Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: தேனீஸ்வரர்
  உற்சவர்: பிரதோஷமூர்த்தி
  அம்மன்/தாயார்: சிவகாம சுந்தரி
  தல விருட்சம்: வன்னி மரம்
  ஆகமம்/பூஜை : இரு கால பூஜைகள்
  புராண பெயர்: சதுர்வேத மங்கலம்
  ஊர்: வெள்ளலூர்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தேய்பிறை அஷ்டமியன்று மாலை 4.30 மணியளவில் 108 வலம்புரி சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து கால பைரவ உற்சவ மூர்த்தி நாய் வாகனத்தில் உட்பிரகார புறப்பாடு நடைபெறுவது இத்தலத்தின் முக்கிய நிகழ்வாகும். இப்பூஜையில் கலந்து கொண்டு வேண்டினால், சத்ரு தோஷம், திருமணதடை, குழந்தையின்மை போன்றவை நிவர்த்தி ஆவதாக பலன்பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலில் காமிக ஆகமப்படி காலை 8.00 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இரு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இத்தலத்தில் வீற்றிருக்கும் அனைத்து தெய்வங்களுக்கு உரிய விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்தரி ஆகிய விழாக்கள் முக்கிய பெருவிழாக்கள் ஆகும். பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  சித்திரை முதல் நாள் அன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி ஒளிவீசும் காட்சி கண்களை விட்டு அகலாத காட்சியாகும். இதனால் இதனை பாஸ்கர க்ஷேத்திரம் எனவும் அழைக்கின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்.  
   
போன்:
   
  +91 98655 33418 
    
 பொது தகவல்:
     
  5 பிரகாரங்களை கொண்டு சோழர்கால சிற்ப கலை நயத்துடன் விளங்கியது. 1310 ம் வருடம் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் கபூர் படையெடுப்பின் போது கொள்ளையடிக்கப்பட்டதுடன் விக்ரகங்கள் நிர்மூலமாக்கப்பட்டு இக்கோயிலும் சிதைக்கப்பட்டது. பூஜைகள் மட்டும் நடந்த நிலையில் கோயிலை மேற்கொண்டு புதுப்பிக்க முடியவில்லை. முறையாக திருவிழாக்களும் நடைபெறவில்லை. பல வருடங்கள் இவ்வாறாகவே கழிந்தன. கோயில் நல்ல நிலையில் இருந்து பூஜைகளும், திருவிழாக்களும் முறைப்படி நடந்தால் கோயிலைச் சார்ந்த ஊரும் மக்களும் வளமுடன் செழிப்பாக இருப்பார்கள் என்பது ஐதீகம். கோயில் நிலைகண்ட ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி கோயிலைச் சீரமைத்து திருப்பணி மேற்கொள்ள முடிவெடுத்தனர். அதற்கென ஒரு குழுவையும் அமைத்தனர். திருச்சுற்று பணிக்களுக்காக தோண்டப்பட்ட பொழுது இரு கல்வெட்டுகள் கிடைத்தன. ஒரு கல்லில் வட்டெழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டும் மற்றொரு கல்லில் தமிழ் கல்வெட்டும் காணப்பட்டன. இவை முறையே 9 மற்றும் 10ம் நூற்றாண்டை சார்ந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வெட்டில் உள்ள செய்திகள்: இச் சிவன்கோயிலில் நந்தா விளக்கு தொடர்ந்து எரிவதற்காகவும், 9 நாட்கள் திருவிழா நடைபெறவும் ஊரன் முருகன் 10 கழன்சு பொற்காசுகளை வழங்கி உலகும், சந்திரன் சூரியன் உள்ளவரை தொடர்ந்து இவை நடைபெற வேண்டும் என கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருந்தது. மற்றொரு கல்வெட்டில் இப்பணிக்காக பழங்காசு சிலவற்றுடன் பன்னிரு கழஞ்சு செம் பொன்னை சக்தி அரயன் என்பவர் அளித்ததாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட கல்வெட்டுகள் மூலம் இக்கோயில் 9 ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது புலனாகிறது.

விநாயகர் கோயில் கட்டுவதற்கென பூமியைத்தோண்டும் போது இடுப்போடு கீழ்பாகம் உடைந்த நிலையில் தட்சிணாமூர்த்தியும், மயில் மீது அமர்ந்த நிலையில் 12 கரங்களைக் கொண்ட சண்முகர் சிலை கழுத்துப் பாகம் சிதைந்த நிலையிலும் கிடைத்துள்ளன. இத்துடன் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. இதன்மூலம் படையெடுப்பின் போது சிதைக்கப்பட்டவை என்பது ஊர்ஜிதமாகின்றது.

1843ம் ஆண்டில் திருப்பணி செய்தபோது பூமிக்கடியில் ஒரு விநாயகர் சிலை கிடைத்துள்ளது. இது உளி கொண்டு செதுக்காமல் வெங்க கல்லால் தேய்த்து உருவம் கொண்டுவரப்பட்ட சிலை. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இச்சிலையை ஆராய்ந்து, இச்சிலை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், இதுபோன்ற தொரு விநாயகர் சிலை எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சிலைபோன்றே நந்தியம்பெருமான் மற்றும் பஞ்ச லிங்கேசர் சிலைகள் உளிபடாமல் கற்களினாலேயே தேய்த்து உருவம் கொண்டு வரப்பட்டவையாகும். பஞ்சலிங்கேசர் பாணத்தில் 5 கோடுகள் இருப்பதால் பஞ்ச லிங்கேசர் என பெயர் பெற்றர்.

இத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் நிறுவப்பட்ட தோரண வாயில் தற்போதும் அதே நிலையில் உள்ளது. பொதுவாக ராஜகோபுரம் 3,5 அல்லது ஏழு நிலைகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால் இங்குள்ள ராஜகோபுரம் மற்ற கோபுரங்களிலிருந்து மாறுபட்டு உள்ளது. முதல் நிலையில் நாகபரணத்துடன் கூடிய சிவலிங்கமும், லிங்கத்திற்கு முன் சிவ பெருமானின் நடன கோலமும் இடம் பெற்றுள்ளன. பக்தர் ஒருவரின் கனவில் இக்கோலத்தில் தோன்றி காட்சி கொடுத்ததால் அந்த பக்தரே இச்சிலையை உருவாக்கி உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். அதற்கு மேல் நான்கு புறமும் சிறிய கோபுரங்களை அமைத்துள்ளனர்.

கோயில் உள்ளே நுழைந்தவுடன் சுற்று சுவற்றை ஒட்டி இடதுபுறம் மேற்கு நோக்கிய நிலையில் மிகச் சிறிய சன்னிதியில் ஜோதிலிங்கேசர் வீற்றுள்ளார். இவரை வணங்கிய பின் தான் உள்ளே செல்ல முடியும். ராமலிங்க அடிகளார் வழிபட்ட லிங்கமாகும். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் வீற்றிருக்க சூரியன், ஜோதிலிங்கேசர், 63 நாயன்மார்கள். அகஸ்தியர், சித்தி விநாயகர், பஞ்ச லிங்கேசர், பாலமுருகன், சண்டிகேஸ்வரர், சந்திரன், காலபைரவர் சனீஸ்வரர் மற்றும் நவகிரஹம் ஆகியோர் தனிச் சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

1843ம் வருடம், துன்மதி ஆண்டில் ஆனி 28ம் நாளில் 63 நாயன்மார்கள் மண்டபம், சிலை பிரதிஷ்டைக்காக ரூ 2,500/- பெறுமானமுள்ள பூமியை கோயிலுக்கு தானமாக வழங்கியதற்கான கல்வெட்டு மற்றும் 1874 வருடம் சித்தார்த்தி வைகாசி மாதம் 30ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தற்கான கல்வெட்டும் கோயிலில் உள்ளன.

ஆதாரம்:

1. வெள்ளலூர் கல்வெட்டுக்கள் தொல்பொருள் ஆய்வுத்துறை சென்னை.

2. சோழன் பூர்வ பட்டயம் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  சத்ரு தோஷம், திருமணதடை, குழந்தையின்மை ராகுகேது தோஷம் போன்றவற்றிற்கு இத்தலம் முக்கியமானதால் பெரும்பாலா பக்தர்கள் வருகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சூரியன் வழிபாடு செய்வதால் திருமண தோஷம் நிவர்த்தியாகி இறையருளால் நடைபெறுகிறது. விநாயகருடன் வன்னிமரம் இருப்பதால் நவக்கிரக தோஷம் நிவர்த்தி ஆகிறது. மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் ஞாபக சக்தி கிடைக்கிறது. பைரவர் பூஜை செய்யப்படுவதால், தொழில், மற்றும் புத்திர சந்தானம் திருஷ்டி, வியாதிகள் நிவர்த்தி ஆகிறது. 
    
 தலபெருமை:
     
  அடுத்ததாக கொடிக்கம்பமும், நந்தி மண்டபமும் உள்ளன. எட்டுத் தூண்களைக் கொண்ட மகா மண்டபத்தில் தென்பகுதியில் விநாயகர் சன்னிதி உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவர் சுயம்பு தேனீஸ்வரர் நாகாபரணத்துடன் எழுந்தருளி உள்ளார். இக்கருவறைக்கு வடக்கு பக்கம் அன்னை சிவகாம சுந்தரி நின்ற கோலத்தில் அருள்புரிகின்றார். ஒரே கோபுரத்தின் கீழ் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருப்பது அபூர்வம். இவ்வாறு சேர்ந்து இருந்தால் மட்டுமே வலம் வரலாம் என்பது ஐதீகம். சிவகாம சுந்தரியின் சன்னிதி முன்பாக சங்கர நாராயணன் திருமேனி உள்ளது. தேவலோக பசுவான காமதேனு வந்து வழிபட்ட பெருமைக்குரியதால் தேனீசர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் ஒரு காம்பில் 5 இலைகள் கொண்ட மந்தாரை மரத்தில் பூக்கும் இளம் சிவப்பு வர்ணத்தில் உள்ள பூக்களை பூஜைக்கு பயன்படுத்தி துதித்தால் ராகு கேது தோஷத்தின் தாக்கம் குறைவதாக நம்புகின்றனர். மேலும் இந்த மரப்பொந்தில் இருந்து ஒரு நாகம் வந்து கோமுகம் வழியாக கருவறைக்குச் சென்று ஈசனை வழிபட்டு திரும்புகின்றன. இத்தலத்தின் தீர்த்தமாக முன்பு காஞ்சிமா நதி (நொய்யல்) நீர் இருந்தது. தற்போது நதி வரண்டு மாசுப்பட்டுப் போனதால் ஜலமூலையில் உள்ள சிறிய கிணற்று நீரைத் தீர்த்தமாக பயன்படுத்தப் படுகிறது. ஸ்தல விருட்சம் வன்னி மரம். இங்கு ஆண் பெண் என இருமரங்கள் இருப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே சிறந்து விளங்குவதால் இத்தலம் ஆற்றல் மிகுந்த சாநித்யம் வாய்ந்த தலமாக விளங்குகிறது. மேலும் புராதனமான இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை உணரமுடியும். சனி ராகு கேது தோஷ பரிகாரத்திற்கு திருநள்ளாறு தலத்திற்கு இணையான தலமாக விளங்குவதாகத் தெரிவிக்கின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது.

கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில். வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம். இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். ரோமான்யர் காலத்து காசுகள், மோதிரங்கள் இரண்டு மணிகள், தங்க தாம்பாளம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரோமான்யர்கள் இங்கு வந்து வாணிபம் செய்தது புலனாகிறது. காஞ்சி மாநதி எனும் நொய்யல் நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் அன்னதான புரி, சிவபுரி, வேளிர் ஊர், சர்க்கார் அக்ரஹாரம், சதுர்வேத மங்கலம் வெள்ளலூர் என பலபெயர்களால் வழங்கப்பட்டதாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள வெள்ளலூர் எனும் பெயரே நிலைத்து விட்டது. கரிகாற் சோழன் ஆட்சி செய்த காலத்தில் அரசிளங்குமரன் தெருவில் தேரை ஓட்டிச் சென்ற போது ஒரு பசுகன்றின் மீது தேர் சக்கரம் ஏறி அக்கன்று, அவ்விடத்திலேயே மாண்டது. அதற்குத் தண்டனையாக தன் மகனைத் தேர் ஓட்டிக் கொன்றான். இக் கொலையால் அரசனுக்கு விருமத்தி தோஷம் பிடித்தது. அதைப் போக்குவதற்கு காமாக்ஷி என்ற குறித்தியிடம் குறி கேட்க, கொங்கு நாட்டில் மக்களைக் குடியேற்றி, கோயில்களைக் கட்டி திருப்பணி செய்தால் விருமத்தி தோஷம் தொலையும் எனக் கூறினாள். அதன்படி கரிகாற் சோழன் தன் பரிவாரங்களான சேரன் சமய முதலி, கத்துரி ரங்கப்பசெட்டி ஆகியோருடன் கொங்கு நாட்டிற்குப் புறப்பட்டான். கரூரில் தொடங்கி ஒவ்வொரு சிவன்கோயில்களையும் ஊர்களையும் தோற்றுவித்து வெள்ளலூருக்கு வந்து சேர்ந்தனர். தன் பரிவாரங்களுடன் வெள்ளை என்கிற இருளன் பதிவனத்திற்குச் சென்றனர். அங்கு கோயில் கட்டுவதற்காக வனத்தை அழித்து சுத்தம் செய்யும் போது சுயம்புவாக ஒரு சிவலிங்கத் திருமேனியைக் கண்டனர். சோழன் கொங்கு நாட்டிற்கு வந்து போது அப்பகுதி அடர்ந்த வனமாக இருந்தது. ஆங்காங்கு இருளர்கள் பதிகளை கட்டிக்கொண்டு வேட்டையாடி பிழைத்து குல தெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபட்டுவந்தனர். அவ்வனத்தில் குடி இருந்த இருளன் வெள்ளையன் பெயரில் வெள்ளலூர் எனும் ஊரையும் உருவாக்கி பல்வேறு குலத்தவர்களையும் குடி அமர்த்தினார். கோயிலையும் கட்டி முடித்தனர். கோயிலுக்கு அருகே குளம், கோட்டை மற்றும் பேட்டை ஆகியவற்றை உருவாக்கினார். ஊரை நிர்வாகம் செய்ய அதிகாரிகளையும் நியமித்தார். உத்தம பண்டிதரை வரவழைத்து தேனீஸ்வர முடையாருக்கு அஷ்ட மந்திர பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. கோயில் பூஜைகள் திருவிழாக்கள் தங்கு தடையின்றி நடந்து வர கோயிலுக்கு மானியமாக வயல்களையும் பூமிகளையும் தானமாக அளித்து ஓலைப்பட்டயம் வழங்கினார். கோயில் பூஜைகளும் திருவிழாக்களும் தங்கு தடையின்றி நடந்து வரலாயிற்று. கொங்கு நாட்டில் கரிகாற்சோழன் கரூர் முதல் முட்டம் வரை புகழ்பெற்ற 36 சிவன் கோயில்களை உருவாக்கினான். அவற்றுள் இதுவும் ஒன்று. தேனீஸ்வரர் கோயில்.

படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்திரை முதல் நாள் அன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி ஒளிவீசும் காட்சி கண்களை விட்டு அகலாத காட்சியாகும். இதனால் இதனை பாஸ்கர க்ஷேத்திரம் எனவும் அழைக்கின்றனர்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar