மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 66 · 146 / 159

குபேர வாழ்வு தருபவர்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை இயற்கையின் பஞ்சபூதங்கள் ஆகும். இவற்றின் ஒவ்வொரு அம்சமாகவும் சிவபெருமான் கோயிலில் வீற்றிருக்கிறார். மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் உள்ளன. அதில் நீருக்குரிய ஸ்தலமாக உள்ளது செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில்.

சோழாந்தகன் என்ற மன்னன் ஒரு சிவபக்தன். இவனது ஆட்சியில் காலம் தவறாமல் மழை பொழிந்து, விளைச்சல் பெருகி மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். இதற்கு காரணம் இவனது சிறந்த சிவபக்தி தான். இவன் எப்போதும் சிவபூஜை செய்த பின்பு தான் சாப்பிடுவான். ஒரு முறை இவன் வேட்டையாட காட்டிற்கு சென்றான். அப்போது ஒர் அழகிய மானை பார்த்தான். விரட்டினான். ஆனால் இவனது பிடியில் சிக்கவில்லை. மானை விரட்டிய களைப்பால் மயங்கிய மன்னன் நடு காட்டில் விழுந்து விட்டான். பயந்து போன இவனது பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் களைப்பு தீர உணவை அருந்த கூறினர். ஆனால் சிவபூஜை செய்யாமல் சாப்பிடமாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்தான். புத்திசாலி அமைச்சர் ஒருத்தர், அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, ‘‘மன்னா, இங்கே ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமே’’ என்று யோசனை கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பிறகு தான், தாம் வணங்கியது லிங்கம் அல்ல - அது ஒர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான். இறைவா! நான் இது நாள் வரை உன்னை பூஜித்தது உண்மையானால், நீ இந்த ஆப்பில் வந்து என்னை அருள்பாலிக்க வேண்டும்'' என மன்றாடினான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த சிவபெருமான் அந்த ஆப்பிலே தோன்றி அருள் பாலித்தார். சிவன் ஆப்பு உடையார் ஆனார். அந்த ஊர் ஆப்பனூர் ஆனது. திருவாப்பனூர் என்பதே இவ்வூரின் பழையபெயர்.

அன்னவிநோதன்

சோழாந்தகனின் வழி வந்த சுகுண பாண்டியனின் ஆட்சியில் பஞ்சம் நிலவியது. ஆனாலும் அங்கிருந்த சிவன் கோயிலின் அர்ச்சகர் சிவனுக்காக சிறிது பயிர்செய்து நைவேத்யம் செய்து வந்தார். ‘நாடே பஞ்சமாக இருக்கும் போது சுவாமிக்கு நைவேத்யமா’ என கோபப்பட்ட மக்கள் அர்ச்சகரை துன்புறுத்தினர். வருந்திய அர்ச்சகர், சிவனிடம் முறையிட்டார். அதற்கு சிவன், ‘நீ உன் மனைவியுடன் என்னை பின் தொடர்ந்து வா. நாம் வேறிடம் செல்வோம்’ என்று ரிஷபத்துடன் கிளம்பினார். ரிஷபம் வந்து நின்ற இடமே ரிஷப (இடப) புரமானது. அதுவே ஆப்பனூர் ஆனது என்றும் கூறுவர். பஞ்சத்தின் காரணமாக அர்ச்சகர் வைகை ஆற்று மணலை வைத்து சமைக்க எண்ணினார். அப்போது சுவாமியின் அருளால் ஆற்று மணல் அன்னமாக மாறியது. இத்தல சிவபெருமானுக்கு, ‘அன்னவிநோதன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

கீர்த்தி சிறியது மூர்த்தி பெரியது

லிங்கம் சிறியது தான். ஆனாலும் இவரது பெருமையோ மிகவும் சிறப்பானது. மலைகளில் மேருவைப்போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப்போலவும், பிரகாசமுள்ள பொருள்களுள் சூரியனைப்போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப் போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும் இம்மாதிரி எது எது அதிகமோ, அதேபோல் இங்குள்ள ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களுள் விசேஷமானவர். இவரை வணங்கினாலே மற்ற மூர்த்திகளை அர்ச்சித்த பலன் கிடைக்கும் என புராணம் கூறுகிறது. மதுரையிலுள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் அப்பு (நீர்) ஸ்தலமாகும்.

எப்படி செல்வது
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து சிம்மக்கல் வழியாகவும் கோரிப்பாளைத்தில் இருந்து செல்லூர் வழியாகவும் கோயிலை அடையலாம்.
நேரம்
காலை 6:30 – 11:00 மணி; மாலை 5:00 – 8:00 மணி
தொடர்புக்கு
94436 76174, 0452 – 253 0173
விஷேசநாள்
ஆனி உத்திரம், ஐப்பசி அன்ன அபிஷேகம், கார்த்திகை சோமவாரம் மார்கழி திருவாதிரை, மாசி மகத்தன்று பிரம்மோற்ஸவம்
விளம்பரம்
மேலே
விளம்பரம்