சிறப்பு மலர் · பகுதி 3 · பக்கம் 70 · 159 / 159
மீனாட்சிக்கு திருமாங்கல்யம் செய்த தலம்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் உலகப்பிரசித்தம். அந்த திருக்கல்யாணத்தில் மீனாட்சிக்கு அணிவிக்கும் திருமாங்கல்யம் செய்த ஊர் திருமங்கலம். மீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவபெருமான் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு தேவர்கள் இவ்வூருக்கு வந்தனர். எதற்காக என்றால்... தங்கத்தை உருக்கி திருமாங்கல்யம் செய்வதற்காக. மாங்கல்யம் செய்வதற்கு முன்பாக சிவனை வழிபட விரும்பினர். உணர்ந்த சிவபெருமான் திருமணத்திற்கு முன்பாகவே மீனாட்சியுடன் இங்கு எழுந்தருளினார். இதனால் சுந்தரேஸ்வரர், மீனாட்சிக்கு இங்கு பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது. திருமாங்கல்யம் செய்யப்பட்ட ஊர் என்பதால் 'திருமாங்கல்யபுரம்' என அழைக்கப்பட்டது. காலப் போக்கில் 'திருமங்கலம்' என மாறியது. சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள்கிறாள். பிரகாரத்தில் வில்வவிநாயகர், உஷா, சாயாதேவியுடன் சூரியன், நாகர், ஆஞ்சநேயர், மங்கள தட்சிணாமூர்த்தி, மயில் மீது அமர்ந்தபடி வள்ளி, தெய்வானையுடன் முருகன், அஷ்டபுஜ துர்கை ஆகியோர் உள்ளனர். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இங்கு மீனாட்சி, சொக்கருக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும். திருமணத்துக்கு முன்னதாக இங்கு வந்து தாலிக்கொடியை வைத்து பூஜை செய்தால் வாழ்க்கை சிறக்கும். யோகசனீஸ்வரர் தனிச் சன்னதியில் தெற்குநோக்கி அருள்கிறார். சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் எள்விளக்கு போட்டு வேண்டுகின்றனர். இங்கு வில்வமும், வேம்பும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இருக்கிறது. இதனடியில் வில்வவிநாயகர் உள்ளார். சுவாமி, அம்பாளாக கருதப்படும் விருட்சங்களின் மடியில் இவர் அமர்ந்திருப்பதால் இவரிடம் வேண்டிக்கொள்ளும் அனைத்து செயல்களும் நிறைவேறும். இவருக்கு அருகம்புல் மாலையிட்டு கொழுக்கட்டை நைவேத்யம் செய்தால் கல்வி, கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம், உடல் பலம் உட்பட சகல பலன்களும் கிடைக்கும்.
- எப்படி செல்வது
- மதுரை - திருநெல்வேலி ரோட்டில் 20 கி.மீ.,
- திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து உசிலம்பட்டி ரோட்டில் 1 கி.மீ., நேரம்: காலை 6:30 - 11:30; மாலை 5 5:00 - 9:00 மணி தொடர்புக்கு: 0452-234 2782 விஷேசநாள்: சித்திரையில் திருக்கல்யாணம், மாசிமகம், மகாசிவராத்திரி