மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 42 · 77 / 159

கலைநயமிக்க சிற்பங்கள்

அஷ்ட சக்தி மண்டபத்தில் உள்ள எட்டு தூண்களில் சக்தியின் எட்டு வடிவங்களை சிற்பங்களாக வடித்துள்ளனர்.

முதலிப்பிள்ளை மண்டபத்தில் சிவபெருமானது பிட்சாடனர் வடிவம், தாருகாவன முனிவர்கள், மோகினி முதலியோர் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.

சங்கிலி மண்டபத்தில் பஞ்ச பாண்டவர், திரவுபதியின் உருவச் சிலைகள் உள்ளன. மேலும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களைக் குறிக்கும் சிற்பங்கள் காணத்தகுந்தவை.

மீனாட்சியம்மன் கருவறைச் சுவர்கள் கலைக்கூடமாக அமைந்துள்ளன. 32 சிங்கங்கள், தேவ கோட்டம், உச்சிக் கொடுங்கைகள் ஆகியவை நுட்ப வேலைப்பாடுகள் அமையப் பெற்றவை.

முக்குறுணி விநாயகர் சிற்பம் ஒரே கல்லினாலான அற்புத சிற்பம்.

சுந்தரேஸ்வரர் சன்னதியின் சிற்பங்களில் சிறந்த படைப்புகள் ஊர்த்துவ தாண்டவர், காளி அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிற்பங்கள் மிகப்பெரியவை.

கம்பத்தடி மண்டப சிற்பங்கள் குறிப்பிட்டு சொல்லக் கூடிய சிறப்பு பெற்றவை. சிவபெருமானது 25 மூர்த்தங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோல சிற்பமும் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் புராண நிகழ்ச்சிகள் பல கருங்கல்லில் வடித்துக் காட்டப்பட்டுள்ளன.

கொடிக்கம்பத்தின் முன் மண்டபத்தில் அமைந்துள்ள நந்தியின் சிலை ஒரே கல்லினால் ஆனது. கொடிக்கம்பத்தை அடுத்து சுவாமி சன்னதி வாசலில் இரு புறங்களிலும் சதாசிவ மூர்த்தி, காயத்ரி தேவி ஆகிய இருவரின் அழகிய திருவுருவங்கள் உள்ளன. சைவ சமயக்குரவர் நால்வரின் திருவுருவங்கள் தூண்களில் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களில் அருகே துவார பாலகர் திருவுருவங்கள் மிகப் பெரியனவாக அமைக்கப்பட்டுள்ளன.

சுவாமி சன்னதி முன் வெள்ளியம்பத்தில் நடராஜ பெருமானின் உருவம் கல்லிலும் செம்பிலும் அமைந்துள்ளது.

ஆயிரங்கால் மண்டபம் ஒரு சிற்ப கலைக்கூடம் எனலாம். இங்கு 985 தூண்கள் உள்ளன. பல தூண்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டப வாயிலில் நரியைப் பரியாக்கிய சொக்கநாதர் உருவம் குதிரை மீது அமர்ந்திருப்பது போல் உள்ளது. இத்தூணின் மேற்புறம் ஒரு உடும்பு ஒரு கல் வளையத்தை வாயில் கவ்வி நிற்கும் சிற்பம் கலை நுட்பம் வாய்ந்தது.

மீனாட்சியம்மன் கோயிலில் உன்னதமான சிற்பங்கள் உள்ள இடம் மூன்று. அவை புதுமண்டபம், கம்பத்தடி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் என்பன.

புதுமண்டபத்தில் பிரம்மாண்டமான கலை நயம் மிக்க வியக்கத்தக்க சிற்பங்கள் நிறைய உள்ளன.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான சிற்பங்கள் நாயக்கர் காலப்பாணியிலேயே அமைந்துள்ளன.

சிற்பஅமைப்பைக் கொண்டு நாம் அவற்றின் காலத்தை அறிய முடியும். சிற்பங்களின் கலைக்கூடமாக மீனாட்சி அம்மன் கோயில் அமைந்து இருப்பதால்தான் உலகப் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

விளம்பரம்
மேலே
விளம்பரம்