யானை மீது தேவேந்திரன் காணப்படும் சிற்பம் அபூர்வம் எனக் கூறப்படுகிறது. தை முதல் நாள் இந்திரன் விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று மாலை கஜவாகனத்தில் இந்திரன் திருவீதி உலா வருவார். இங்குள்ள முருகனுக்கு இவருக்கு கந்தர் சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாகாளியம்மனுக்கு இங்கு ஆடி கடைசி வெள்ளியன்று எலுமிச்சங்கனியில் விளக்கேற்றி வழிபடும் கனி விளக்கு பூஜை இத்தலத்தில் பிரசித்தம். ஏராளமான பெண்கள் பங்கு பெற்று பலனடைவது சிறப்பாகும். சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. உலோகச் சிலைக்கு முன்பு கல்லால் ஆன சிறிய சனீஸ்வரன் சிலை உள்ளது. அபிஷேக ஆராதனைகள் இவருக்குத்தான்.
சனிப்பெயர்ச்சி இங்கு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்தில் பரிவார தெய்வங்களுக்குரிய விழாக்கள் பல கொண்டாடப்பட்டாலும் மூல மூர்த்தியாகிய மாரியம்மனுக்கு பங்குனி மாதம் 18 நாட்கள் நடைபெறும் உற்சவமே பெரிய திருவிழா. பங்குனி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமைக்கு முதல் நாள் சந்தனக் காப்பு செய்து அம்மனைக் குளிர்விப்பர். செவ்வாய் அதிகாலையில் கணபதி ஹோமத்தை தொடர்ந்து கொடியேற்றப்படும். பின் பூச்சாட்டு, அக்னிசாட்டு, 108 கலச தீர்த்த அபிஷேகம், திருவிளக்கு வழிபாடு, திருக்கல்யாணம், சக்திகரகம், பூவோடு, மாவிளக்கு எடுத்தல், திருத்தேர், லட்சார்ச்சனை மகா அபிஷேக ஆராதனைகளுடன் விழா நிறைவு பெறும். அக்னி சாட்டு அன்று பூசாரி அக்னி சட்டியிலிருந்து நெருப்பை தன் கைகளால் எடுத்து கீழே போட்டு அதன் மீது நின்று ஆடி பூஜை செய்வது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இத்தலத்தில் அம்மனுக்கு பிரம்ம முகூர்த்தத்தில் திருக்கல்யாணம் நடைபெறுவது சிறப்பு.
திருவீதி உலாவின் போது மாரியம்மன் சிம்ம வாகனத்திலும், மாகாளியம்மன் குதிரை வாகனத்திலும் ஒன்றாக உலா வருவர். அம்மனின் தேர் நவீன தொழில் நுட்பத்துடன் செய்யப்பட்டுள்ளது. ரயில் பெட்டியில் உள்ள சக்கரத்தைப் போல் தேர்ச்சக்கரம், அச்சு இரண்டுமே சுழலும். வழியில் உள்ள மேடு, பள்ளங்களில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கும் வண்ணம் வில்பட்டா பொருத்தப்பட்டுள்ளது. இலகுவாக தேரை திசை திருப்புவதற்கு பல் சக்கரத்துடன் கூடிய அமைப்பு உள்ளது. பங்குனி மாத திருவிழாவில் தேர் திரும்பி நிலைக்கு வந்து சன்னதியில் நின்ற பின், அம்மன் சுற்று மெரவனை வேண்டுதல் என்ற நிகழ்வு நடைபெறும். இதில் மாரியம்மனிடம் வேண்டுதல் வைக்க விரும்புபவர்கள் தேரைச் சுற்றி வருவார்கள். நூற்றியெட்டு முறை சுற்றுபவர்களும் வேண்டுதல் நிறைவேறியபின் நேர்த்திக் கடனாக சுற்றுபவர்களும் கூட உண்டு.
தல சிறப்பு:
இவ்வூர் மக்கள் பண்டிகை, நோன்பு காலங்களில் மிளகாய் அரைக்க மாட்டார்கள். அரவைமில்களில்கூட மிளகாய் அரைப்பதில்லை, உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதில்லை என்பது சிறப்புக்குரியதாகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். (செவ்வாய் மற்றும் வெள்ளி பகல் 12.30 வரை)
முன்மண்டப நுழைவுவாயிலின் இருபுறமும் துவராபாலகர்கள் காவல்புரிகின்றனர். அடுத்துள்ள மகா மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், சிம்மவாகனமும் தொடர்ந்து அர்த்த மண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன. நவகிரகம், தேவேந்திரன், முருகன், மாகாளியம்மன், நவநாகர், லோக சனீஸ்வரர், விநாயகர் ஆகியோருக்கு தனிச் சன்னதிகள் உள்ளன. பழநி முருகனைப் போன்றே தண்டத்தை தாங்கி நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிய சன்னதியில் முருகன் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ளது துர்க்கை சன்னதி. மாகாளியம்மன் என்றே இவள் அழைக்கப்படுகிறாள்.
நவநாகர் சன்னதியில் ஆதிசேஷன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவரைக் சுற்றி வாசுகி, அனந்தன், குளிகன், கார்க்கோடகன், தக்கன், பதுமன், சங்கன் மற்றும் பாலன் ஆகிய அஷ்ட நாகங்கள் அருள்புரிகின்றனர். அடுத்துள்ளது லோக சனீஸ்வரர் சன்னதி. ஏழரை அடி உயரம் கொண்ட அற்புதமான விக்ரகம், பின்னிரு கைகளில் அம்பும் வில்லும் இருக்க, முன்னிரு கைகளில் கத்தியும் அபயஹஸ்தமும் கொண்டு நின்ற கோலத்தில் எழிலாக அருள்புரிகிறார். எதிரே அவரது வாகனமாகிய காகம் உள்ளது.
பிரார்த்தனை
ஆறு நாட்கள் நோன்பிருந்து இங்குள்ள முருகனை வேண்டி குழந்தை பாக்யம் பெற்ற தம்பதியினர் ஏராளம்.
நேர்த்திக்கடன்:
நவநாகர் சன்னதியில் நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகார பூஜை மேற்கொண்டு பலன்பெறுகின்றனர்.
தலபெருமை:
வடக்கு நோக்கிய கோயிலிற்கு முன்பு கோபுரத்துடன் கூடிய குறிஞ்சி மண்டபம் உள்ளது. இரவு நேரங்களில் இம்மண்டபத்தில் அம்மன் அமர்ந்து காவல் புரிவதாக ஐதிகம். அடுத்து உயர்ந்த வேலாயுதம். பொதுவாக அம்மன் கோயில்களில் சூலாயுதம்தான் இருக்கும். ஆனால் இங்கு வித்தியாசமாக லோயுதம் உள்ளது. நடை சாத்தியிருக்கும் சமயங்களில் வெளியூர் பக்தர்கள் இந்த வேலாயுதத்தின் முன் கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் செல்கிறார்கள். அதனால் பயணம் பாதுகாப்பாக அமையும் என நம்புகின்றனர்.
அன்னை மாரியம்மன் பின்னிரு கரங்களில் நாகம், உடுக்கை ஏந்தியும், முன்னிரு கரங்களில் சூலம் மற்றும் அட்சய பாத்திரத்தை தாங்கியும் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். கருணையே வடிவான அம்பிகை. இவளை வழிபடுவோர் வாழ்வில் இன்னல்கள் எல்லாம் தீரும் என்பது நிச்சயம். சனீஸ்வரருக்கு பக்தர்கள் தங்கள் கைகளால் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அம்மனுக்கு கோபம் வந்து விடும் என்பதற்காக இவ்வூர் மக்கள் பண்டிகை, நோன்பு காலங்களில் மிளகாய் அரைக்க மாட்டார்கள். அரவைமில்களில்கூட மிளகாய் அரைப்பதில்லை, உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதில்லை. ஊரை விட்டு வெளியே எங்கும் செல்ல மாட்டார்கள்.
தல வரலாறு:
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏராளமான நீர்நிலைகளுடன் விவசாயபூமியாக இருந்தது கோவை மாநகரம். அதன் கிழக்கே இருந்த அம்மன் குளம் என்ற நீர்நிலையையொட்டி புலிகள் வாசம் செய்ததால் அப்பகுதி புலியகுளம் என அழைக்கப்பட்டது. இன்றும் புலியும், குளமும் இல்லாவிட்டாலும் ஊரின் பெயர் மட்டும் புலியகுளம் என்றே நிலைத்துவிட்டது. இவ்வூருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். புலியகுளத்தில் கூத்தப்பண்ணாடி என்ற ஒரு வணிகர் இருந்தார். ஊரில் விளையும் பொருட்களை மொத்தமாக வாங்கி, மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்து வந்தார். ஒருமுறை வியாபாரம் முடிந்த ஊர் திரும்பும் வழியில் யாரோ தன்னை அழைப்பது போல் உணர்ந்தார். திரும்பிப் பார்த்தார். யாரும் தென்படாததால் பயணத்தைத் தொடர்ந்தார்.
சற்று தொலைவு செல்வதற்குள், நான் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறேன். நீ கவனிக்காமல் சென்றுகொண்டே இருக்கிறாயே? எனச் சற்றுக் கடுமையான குரல் ஒலித்தது. உடனே வண்டியை நிறுத்தி, இறங்கி குரல் வந்த திசையை நோக்கி நடந்தார். புதர் மண்டிய ஓரிடத்திலிருந்தே அக்குரல் ஒலிப்பதை உணர்ந்தார். அப்போது நான்தான் மாரியம்மன். காலமாக இங்கேயே இருக்கிறேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் வழிபடுங்கள் என ஆசரீரி ஒலித்தது. உடனடியாக அந்த இடத்தில் இருந்த புதரை நீக்கிப் பார்த்தார். அங்கே அம்மன் சிலை போன்ற அமைப்பில் கல் ஒன்று தென்பட்டது. அதுவே தேவியின் வடிவாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து, அக்கல்லை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். ஆனால், மாடுகள் நகரமறுத்தன. உடனே அம்மனை மனதில் நிறுத்தி, தாயே உனது கட்டளையை நிச்சயம் நிறைவேற்றுவேன் தற்போது என் பயணம் தடையின்றித் தொடர அருளவேண்டும் என வேண்டினார். அடுத்தநொடி மாடுகள் நடக்கத் தொடங்க, வண்டி நகரத் துவங்கியது. ஊரை வந்தடைந்ததும், பெரியவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார். எல்லோருமாகச் சேர்ந்து ஊருக்குப் பொதுவான ஓர் இடத்தில் சிறிய மேடை அமைத்து சிலையை பிரதிஷ்டை செய்தனர்.
சிறியதாக ஓலைக்குடில் அமைக்கப்பட்டு மாரியம்மனுக்கு தினசரி பூஜைகள் நடந்து வந்தன. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாள், வியாபாரியின் கனவில் தோன்றிய மாரியம்மன் இந்த இடம் எனக்கு உகந்ததாக இல்லை. என்னை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என்று கூறினாள். அதன்படி ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்து, தற்போது கோயில் இருக்கும் இடத்தில் ஓடுகள் வேயப்பட்ட கோயில் அமைத்து, அதில் சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். கிராமம் நகரமாக வளரத்தொடங்கி குடியிருப்புகள் பெருகின. பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1926-ம் ஆண்டு அம்மனுக்குப் பின்புறம் ஐந்தரை அடி உயரத்திலான சிலை வடிவம் புதிதாகச் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கருவறை, அர்த்த மண்டபம் மகா மண்டபம் முன் மண்டபம் என ஒவ்வொரு திருப்பணியாக நிறைவேற்றப்பட்டு இன்று சிறப்பான கோயில்களுள் ஒன்றாக விளங்குகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இவ்வூர் மக்கள் பண்டிகை, நோன்பு காலங்களில் மிளகாய் அரைக்க மாட்டார்கள். அரவைமில்களில்கூட மிளகாய் அரைப்பதில்லை, உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதில்லை என்பது சிறப்புக்குரியதாகும்.
இருப்பிடம் : கோவை, சுங்கத்திலிருந்து புலியகுளம் வரும் சாலையில் கோயில் உள்ளது. ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள அரசு மருத்துவமனை பஸ்நிலையத்திலிருந்து தடம் எண் 5,7, எஸ் 2, எஸ் 4 பேருந்து மூலம் கோயிலை அடையலாம்.