விநாயகர் கோயில் என்பதால், விநயாகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விழாக்காலத்தில், சராசரியாக இக்கோயிலில், ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானமிட்டு, பிரம்மாண்டமாக கொண்டாடுவர். இதை தவிர, மதுரை மீனாட்சியம்மனைப்போலவே, இக்கோயிலிலும் மீனாட்சியம்மன் உள்ளது. மதுரையில், திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் அதே நாளில், இக்கோயிலிலும் மிகவும் பிரம்மாண்டமாக திருக்கல்யாண உற்சவ நிகழ்வு நடைபெறும். கார்த்திகை மாத காலத்தில், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், இக்கோயிலில் தங்கியிருந்து, தினமும் இரவு பஜனையில் ஈடுபடுவார்கள்.
தல சிறப்பு:
கோயில் வளாகத்திலேயே செயற்கை வனத்தை போல, ஒரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட வேப்ப மரம் ஒன்றும் உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காட்டு விநாயகர் திருக்கோயில்,
வடவள்ளி பேருந்து நிலையம் எதிரில்,
வடவள்ளி,
கோயம்புத்தூர்– 641041.
போன்:
+91 422– 2426529, 94865 87944
பொது தகவல்:
பல ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் அமைந்திருந்த இடம் வனப்பகுதி என்றாலும், தற்போது வடவள்ளியின் மையப்பகுதியில்தான் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலை பராமரித்தல் குறித்த பிரச்னை எழுந்தபோது, இப்பகுதி வாழ் பெரியோர்கள் இணைந்து, கோயில் பெயரில் பொது நல அறக்கட்டளை துவங்கினர். இதற்கு பிறகு, கோயிலின் வளாகத்திலேயே, மீனாட்சியம்மன், முருகன், நாகதேவதைகள் என வரிசையாக சுவாமிகளை பிரதிஷ்டை செய்து வைத்தனர். இன்று இப்பகுதி வாழ் மக்கள், இந்த கோயில்தான், தங்களின் மன அமைதிக்கான ஒரே தியானப்பீடம் என்கின்றனர். இதை தவிர, இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முருகனின் வடிவமும், பழனியில் உள்ள முருகப்பெருமானின் வடிவமும் ஒரே மாதிரியாக இருப்பதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரார்த்தனை
மீனாட்சியம்மன் இங்கு மிகவும் நேர்த்தியான, தோற்றத்தில் காணப்படுவதாலும், மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்பதாலும், பெரும்பாலும் கல்யாணம் ஆக வேண்டும் என்ற பிரார்த்தனைதான் அதிகம் இருக்கும். அதேசமயம், தொழில் நகரம் கோவையில், புதிதாக தொழில்துவங்கவோரின் எண்ணிக்கையும் கனிசமாக இருக்கும். எனவே, தொழில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலும் பக்தர்கள் இக்கோயிலில் வைப்பதுண்டு.
நேர்த்திக்கடன்:
நேர்த்திக்கடனை பொறுத்த வரையில், பக்தர்களுக்கு அன்னதானம் இடுவது மட்டுமே பிரதான நேர்த்திக்கடனாக உள்ளது. மேலும், தொழில் சிறப்பாக இருந்தால், அவரவர் தொழிலுக்கு ஏற்ப, கோயிலுக்கு தேவையான பொருட்களை காணிக்கையாக வழங்குவார்கள்.
தலபெருமை:
பிரார்த்தனைகளை தவிர்த்து, தியானத்திற்கான சிறந்த இடமாக இக்கோயிலை மக்கள் விரும்புகின்றனர். ஊரின் மையத்தில் இக்கோயில் அமைந்திருந்தாலும், கோயிலின் வளாகத்திற்கும் அமைதியை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலை உள்ளது. ஒரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட வேப்ப மரம் ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு மரங்களும், அப்பகுதியை மிகவும் குளிர்ச்சியாக வைக்கிறது. மேலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய இடத்திலும், வடவள்ளியின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால், மக்கள் எளிதில் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வசதியாக உள்ளது. ஒரு சில கிராமக்கோயில்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லையே என்ற ஏக்கம் இருக்கலாம். ஆனால், இக்கோயில் வடவள்ளியின் மையப்பகுதியில் இருப்பதால், இங்கு பேருந்து வசதி வாகன வசதிக்கும் குறைச்சல் இல்லை எனலாம்.
தல வரலாறு:
இக்கோயில் பல ஆண்டு காலத்திற்கு முன், அடர்ந்த வனப்பகுதியில் இருந்தது. அப்போது, வனத்திலேயே மிகவும் பெரிய மரமாக இருந்த, இந்த அரசமரம் காணப்பட்டது. விநாயகரின் சிலையை வடிவமைத்த சிற்பி, வனத்தில் ஆடு மேய்த்தவர். அப்போதைய காலத்தில் தீண்டாமையில் சிக்கி தவித்து வந்த, அப்பகுதி மலைவாழ் சிறுவன் ஒருவன், வேறு கிராமத்தில் உள்ள விநாயகர் சிலையை பார்த்துவிட்டு வந்து, தங்கள் வனத்திலும் இதேபோன்ற சிலையை வடிவமைக்க வேண்டும் என, வனத்திலிருந்த கருங்கற்கலால் இச்சிலையை நிறுவினான் என்று கூறப்படுகிறது. இதனை அரிந்த அப்போதைய, பழந்தமிழர்கள், அரசமரத்திற்கு அடியில், விநாயகரை வைத்து தரிசனம் செய்ய துவங்கினர். பின், நாகரீக வளர்ச்சியின் காரணமாக, சுவாமியை சுற்றியும், சுற்றுச்சுவர் எழுப்பி, கோயிலாக நிறுவப்பட்டது. மேலும், அதன் வழியாக இக்கோயில் நிர்வாகமும், சமுதாயம் வித்யாசமின்றி, அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து இக்கோயில் திருப்பணியை செய்து வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கோயில் வளாகத்திலேயே செயற்கை வனத்தை போல, ஒரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட வேப்ப மரம் ஒன்றும் உள்ளது.
இருப்பிடம் : கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்திலருந்து மருதமலை செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ.,தொலைவில்,வடவள்ளி பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் உள்ளது.