சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 54 · 112 / 159
மதுரையுடன் தொடர்புடைய நாயன்மார்கள்
மீனாட்சி அம்மன் கோயில் 274 பாடல் பெற்ற தலங்களில் ஒன்று மட்டுமல்ல, 63 நாயன்மார்களில் நான்கு பேருக்கு முக்தி தலமாகவும் திகழ்கிறது. அவர்கள் மூர்த்தி நாயனார், குலச்சிறை நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார். இவர்கள் நால்வரும் 7ம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்தவர்கள். இவர்களோடு மதுரைக்கு வந்து சமணத்தை வென்ற திருஞானசம்பந்தர், திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர் ஆகியோரையும் சேர்த்தால் மதுரையின் சைவ வரலாறு முழுமை பெறும்.
- மதுரையை காத்த அரசி அவதார தலம் பழையாறை (கீழப்பழையாறை, கும்பகோணம் அருகில்), சோழ இளவரசி. 7ம் நூற்றாண்டு. முக்தி தலம் – மதுரை. பூஜை நாள் – சித்திரை மாதம் ரோகிணி. வரலாறு: சோழ மன்னன் மகளாக பிறந்து பாண்டிய மன்னர் நின்றசீர் நெடுமாறனை (கூன் பாண்டியன்) மணந்தார். அப்போது மதுரை முழுவதும் சமணம் பரவியிருந்தது. மன்னனும் சமணனாக மாறியிருந்தான். இந்த இருண்ட காலத்தில் சைவத்தை பின்பற்றிய இருவரில் ஒருவர் இவரும், மற்றொருவர் அமைச்சர் குலச்சிறையார். மீனாட்சி கோயிலுக்கு செய்த தொண்டு: மதுரையில் சைவம் அழிந்து விடக்கூடாது என்று தவித்த அரசி, திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வர குலச்சிறையாரை அனுப்பினார். சம்பந்தர் வந்து அனல்வாதம், புனல்வாதம் நடத்தி சமணர்களை வென்று மீண்டும் மதுரையில் சைவக் கொடி ஏற்ற காரணமாக இருந்தார். இதனால் ஞானசம்பந்தர் இவரை ‘மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை’ என போற்றுகிறார்.
- குலச்சிறை நாயனார் - பெருநம்பி பிறப்பு, வாழ்நாள்: அவதார தலம் மணமேற்குடி (புதுக்கோட்டை மாவட்டம்), 7ம் நூற்றாண்டு, முக்தி தலம் மதுரை, பூஜை நாள் - ஆவணி மாதம் அனுஷம். வரலாறு: பாண்டிய மன்னனின் பிரதம அமைச்சர். திருநீறு, ருத்ராட்சம் அணிந்தவரை கண்டால் வணங்குவார். கோயில் பணி: மங்கையர்க்கரசியாருடன் இணைந்து சம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்து, மீனாட்சி கோயிலில் மீண்டும் பூஜை நடக்க வழிவகுத்தார். சமணர்களின் சூழ்ச்சியால் சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீ வைத்த போது அவரை காப்பாற்றியவர். பின்னர் மன்னர் சைவத்திற்கு மாறிய பின், மதுரை கோயிலில் திருப்பணிகள், கோபுர திருப்பணி, அடியார் தொண்டை முன்னின்று நடத்தினார். காலம் முழுவதும் ஆன்மிகப்பணி செய்து மதுரையிலேயே முக்தி அடைந்தார்.
- நின்றசீர் நெடுமாற நாயனார் (கூன் பாண்டியன், அரிகேசரி மாறவர்மன்) பிறப்பு, வாழ்நாள்: அவதார தலம் மதுரை, ஆட்சி காலம்: 670-–700. பூஜை நாள் - ஐப்பசி மாதம் மூலம். பாண்டிய பேரரசன். வரலாறு: முதுகில் கூன் இருந்ததால் ‘கூன் பாண்டியன்’ எனப்பட்டார். சமண சமயத்தை தழுவி, உடல் முழுவதும் தீராத கொப்புளங்களால் அவதிப்பட்டார். சமணர்கள் குணப்படுத்த முடியவில்லை. ஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி திருநீறு பூசி நோயை குணப்படுத்தினார். கூன் நிமிர்ந்து ‘நின்றசீர் நெடுமாறன்’ ஆனார். இதை நினைவு கூரும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதிக்கு எதிரே வெளிமண்டபத்தில் திருநீற்று சாம்பல் இருப்பதை காணலாம். அதனை பக்தர்கள் பக்தியோடு எடுத்து தங்களின் வயிற்றில் பூசிக் கொள்கின்றனர். கோவில் பணி: சைவத்திற்கு மாறிய பின் மதுரை மீனாட்சி கோவிலில் பல திருப்பணிகளை செய்தார். வேள்விக்குடி செப்பேடு இவர் துலாபாரம், ஹிரண்ய கர்ப்பம் தானம் செய்ததாக கூறுகிறது. சிவனுக்கு திருப்பணி செய்து ‘நெல்வேலி வென்ற நெடுமாறன்’ என போற்றப்பட்டார். இவரும் நாயன்மார்களில் ஒருவரானார்.
- மூர்த்தி நாயனார்- வணிகரிலிருந்து மன்னரானவர் பிறப்பு, வாழ்நாள்: அவதார தலம் மதுரை, வைசிய குலம், 7ம் நூற்றாண்டு, முக்தி தலம் மதுரை, பூஜை நாள் - ஆடி மாதம் கார்த்திகை. வரலாறு: மதுரையில் சந்தனக் கட்டை அரைத்து சிவலிங்கத்திற்கு பூசும் தொண்டு செய்தவர். அப்போது கர்நாடக மன்னன் மதுரையை கைப்பற்றி சமண மதத்தை பரப்பினான். சந்தனம் கிடைக்காமல் தடுத்தான். மூர்த்தியார் தன் கையை கல்லில் தேய்த்து எலும்பு தேயும் வரை சந்தனம் போல் பூசினார். திடீரென அரசன் மாண்டான். மக்கள் மூர்த்தியாரை மன்னனாக தேர்ந்தெடுத்தனர். மன்னராக இருந்தும் தினமும் சந்தனக் காப்பு தொண்டை விடவில்லை. கோவில் பணி: மீனாட்சி கோயிலில் சந்தனக் காப்பு என்ற தனி வழிபாட்டை உருவாக்கியவர். இன்றும் மதுரையில் சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் இவர் பெயரால் நடக்கிறது. கூடுதல் தொடர்புடையவர்கள் திருஞானசம்பந்தர்: சீர்காழியில் பிறந்தாலும் மதுரையில் அனல்வாதம், புனல்வாதம் நடத்தி சைவத்தை நிலைநாட்டியவர். மதுரையில் 10 பதிகங்கள் பாடினார். மாணிக்கவாசகர்: திருவாதவூர் (மதுரை அருகே) பிறந்தவர். மதுரையில் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர். மீனாட்சி கோயிலில் பல பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடிய திருவாசகம் மார்கழியில் இன்றும் ஓதப்படுகிறது. இவர்கள் அனைவரின் சிலைகள் மீனாட்சி கோவில் ஆயிரங்கால் மண்டபம், சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் 63 நாயன்மார் மண்டபத்தில் உள்ளன. – கு.சிவஞானம், எழுத்தாளர்.