பதிவு செய்த நாள்
17
ஏப்
2012
10:04
சத்தியமங்கலம் : பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு குண்டம் விழா நேற்று மறுபூஜையுடன் நிறைவு பெற்றது. ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் பங்குனி குண்டம் விழா மிகவும் பிரபலம். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா, 10ம் தேதி அதிகாலை, 3.45 மணிக்கு கோவில் தலைமை பூசாரி சேகர் தீ மிதித்து துவக்கி வைத்தார். இவரையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். இதையடுத்து, 11ம் தேதி புதன்கிழமை புஷ்பரதம் நிகழ்ச்சியும், 12ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் இதுதவிர திருவிளக்கு பூஜை மற்றும் தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பண்ணாரி மாரியம்மனை தரிசனம் செய்தனர். நடப்பாண்டு குண்டம் விழாவில் நிறைவு நிகழ்ச்சியான மறுபூஜை விழா நேற்று நடந்தது. அதிகாலை, 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார நிகழ்ச்சிகள் நடந்தது. மறுபூஜை விழாவிற்கும் சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை பண்ணாரி மாரியம்மன் கோவில் துணை ஆணையர் நடராஜன் தலைமையில் பரம்பரை அறங்காவலர்கள் புரு÷ஷாத்தம்மன், ராஜப்பா, ராஜாமணிதங்கவேல், வீரப்ப கவுடர், ராஜேந்திரன், புஷ்பலதா கோதண்டராமன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.