கார்த்திகை மாதம் திருவண்ணாமலை தீபத்தன்று ருத்ர ஹோம பூஜை, மகா சிவராத்திரி நாளில் இறைவனுக்கும், விடைத்தவேருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், ஆனித்திருமஞ்சனம் என யாவும் சிறப்பாக நடக்கிறது. ஆனித்திருமஞ்சன தினத்தன்று மதியம் இத்தலத்திற்கு அருகிலுள்ள மாகாளியம்மன் கோயிலிற்கு சீர்வரிசை தட்டுகளுடன் மேளதாளம் முழங்க சென்று வழிபடுகின்றனர். அதன் பின் பசுபதீஸ்வரர் கோயிலில் கோ பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.
தல சிறப்பு:
நந்திக்கு சிறப்புள்ள தலம் என்பதால் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெறுவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.
கிழக்கு நோக்கிய கோயிலுக்குள் நுழைந்தால் தீபஸ்தம்பத்தில் உள்ள விநாயகர், பசுவுடன் கூடிய சிவலிங்கம், சூலாயுதமாக விளங்கும் சக்தி, வீரபத்திரர் ஆகியோர் உள்ளனர். உள்ளே நந்தியெம்பெருமான் கம்பீரமாக அருள்பாலித்து வரும் மண்டபம் அமைந்துள்ளது. களவாடப்பட்டு திரும்ப வந்து சேர்ந்தவர் இவர்தான். கருவறையில் சுயம்பு லிங்கத் திருமேனியாக மூலவர் பசுபதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்கு சிவபெருமான் தனது வாகனமான நந்தியெம்பெருமானுக்கு முக்கியத்துவம் தந்து அருள்வதை பக்த கோடிகளுக்கு உணர்த்தும் வகையில் நந்தி மண்டபம் மேல் பாகத்திலும், இறைவனின் கருவறை கீழ் பாகத்திலும் அமைந்துள்ளது. மாகாளியம்மன், விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், அங்காளம்மன், மதுரை வீரன் கோயில்களும் இப்பகுதியில் உள்ளன.
பிரார்த்தனை
திருமண தடைஏற்படுபவர்கள் இந்தக் கோயிலில் பிரதோஷ வழிபாடுகளில் கலந்து கொண்டு நல்ல வரன்கள் அமைந்து திருமணம் முடித்த பெண்கள் ஏராளம். அதனாலேயே எண்ணற்ற பெண் பக்தர்களின் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
நந்திக்கு சிறப்புள்ள தலம் என்பதால் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெறுகிறது. அன்றையதினம் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் இறைவனையும், நந்திதேவரையும் வணங்குவது மனதிற்கு அமைதியும், வாழ்க்கையில் முன்னேற்றமும் அளிக்கிறது என்கிறார்கள் பக்தர்கள். தம்பதியர் வாழ்வில் ஒற்றுமை ஓங்கி, மாங்கல்யம் வலுப்பெற ஓம் என உருவத்தை வரைந்து, அதனுள் கற்பூர தீபம் ஏற்றி அக்னி சாட்சியுடனும் இறைவன் அருளாசியுடனும் தம்பதியர் பூஜை மாலை மாற்றுதலுடன் விமரிசையாக நடைபெறுகிறது. இப்பூஜையில் கலந்துகொள்ளும் தம்பதியர் வாழ்வில் ஒற்றுமை உறுதியாக ஏற்படுவதாகவும் புத்திர பாக்கியம் கைகூடுவதாகவும் பலனடைந்தோர் கூறுகின்றனர்.
தல வரலாறு:
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் மருத மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால் மருதபுரி பட்டணம் என அழைக்கப்பட்ட ஊரின் தற்போதைய பெயர், மருதூர். அப்போது கொங்கு நாட்டை ஆண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அமைக்கப்பட்ட திருக்கோயிலில் விஸ்வேஸ்வரநாயகர் என்ற திருப்பெயருடன் சுயம்புலிங்கத் திருமேனியராக எழுந்தருளியுள்ளார் ஈசன். நானூறு ஆண்டுகளுக்கு முன் இந்த கோயிலில் இருந்த நந்தியம்பெருமானை நடுஇரவில் சில கயவர்கள் திருட முயற்சித்து பெயர்த்துச் சென்றுள்ளனர். அவர்கள் சற்று தூரம் சென்றதும் நந்தி சிலையில் இருந்து அசரீரியாய், அம்மா என்ற குரல் வெளிப்பட, அதே தருணத்தில் இக்கோயிலைச் சுற்றி இருந்தவர்கள் வளர்த்து வந்த மாடுகளும் உரத்த குரல் எழுப்பியபடி, கட்டுத்தறியை விட்டுத் திமிறத் தொடங்கின.
மாடுகளின் பெருங்குரலால் விழித்தெழுந்த ஊர்மக்கள் எவ்வளவோ முயன்றும் அவற்றைக் கட்டுப்படுத்த இயலாமல் போகவே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் முறையிட எண்ணி விரைந்தனர். கால்நடைகள் எழுப்பிய சத்தத்தால் மிரண்டுபோயிருந்த திருடர்கள், பொது மக்கள் திரண்டுவந்ததையும் கண்டு அஞ்சினர். தாங்கள் எடுத்துப்போன நந்தி சிலையை கீழே வைத்துவிட்டு ஓட்டம் பிடித்தனர். கோயில் நோக்கி வந்த மக்கள், வழியில் கிடந்த நந்தி பகவானின் திருமேனியைக் கண்டனர். சிலையை எவரோ களவாட முயற்சித்திருப்பதையும், அதையே கால்நடைகள் உணர்த்தியிருப்பதையும் புரிந்துகொண்டனர். கயவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து அச்சிலையை எடுத்து வந்து கோயிலில் வைத்தனர். அடுத்த நிமிடமே கால்நடைகளின் கதறல் நின்றது. அனைத்தும் அமைதியாகி அசைபோடத் துவங்கின. மறுநாள் ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி நந்தியெம்பெருமானுக்கு மண்டபம் கட்டினர். இத்தலத்து இறைவன், நந்திதேவர் களவு போனதை பசுக்கள், கன்றுகள், காளைகள் மூலம் உணர்த்திய நிகழ்வினால் மக்கள் மெய்சிலிர்த்தனர். அவரது மகிமையை உணர்ந்து, பசுபதீஸ்வரர் என்ற திருநாமம் சூட்டி, அன்று முதல் இன்று வரை சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:நந்திக்கு சிறப்புள்ள தலம் என்பதால் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெறுவது சிறப்பு.
இருப்பிடம் : கோவை மாவட்டம், காரமடையிலிருந்து (5 கி.மீ) மருதூர் செல்லும் வழியில் மருதூர் மாகாளியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்று தூரம் நடந்தால் இத்தலத்தை அடையலாம்.