பதிவு செய்த நாள்
30
நவ
2019
03:11
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த திருமுருகன் பூண்டியில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கோவில் வளாகத்தில் அன்னதான உண்டியல் 2 உள்பட 4 உண்டியல்கள் உள்ளன. சுற்றி 15 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. கோவிலில் உள்பகுதியில் இரண்டு உண்டியல்கள் உள்ளன. கோவிலில் மூக்கன், 55, என்பவர் இரவுநேர காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் பூஜை முடிந்து கோவிலை பூட்டி சென்றனர்.
நள்ளிரவு மர்ம நபர்கள் முகத்தில் கருப்பு துணி கட்டி கொண்டு கோயிலின் பின் பகுதி சுற்றுச்சுவரில் கடப்பாரையால் துளையிட்டு, உள்ளே நுழைந்துள்ளனர். கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராவை பார்த்த மர்ம நபர்கள் அதனை துணியால் மூடி உள்ளனர். தொடர்ந்து, அங்குள்ள வைக்கப்பட்டுள்ள இரண்டு அன்னதான உண்டியலை கடப்பாறையால் உடைத்துள்ளனர். உள்ளே சத்தம் கேட்டு, சந்தேகமடைந்த காவலாளி மூக்கன், திருமுருகன் பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருப்பூர் வடக்கு உதவி போலீஸ் கமிஷனர் வெற்றி வேந்தனிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் மற்றும் இரவு நேர போலீசார் துப்பாக்கியுடன் கோவிலுக்குள் நுழைந்துள்ளனர். போலீசார் ஓடி வரும் காலடி சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட மர்ம நபர்கள் கோவிலில் இருந்து தப்பி தலைமறைவானார். சம்பவம் குறித்து, திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவில் சுற்று சுவர் கருங்கல்லால் கட்டப்பட்டு உள்ளது. மர்ம நபர் உடைக்கப்பட்ட இடத்தில் மட்டும் நாலு அடி உயரத்தில் கருங்களும், அதற்குமேல் செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. பல நாட்கள் நோட்டமிட்டு, சுவற்றில் துளை இட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 35 வயது மதிக்கத்தக்க ஒருவரே வந்துள்ளார். அவர் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்ட இரண்டு கேமராக்களில் உருவம் பதிவாகி உள்ளது. விரைவில் பிடித்து விடுவதாக போலீசார் தெரிவித்தனர். இது கோவிலில் நடந்த இரண்டாவது கொள்ளை முயற்சியாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கயிற்றின் மூலம் சுற்று சுவற்றில் ஏறி உள்ளே சென்ற மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.