பதிவு செய்த நாள்
17
ஏப்
2012
10:04
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மூலை அனுமார் கோவிலில் வரும் 20ம் தேதி சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு, கோவில் நிர்வாகத்தினர், அமாவாசை வழிபாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். தஞ்சாவூரில் மேலவீதியில் மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இங்கு வாஸ்து தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் ஒவ்வொரு அமாவாசைதோறும் மூலை அனுமாரை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். வரும் 20ம் தேதி சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு காலை 7.30 மணிக்கு லட்ச ராமநாம ஜெபத்துடன் துவங்குகிறது. காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் தேங்காய் துருவல் அபிஷேகமும், மாலை ஆறு மணிக்கு வெற்றிலை மாலைகளால் ஆனல சிறப்பு அலங்கார சேவையும், 6.30 மணிக்கு கிரிவலம் போல புகழ்பெற்ற அல்லல்போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்கள் மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது. மேஷ ராசிக்காரர்கள் சித்திரை மாத அமாவாசையன்று, மூலை அனுமாரை தரிசனம் செய்வது சிறப்புக்குரியது ஆகும். நந்தன வருடத்தில் முதல் அமாவாசை வெள்ளிக்கிழமையன்று வருவதால் மேலும் நற்பயன்களை தரும். எனவே, சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு பயன்பெறலாம் என, கோவில் நிர்வாகத்தினர், அமாவாசை வழிபாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.சிறப்பு வழிபாடு, விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், கோவில் மேற்பார்வையாளர்கள் மற்றும் அமாவாசை வழிபாட்டு, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.