பதிவு செய்த நாள்
26
நவ
2019
10:11
திண்டுக்கல்: பழநியில், கி.பி., 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஓலைச்சுவடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள வேலுாரில், 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஓலைச்சுவடி கட்டு, சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. சிதம்பரம் பண்டராம் என்பவர் எழுதிய, அருணாச்சல புராணத்தின் ஓலைச்சுவடி பிரதி என, தெரிந்தது. சைவ எல்லப்ப நாவலரால், கி.பி., 16ம் நுாற்றாண்டில், அருணாச்சல புராணம் இயற்றப்பட்டது. அதன் மூலமும், உரையும் உடைய, ஓலைச்சுவடி பிரதி தான், இது. மூன்று பிரதிகள், வடமொழியில் இருந்ததை, தமிழில் எழுதியதாக, சிதம்பரம் குறிப்பிடுகிறார். சிவபுராணத்தில் ருத்திர சங்கிதை மற்றும் லிங்கபுராணத்திலும் இருந்த கருத்துகளை எடுத்து இயற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் நுால் எழுதுவோருக்கும், அதைப் படியெடுப்போருக்கும், ஆட்சியாளர்கள் வசதியும், உதவியும் செய்து கொடுத்திருப்பது, இந்த ஓலைச்சுவடி மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு, நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.