பதிவு செய்த நாள்
18
ஏப்
2012
11:04
மோகனூர்: ரெட்டையாம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மோகனூர் அடுத்த வளையப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ரெட்டையாம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 15ம் தேதி இரவு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைப்பதுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு, பூக்குழி பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவில் முன், பொங்கல் வைத்து ஸ்வாமியை வழிபட்டனர். காலை 9 மணிக்கு அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். அன்று மாலை 4 மணிக்கு, ஊர்கிணற்றில் புனித நீராடிய பக்தர்கள், 700க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து கோவில் முன், குண்டத்தில் இறங்கி ஸ்வாமிக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கிடா வெட்டும், மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 8 மணிக்கு கம்பம் பிடிங்கி கிணற்றில் விடும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.