காசியில் நடக்கும் பூஜைகள் போன்றே இத்தலத்திலும் ஆயிரக்கணக்கான லட்டுகளைப் பயன்படுத்தி தேர் போல் அலங்கரித்து, அதில் சுவர்ண ரத்ன கவசத்தில் அன்னை அன்னபூர்ணேஸ்வரி அருள்பாலிக்கும் பேரழகைக் கண்டு தொழ கொடுத்து வைத்திருக்க வேண்டும். தீபாவளி திருநாள் அன்று அதிகாலை அபிஷேகம், பூஜைகள் முடிந்த பின்பு லட்டு தேர் அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலை 6 மணியளவிலிருந்து மாலை 6 மணியளவில் தீபாராதனைக்குப் பின் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும். அதோடு, அந்த சமயத்தில் பல்லாயிரக் கணக்கான லட்டுகளால் அமைந்த தேரில் வலம் வருவாள் அன்னபூரணி. விஸ்வேஸ்வரருக்கும் நரசிம்மருக்கும் தனித்தனியே பிரதோஷ வேளையில் பூஜைகள் நடைபெறுகின்றன. பவுர்ணமி, வெள்ளிக் கிழமைகளில் அன்னபூர்ணேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தாலும், தீபாவளி பூஜைகள்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. 9 நாட்கள் நடைபெறும் சரத்கால நவராத்திரி மகோத்ஸவமும் இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகும்.
தல சிறப்பு:
இத்தலத்தில் நவகிரகங்களுக்கு சன்னதி கிடையாது. ஆனால் நவகிரகங்களுக்குரிய விருட்சங்களும், 12 ராசிகளுக்குரிய விருட்சங்களும் உள்ளன. ராசி, நவகிரஹங்களின் பெயர் விருட்சங்களின் பெயர் அடங்கிய அறிவிப்பு பலகை உள்ளதை வேறு எந்த தலத்திலும் காணமுடியாத ஒன்றாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
இங்கு அன்னபூர்ணேஸ்வரி மற்றும் யோக நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், நம்மை வரவேற்பது போல் முதலில் வீற்றிருப்பவர் விநாயகப் பெருமான். அடுத்து கருவறையில் வெள்ளி சிம்மாசனத்தின் மீது பத்மாசனத்தில் வீற்று பேரழகுடன் திகழ்கிறாள், அன்னபூரணி. இடக்கரத்தில் கலசமும், வலக்கரத்தில் கரண்டியும் கொண்டுள்ளான். பீடத்தின் முன் துர்க்கா பரமேஸ்வரி மற்றும் விஸ்வேஸ்வரர் ஆகியோரது ஐம்பொன் சிலாரூபங்கள் உள்ளன. கருவறை வாசல் முன் இருபுறமும் விநாயகரும், ஆதிசங்கரரும் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர். ஒரு காலத்தில் பிரம்மாவின் அகங்காரம் எல்லை தாண்டி போயிற்று. தாமே படைக்கும் கடவுள். தாமே எல்லாம் என ஈசனையே அவமதிக்கும் அளவிற்குச் சென்றுவிட்டார். ஈசன் கடுங்கோபம் கொண்டு பிரம்மாவிற்கு இருந்த ஐந்து தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எறிய முயன்றபோது அந்த கபாலம் அவர் கையில் ஒட்டிக்கொண்டது. அதனால் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார். அத்தோஷம் நிவர்த்தியாக அன்னபூரணியிடம் பிக்ஷையாக அன்னம் வாங்கினால் மட்டுமே தீரும் என அறிந்து காசிக்கு வந்து அவ்வாறே செய்தார். நாகாபரணத்தை அணிந்து, இடுப்பில் புலித்தோலுடன், ஒரு கையில் உடுக்கையும் மறுகையில் பிரம்ம கபாலமும் ஏந்தி நின்ற கோலத்தில் வெள்ளி விக்ரகமாக அன்னபூரணியிடம் பிக்ஷையாக அன்னம் பெறும் அற்புத காட்சி தீபாவளி சமயத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும்.
அன்னைக்கு வடபுறம் பக்த அனுகிரக யோக நரசிம்மர் சன்னதி உள்ளது. அவர் சன்னதிக்கு வெளியே வேதவியாசர் மற்றும் வீர விஜய ஆஞ்சநேயர் ஆகியோர் அருள்கின்றனர். தட்சிணாமூர்த்தி, வரதராஜர், பிரம்மா, யோகநரசிம்மர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் ஆகியோர் கோஷ்டத்தில் இருக்க சியாமளா, ஜெய துர்க்கா, வாராகி, வல்லப கணபதி, ஸ்ரீபாலா, முருகன், சுதர்சனர், சந்தான கோபால கிருஷ்ணர் மற்றும் ஆண்டாள் ஆகியோர் உட்பிராகாரத்தில் தரிசனம் தருகின்றனர். பொதுவாக கோயில்களில் கோஷ்டத்தில் கற்சிலைகள்தான் இருக்கும். ஆனால் இங்கே கோஷ்டத்திலும், உட்பிராகாரத்திலும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளையே நிறுவி இருப்பது வித்தியாசமான காட்சி. கோயில் வளாகத்தில் உள்ள வேதபாடசாலையில் 7 வயது முதல் 12 வயது வரையுள்ள மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வேதம் பயிற்றுவிக்கப்படுகிறது. அன்னபூர்ணேஸ்வரிக்கு தினமும் காலையும் மாலையும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. மாலை 6.30 முதல் 7 மணிவரை வேதபாடசாலை வித்தியார்த்திகளின் லலிதா அஷ்டோத்ரம், சதநாம ஸ்தோத்ரம் ஆகிய பாராயணங்கள் நடைபெறுகின்றன. இது போன்ற மந்திர உச்சாடனங்கள் நிகழ்வதால், இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை உணர முடியும். மேலும் கோவிலின் தூய்மை- சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம்.
பிரார்த்தனை
இங்கு அனைத்துவிதமான பிரச்னைகள் தீருவதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
நேர்த்திக்கடன்:
திருமணத்தடை நீங்க, எதிரிகளின் தொல்லை நீங்க, ஆரோக்கியம் கிட்ட இங்கே சங்கல்பம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தலபெருமை:
அன்னை பார்வதி பல ரூபங்கள் கொண்டு தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றார். துர்கா தேவி காளி தேவியாக அவதரித்து அசுரர்களை சம்ஹாரம் செய்து தீயசக்திகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுக்கின்றார். எல்லா ஜீவராசிகளுக்கும் உணவளித்து வறுமைப் பிணியிலிருந்து காப்பதை தன் தலையாய கடமையாக கருதும் தேவிதான் அன்னபூரணி என்ற திருநாமத்தில் காசி மாநகரில் கோயில் கொண்டு அருள் புரிந்து மக்களின் பசிப்பிணியைப் போக்கி வருகின்றனர். பார்வதி தேவியின் மற்றுமொரு அவதாரமே அன்னை அன்னபூர்ணி. காசியில் விசாலாட்சியை விட அன்னபூர்ணி தாயாருக்குத்தான் சிறப்பு அதிகம். காசியை அடுத்து பல்வேறு ஊர்களில் அன்னபூர்ணி கோயில் இருந்தாலும், கோவை மாநகரில் குடிகொண்டுள்ள அன்னபூர்ணேஸ்வரி கோயில் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு பவித்திர தலமாக விளங்குகிறது. தேவியின் வரலாற்றை முதலில் காண்போம். அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் உரிமையை அன்னை பார்வதி தேவிக்கு அளித்திருந்தார் ஈசன். பார்வதியின் பணியைச் சோதிக்க எண்ணினார், ஈசன். ஒரு நாள் கயிலையில் ஈசன், எல்லா ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டாயா? என வினவினார் எல்லாம் நல்லபடியாக முடிந்தது ஐயனே என பதிலளித்தார் தேவி. அப்போது ஈசன் தன் இடுப்பில் இருந்த விபூதிப் பெட்டியை எடுத்து திறந்து பார்த்தார். அதிலிருந்த எறும்பின் வாயில் அரிசியின் சின்னத்துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்தன இதைக் கண்ட ஈசன் ஆச்சரியத்துடன் தேவி நீங்கள் உயிர்களுக்கு உணவளிக்கும் முன்பே இந்த எறும்பைப் பிடித்து விபூதிப் பெட்டியில் அடைத்து வைத்துவிட்டேன் அதனுள் அரிசித் துகள்கள் எவ்விதம் சென்றன? என்றார். எல்லாம் விபூதியின் மகிமைதான் என்று அமைதியாகப் பதில் அளித்தார் தேவி.
தல வரலாறு:
பூலோகத்தில் காத்யாயன மகரிஷி, பார்வதிதேவி தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என தவமிருந்தார். சிவனது கண்களைப் பொத்தியதால் வந்த அபவாதம் நீங்க தவம் புரிய விரும்பிய தேவி, இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு மகளாகப் பிறந்தார். முனிவர் அவளுக்கு காத்யாயனி எனப் பெயர் சூட்டினார். காத்யாயனி அழகு நிறைந்தவளாக அன்போடும், கருணையும் கொண்டவளாக வளர்ந்தாள். ஒருசமயம் காசி மாநகரில் பஞ்சம் தலைவிரித்தாடியது. செய்தியறிந்த காத்யாயினி, தந்தையிடம் காசிக்குச் சென்று பசித்துன்பத்திலிருந்து உயிர்களைக் காப்பாற்ற விரும்புவதாகக் கூறி புறப்பட்டுச் சென்றாள். காசியை அடைந்து, பசியால் வாடும் மக்களைக் கண்ணுற்று மனம் வருந்தினாள். தன் தெய்வீக சக்தியால் ஒரு மாளிகையை உருவாக்கி அள்ள அள்ளக் குறையாத ஓர் அட்சய பாத்திரத்தையும், தங்க கரண்டியையும் படைத்து அன்னபூரணியாக காட்சி தந்தாள். பசியால் வாடிய மக்களுக்கு உணவிட்டாள். காசி மன்னன் நேரில் வந்து வணங்கி அன்னபூரணியை அரண்மனைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தேவி தன் சுயரூபத்தைக் காட்டி, நீ மக்களிடம் காட்டும் அன்பு தூய்மையானது. இனி மழை பெய்யும். பஞ்சம் நீங்கி உன் நாடு வளம் பெறும். கவலை வேண்டாம் என வாழ்த்தி தவம் மேற்கொள்ளச் செல்வதாக கூறினாள். மன்னன் அதிர்ச்சியடைந்து, தாங்கள் இங்கிருந்து சென்றாலும், தங்களின் தெய்வீக சாந்நித்யம் நிரந்தரமாக என்றென்றும் இருக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினார். உன் விருப்பம் போல் நான் அன்னபூரணியாக வீற்றிருந்து வேண்டுவோர்க்கு வேண்டியதை அளித்து அருள்புரிந்து வருவேன் என ஆசியளித்தாள். அதுபோலவே இன்றும் காசிமாநகரில் அன்னபூரணியாக இருந்து கோடிக்கணக்கானவர்களுக்கு அன்னமும் அருளாசியும் வழங்கி வருகிறாள். இவ்வளவு பெருமைமிக்க அன்னபூரணிக்கு கோவை மாநகரில் ஒரு கோயில் அமைந்துள்ளது.
தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தில் நவகிரகங்களுக்கு சன்னதி கிடையாது. ஆனால் நவகிரகங்களுக்குரிய விருட்சங்களும், 12 ராசிகளுக்குரிய விருட்சங்களும் உள்ளன. ராசி, நவகிரஹங்களின் பெயர் விருட்சங்களின் பெயர் அடங்கிய அறிவிப்பு பலகை உள்ளதை வேறு எந்த தலத்திலும் காணமுடியாத ஒன்றாகும்.
இருப்பிடம் : கோவை மாநகர் ஆர்.எஸ்.புரம் திருவேங்கட சாமி சாலை (மேற்கு)யில் அமைந்துள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு. ஆட்டோ, கால்டாக்ஸி வசதி உண்டு.