நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு சிறிய வாகனங்களின் பயணம் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2019 12:11
சபரிமலை: போலீஸ் கட்டுப்பாட்டுடன் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு சிறிய வாகனங்களில் பயணம் தொடங்கியது. ஒரு மணி நேரத்தில் நிலக்கல் திரும்ப வேண்டும் என்று போலீசார் வலியுறுத்துகின்றனர்.
பெருமழையில் பம்பை உருக்குலைந்த பின்னர் கடந்த சீசனில் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் கடந்த சில மாத பூஜைகளில் சிறிய வாகனங்கள் மட்டும் பம்பை வந்து பக்தர்களை இறக்கி செல்ல அனுமதிக்கப்பட்டது. மண்டல சீசனில் மீண்டும் அது தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 12 இருக்கைகள் வரை உள்ள வாகனங்கள் பம்பை சென்று பக்தர்களை இறக்கி திரும்பலாம் என்று கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன் படி நிலக்கல்லில் இருந்து சிறிய வாகனங்கள் பம்பை வர தொடங்கியது. ஒரு மணி நேரத்தில் திரும்பி நிலக்கல் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பப்படுகின்றனர். டிரைவர் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுப்பப்படுகிறது. பக்தர் ஓட்டி வரும் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு கார்த்திகை தொடக்கத்தில் தினமும் ஆயிரத்துக்கும் குறைவான வாகனங்கள் வந்தது. ஆனால் தற்போது ஐந்தாயிரம் வாகனங்கள் வருகிறது. இதனால் டிராபிக் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று போலீசார் அச்சம் தெரிவித்துள்ளனர். 2015 –-16-ல் 20 லட்சம், 2016–-17 ல் 26 லட்சம், 2017-–18 ல் 40 லட்சம் வாகனங்கள் வந்ததாக கணக்கிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இது 13 லட்சமாக குறைந்ததால், இந்த ஆண்டு அதிக வாகனங்கள் வரும் என்று போலீசார் கணக்கிட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.