பதிவு செய்த நாள்
25
நவ
2019
11:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, குபேர லிங்கத்தை வழிபட்டனர்.
திருவண்ணாமலையில், பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விசஷே நாட்களில் கிரிவலம் சென்று, லட்சக்கணக்கான பக்தர்கள், அருணாசலேஸ்வரரை வழிபடுகின்றனர். சில ஆண்டுகளாக, குபேர கிரிவலம் என்பது, புகழ் பெற்று வருகிறது. கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில், ஏழாவதாக உள்ளது குபேரலிங்கம். கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதோஷம், சிவராத்திரி நாளில், குபேரன் கிரிவலம் செல்வதாகவும், குபேரன் கிரிவலம் செல்லும் நாளில், கிரிவலம் சென்றால், செல்வம் பெருகும் என்பது, பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
இதனால், சில ஆண்டுகளாக, குபேர கிரிவலம் நாளில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று, வழிபடுகின்றனர். நேற்று மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை, பிரதோஷ காலத்தில் குபேர லிங்கத்திற்கு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள், குபேரலிங்கத்தை தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் தீபம் ஏற்றியும், பெண்கள், தம் வீட்டு முன் தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.