மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 34 · 45 / 159

கும்பாபிஷேக பூஜைகள்

கு ம்பாபிஷேக பூஜை முறைகளை ‘பிரதிஷ்டா விதி’ எனக் குறிப்பிடுவர். கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி உத்ஸவாந்தம், உத்ஸவாதி பிரயாசித்தாந்தம் ஆகிய ஆகமங்கள் இதற்கான விதிமுறைகளை விளக்குகிறது. அனுக்கை முதல் மண்டலாபிஷேகம் வரையுள்ள வழிபாடு இதில் அடங்கும்.

அனுக்கை: ஆகம சாஸ்திர நெறி

தவறாமல், கும்பாபிஷேக கிரியைகளை (பூஜைகளை) முறையாகச் செய்யும் ஆச்சாரியரைத் தேர்ந்தெடுத்து கடவுளின் அனுமதி பெற்று நியமிப்பது அனுக்கை. கணபதி ஹோமம்: கும்பாபிஷேகத் திருப்பணி தடையின்றி இனிதே நிறைவேற விநாயகப் பெருமானை வழிபடுவது கணபதி ஹோமம். வாஸ்து சாந்தி: இடையூறு நீங்கி முயற்சியில் வெற்றி பெற தேவர்களை வணங்குவது வாஸ்து சாந்தி. அசுர சக்திகளால் துன்பம் நேராமல் இருக்க இதனைச் செய்வர். மண் எடுத்தல்: இந்திரன், வருணன், வாயு, ஈசானன், குபேரன் உள்ளிட்ட அஷ்டதிக்கு பாலகர்களிடம் அனுமதி பெற்று பூமியில் மண் வெட்டி எடுத்தல். இந்த வழிபாட்டின் போது மண் எடுத்த பள்ளத்தில் திரவியங்களால் அபிஷேகம் செய்வர். முளையீடு: பாலிகை என்னும் மண் பாத்திரத்தில் மண் நிரப்பி நவதானிய விதைகளை இட்டு முளைக்கச் செய்வர். உலகைப் படைத்தவர் கடவுளே என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த வழிபாடு நடக்கிறது. காப்பு கட்டு: கும்பாபிஷேக கிரியைகளை நடத்தும் ஆச்சாரியனுக்கு இடையூறு ஏதும் வராமல் இருக்க வேண்டி மந்திரப்பூர்வமாக கையில் கட்டப்படும் கயிறு காப்புக்கட்டு. கும்ப ஸ்தாபனம்: ஒரு குடத்தை புனித நீரால் தூய்மைப்படுத்தி, அதனை உடலாகப் பாவித்து, அதன் மீது தோல் போல புதிய வஸ்திரம்(துணி) அணிவிப்பர். ரத்தமாக பாவித்து அதன் மீது மண் பூசுவர். நரம்புகளாக நூல்களைக் குறுக்கும் நெடுக்குமாக சுற்றுவர். குடத்திற்குள் நவரத்தினங்களை இடுவர். உயிரூட்டும் விதத்தில் மந்திரங்களை ஜபிப்பர். கலாகர்ஷணம்: விநாயகர், முருகன், சுவாமி, அம்மன் என கோயிலிலுள்ள ஒவ்வொரு தெய்வத்தையும் ஒவ்வொரு குடத்தில் ஆவாஹனம்(வீற்றிருப்பதாக) கருதி குடத்திற்கு அலங்காரம் செய்வர். அந்தந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களால் அர்ச்சிப்பர். யாகசாலை: கும்பாபிஷேகத்திற்கு முன் ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது என்னும் எண்களின் அடிப்படையில் யாக குண்டங்களை அமைப்பர். அதில் தீ வளர்த்து வழிபாட்டுக்குரிய பூஜைப் பொருட்களை மந்திரம் ஜெபித்து அதில் இடுவர். இது அந்தந்த தெய்வத்திடம் சேர்வதாக ஐதீகம். இதற்கு ‘ஹவிஸ்’ என்று பெயர். பிம்பசுத்தி: கருவறையில் இருந்த விக்ரஹத்தை துõய்மைப்படுத்துவது பிம்பசுத்தி. மரப்பட்டை, தளிர், மண் இவைகளால் தேய்த்து அழுக்கு நீக்கிய பின் அபிஷேகம் செய்வர். ஸ்பரிசாகுதி: யாகசாலைக் குடம், கருவறையில் இருக்கும் விக்ரகம் இரண்டையும் இணைப்பது ஸ்பர்சாகுதி எனப்படும். தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட கயிறு, தங்க கம்பி, வெள்ளி கம்பி இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஸ்பரிசாகுதி செய்வர். அஷ்டபந்தனம்: கருவறையில் இருக்கும் விக்ரகத்திற்குச் செய்யப்படுவது முக்கிய கிரியை இது. இதன் மூலம் பீடத்தையும், விக்ரகத்தையும் ஒன்று சேர்ப்பர். இதனை மருந்து சாத்துதல் என்றும் சொல்வர். கொம்பரக்கு, குங்கிலியம், சுக்கான், கற்பொடி, காவிக்கல், செம்பஞ்சு, இலிங்கம், வெள்ளை மெழுகு, வெண்ணெய் ஆகிய எட்டு பொருட்கள் மருந்தில் இடம் பெற்றிருக்கும். கும்பாபிஷேகம்: யாகசாலையில் பூஜிக்கப்பட்ட குடத்திலுள்ள தீர்த்தத்தை கோபுரக்கலசம், விமானம் ஆகியவற்றிற்கு அபிஷேகம் செய்வது கும்பாபிஷேகம். இதன் மூலம் கருவறையில் உள்ள விக்ரகத்திற்கு சக்தி ஊட்டப்படுகிறது. மகாபிஷேகம்: கும்பாபிஷேகம் முடிந்ததும், கருவறையிலுள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்வர். அலங்காரம் செய்து நைவேத்யம் படைப்பர். இதனை மகாபிஷேகம் என்பர். மண்டலாபிஷேகம்: கும்பாபிஷேகத்திற்குப் பின், மூன்று பட்சம்(45நாள்) கழித்து நடத்துவது மண்டலாபிஷேகம். இந்நாளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுவர்.

விளம்பரம்
விளம்பரம்
மேலே
விளம்பரம்