கூறினார். காங்கேயநல்லூர் முருகன் கோயிலின் ராஜகோபுரத் திருப்பணியை நிறைவேற்ற வேண்டும் என விரும்பினார் என் தந்தையார். அதற்காக பங்குனி மாதம் என்னை அழைத்துக்கொண்டு மதுரைக்குச் சென்று திருப்புகழ்ச் சுவாமிகளை வணங்கினார். அவரிடம், ‘சுவாமி! அடியேன் மிகவும் ஏழை; பெரிய குடும்பஸ்தன் முருகன் கோயில் ராஜகோபுரத் திருப்பணி தொடங்கிப் பொருள் இன்றித் தடைபட்டு நிற்கின்றது. செட்டி நாட்டில் சென்று விரிவுரை செய்து திருப்பணி செய்யக் கருதுகிறேன். தங்களுக்குத் தெரிந்த நகர தனவணிகர்களுக்குப் பரிந்துரைக் கடிதம் தருக’ என்று கேட்டார். சுவாமிகள் புன்முறுவல் பூத்து, "ஒரு ரூபாய் மூலதனமாக வைத்துக்கொண்டு திருப்பணியைத் தொடங்கு. உன் ஊருக்கு அருகிலிருந்தே அதற்குரிய பணம் வரும். ராஜ கோபுரத் திருப்பணி 6 மாதத்தில் முற்றுப்பெறும் திருப்பணி நடக்கும்பொழுது ஓர் உயிர்ச்சேதம் வரும். அப்பொழுது இந்தத் திருநீற்றை எடுத்து இடுக" என்று கூறி ஒரு திருநீற்றுப் பையை அளித்தார். என் தந்தையாருக்குக் குருநாதன் வாக்கு என்றால் வேத வாக்கு என்ற நம்பிக்கை உண்டு. என்னை அழைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பிச் சென்றார். சித்திரை மாதம் 14 தேதி கால்கோள் விழா செய்தார். 40 நாளில் கோபுரம் கட்டட வேலை முடிவு பெற்றது. ஐப்பசி மாதம் பூச்சு வேலை செய்யும்பொழுது கோபுரத்தின் உச்சியிலிருந்து என் தம்பி ஸ்ரீசைலவாசன் நழுவி விழுந்து விட்டான். அதைக் கண்டு ஊரே கலங்கி அழுதது. என் தந்தையார் முருகா! முருகா! என்று கதறி சுவாமிகள் கொடுத்த திருநீற்றை எடுத்துச் சடக்கர மந்திரம் சொல்லிப் பூசினார் என் தம்பி மூர்ச்சை தெளிந்து சுகமுற்றான். பின்னர், 3 மாதத்தில் இராஜகோபுரத் திருப்பணி முற்றியது. 1933ல் மதுரை சுவாமிகளை அழைத்து அவருடைய சீரிய தலைமையில் மகா கும்பாபிஷேகம் செய்வித்தார். முருகன் கோயிலில் நூதனமாக அருணகிரி நாதர் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்தார். பார்த்தீர்களா... திருப்புகழ் சுவாமி என்ற பெரிய மகான் வாழ்ந்த மதுரையில் நாமும் வாழ்கிறோம் என்றால் புண்ணியம்தானே செய்திருக்கிறோம். மேலும் புண்ணியத்தை சேர்க்க திருப்புகழ் படிப்போம். குருவருளை பெறுவோம்.