பதிவு செய்த நாள்
26
நவ
2019
12:11
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி வனப்பகுதி ஓடைகளில் நீர்வரத்து, மழை எச்சரிக்கையால் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை – விருதுநகர் மாவட்டங்களின் எல்லையில், சதுரகிரி மலையில், சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மலைப்பாதைபிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம், இக்கோவிலுக்கு செல்ல, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழிபாடு முடிந்து பெரும்பாலான பக்தர்கள், அடிவாரம் திரும்பினர். அன்று இரவு, பலத்த மழை பெய்தது. மலைப்பாதையில் வழுக்குப்பாறை, மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை ஓடைகளில், நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், தீயணைப்பு மற்றும் வனத் துறையினர், கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று காலை, சுவாமி தரிசனம் செய்ய, பல்வேறு நகரங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள், தாணிப்பாறையில் குவிந்தனர்.
ஏமாற்றம்: ஓடைகளில் நீர்வரத்து இருந்ததால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.இதனிடையே, வானிலை மையம் சார்பில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், அமாவாசையான இன்றும், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கோவில் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.