மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 67 · 151 / 159

முத்தான முத்தல்லவோ...

மலையத்துவஜ பாண்டியன் குழந்தைப்பேறு இல்லாமல் வருந்தினான். அவன் புத்திரகாமேஷ்டியாகம் செய்தபோது, யாகத்தீயில் உமையவள் மூன்று மார்புகளுடன் தோன்றினாள். தனக்கு கணவனாக வாய்க்க இருப்பவரைக் காணும் போது மூன்றாவது தனம் மறையும் என அசரீரி ஒலித்தது. குழந்தைக்கு தடாதகை என்னும் பெயரிட்டு வீர மகளாக வளர்த்தான். மீன் போன்ற கண்களைக் கொண்டவள் என்பதால் தடாதகைக்கு அங்கயற்கண்ணி, மீனாட்சி என்ற பெயர்களும் உண்டு. பாண்டிய நாட்டின் இளவரசியாக தடாதகை விளங்கினாள். போர்முறைகளைக் கற்றுத் தேர்ந்தாள். வில், வாள்பயிற்சி, குதிரையேற்றம் ஆகிய 64 கலைகளிலும் முதன்மை பெற்றாள். எட்டு திக்கும் நடுங்கும்படியாக போருக்குப் புறப்பட்டாள். எல்லா மன்னர்களும் அவளது வீரத்தைக் கண்டு அஞ்சி கப்பம் கட்ட சம்மதித்தனர். பூலோகத்தையே தன் குடைக்கு கீழ் கொண்டு வந்த அவள், இறுதியில் சிவபெருமான் ஆட்சி புரியும் கயிலை மலையை அடைந்தாள். மீனாட்சியின் வீரதீரத்தைக் கண்ட கயிலாய காவலரான நந்தீஸ்வரர், சிவனிடம் அதுபற்றி முறையிட்டார். வந்திருப்பவள் உமையவள் தான் என்பதை அறிந்த சிவன் அவள் முன் வந்தார். சிவனைக் கண்ட மீனாட்சியின் மூன்றாவது தனம் மறைய, அவரே தன் கணவர் என்பதை உணர்ந்து மகிழ்ந்தாள். சிவனுக்கும், உமையவளுக்கும் மதுரையில் இனிதாக திருமணம் நடந்தேறியது. முத்துக்குப் பேர் பெற்றது பாண்டிய நாடு. அதனால், பாண்டிய நாட்டின் அரசியான மீனாட்சியும் முத்தங்கி சேவையில் காட்சி தருகிறாள். முத்தங்கி சேவையைத் தரிசித்தால், மனக்குழப்பம் நீங்கும். தெளிவு உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும்.

விளம்பரம்
மேலே
விளம்பரம்